இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்.  இதனை கொழும்பிலும் யாழ்பாணத்திலும் நடந்த இருவேறு நிகழ்ச்சிகளில், செல்லினத்தின் தோற்றுநர், முத்து நெடுமாறன் அறிவித்தார்.

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் பிப்பிரவரி 26ஆம் நாள் கொழும்பிலும், வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 27ஆம் நாள் யாழ்ப்பாணத்திலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மின்னுட்பக் கருவிகளில் தமிழின் பயன்பாடு குறித்த இந்நிகழ்ச்சிகளில், ஊடகவியலாளர்கள், நுட்பவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுப் பயனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் நடந்த கலந்துரையாடல்

தமிழ் உள்ளிடுமுறைகள் ஒருங்கிணைக்கப் பட்டப்பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எழுத்துகளின் வடிவ அமைப்பும் அவற்றின் தன்மைகளும், கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தப்படும் செயலிகளும் அவற்றின் தமிழ்ப் பயன்பாடும் முதலிய தலைப்புகளில் முத்து நெடுமாறனின் படைப்பு அமைந்திருந்தது.

கலந்துரையாடலின் போது, பல கேள்விகள் எழுப்பப்பட்டன அவற்றுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. பேசப்பட்டக் கருத்துகளுள் முதன்மையாக நின்றது இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ் விசைமுக அமைப்பும் (keyboard layout) பரிந்துரைகளில் (word suggestions) இலங்கையில் பயன்படுத்தப்படும் சொற்களும்.

இலங்கைக்கான தமிழ் விசைமுக அமைப்பு

தமிழ்த் தட்டச்சு முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘பாமினி’ என்னும் எழுத்துரு இலங்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு எழுத்துருவாகும். எந்தவித உள்ளீட்டுச் செயலியும் (input method software) இன்றி இந்த எழுத்துருவை மட்டும் கொண்டே தமிழில் தட்டெழுதிவிடலாம்.  பல ஆண்டுகளாக இந்த முறையைக் கொண்டே தமிழில் எழுதிப் பழகிய பயனர்கள் வேறு தமிழ் உள்ளிடு முறைக்கு மாறுவதற்கு, பல சிறமங்களைக் கண்டனர்.

2007ஆம் ஆண்டு இலங்கையின் ICTA அமைப்பு, இலங்கைக்கான முறையான தமிழ் விசைமுகம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில், ஓர் ஆய்வினை மேற்கொண்டது.  நடப்பில் இருக்கும் விசைமுக அமைப்புகளை ஒப்பாய்வு செய்தது. தட்டச்சு, தமிழ்-99 முதலிய விசைமுகங்கள் ஆய்வில் சேர்க்கப்பட்டன.

கையில் எழுதுவது போலவே தட்டெழுதுவதற்கும் (type as you write) ஆய்வில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் ‘பாமினி’ அமைப்பையே தேர்ந்தெடுத்து, யூனிகோடு முறைக்காக சில மாற்றங்களை மட்டுமே செய்து ‘SL Tamil Keyboard 2007’ என்ற பெயரில் அதனை வெளியிட்டது ICTA அமைப்பு. இந்த விசைமுகத்தின் மற்றொரு பெயர் ‘ரெங்கநாதன் விசைமுகம்’ (Renganathan Keyboard).

இலங்கைத் தமிழ்ச் செயலிகளுக்கான விசைமுகம்

ரெங்கநாதன் விசைமுக அமைப்பு. நன்றி: Gihan Dias

கணினிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த விசைமுகத்தை கையடக்கக் கருவிகளில் எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து முதலில் சில ஆய்வுகளும், தக்காரோடு சில கலந்துரையாடல்களும் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே செல்லினத்தில் இந்த அமைப்பு சேர்க்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார்.

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியல்

செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடும்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள பல வட்டார வழக்குச் சொற்கள் பரிந்துரைகளாகத் தோன்றுவதில்லை என பலர் குறைபட்டுக் கொண்டனர்.  இதற்கு எளிதாகவே தீர்வு கண்டுவிடலாம் என்றும், ‘இலங்கைத் தமிழ்’ சொற்கள் அதிகம் அடங்கிய தரவகம் (corpus) இருந்தாலே போதும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார். கூட்டத்தில் இருந்த ஆர்வலர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உடனே முன்வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருடன் முத்து நெடுமாறன்.
 • Johnson Victor

  என் நீண்ட நாள் கனவு இந்த விசைப்பலகை. ஆனால் இந்த முறையிலும் சில வழு இருப்பதாக உணர்கிறேன். அவற்றையும்வ்வம் மேலும் சில ஆலோசனைகளையும் இங்கே எழுதி வருவேன்.
  1. உயிரெழுத்துகள் இருக்கின்றன வரிசையில் ‘ண’ என்ற எழுத்து தவறுதலாக இடம் பெற்றிருக்கிறது. இதை Q என்ற எழுத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

  2. இப்போது Z என்ற விசை காலியாகிறது. இந்த இடத்தில் ‘இ’ என்ற எழுத்தை அமைக்க வேண்டும்.

  3. Caps Lock, Tab, வலப்பக்கம் இருக்கும் Shift விசை செல்லிடை பேசி விசை முகத்திற்குத் தேவையில்லை. இடப் பக்கம் இருக்கும் Shift விசையை நீண்ட நேரம் அழுத்தினால் Caps Lock செயல்படும்.

  4. பாமினி விசைமுகத்தில் ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும் ஒரே வரிசையில் அமர்த்தப்பட்டிருக்கிறது. இது தவறு. ‘ண’ என்ற எழுத்தை நாம் Q இடத்திற்குக் கொண்டு சென்று விட்டதால், ‘இ’ என்ற எழுத்தை Z என்ற விலைக்குக் கொண்டு வந்து விடலாம். இப்போது ஒற்றைக் கொம்பை B என்ற எழுத்திலும் இரட்டைக் கொம்பை N என்ற இடத்திலும் அமர்த்தலாம்.

  5. உயிர் எழுத்துகளைத் திட்டுவதற்கு இரண்டு தேர்வுகள் கொடுக்கலாம். உதாரணமாக ‘ஆ’ அடிப்பதற்கு Shift + M தட்டலாம். அல்லது இரண்டு முறை m என்ற எழுத்தைத் தட்டலாம். கூடுதலாக ஒரு வசதியையும் பயனருக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதாவது, குறில் உயிரைத் தட்டும்போதே prediction முறையில் அதற்குரிய நெடிலையும் பரிந்துரைக்கலாம். ‘ஆண்டவர்’ என்ற சொல்லைத் தட்ட, ‘அண்டவர்’ என்று தட்டினால் போதும். Auto correction முறையில் செயலி ‘ஆண்டவர்’ என்று திருத்திக் கொள்ளும். 12 மெய்யெழுத்துகளையும் ஓரிரு விசைகளில் உருவாக்க முடிந்தால், உஈரிரண்டாக இருக்கும் உயிரெழுத்து ஒன்றுக்குள் அடக்கி விடலாம்.

  6. ஐ மற்றும் ஔ என்ற எழுத்துகளுக்குத் தனித் தனி விசைகள் தேவையில்லை. ஔ என்ற எழுத்தும் ஔ-கார எழுத்துகளும் புழக்கத்தில் அதிகம் இல்லாதவை. எனவே, ஔ என்ற எழுத்தை ஐ என்ற எழுத்தின் நெடிலாகக் கருத வேண்டும். Shift + ஐ என்று தட்டினால் ஔ என்ற எழுத்து வரிசை வர வகை செய்ய வேண்டும்.

  7. மெய்யெழுத்துகளின் Shift பகுதி

 • Johnson Victor

  7. மெய்யெழுத்துகளின் Shift பகுதியின் பெரும்பான்மையானவை இப்போது காலியாக இருக்கின்றன. இந்த இடங்களில் தமிழ் எண்கள் மற்றும் தமிழ் சுருக்கெழுத்துகளை இடம் பெறச் செய்யலாம். அதன் அடிப்படையில் வடமொழி எழுத்துகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ரோமானிய எழுத்துகளுக்கும் கீழ் தமிழ் எண்களை வைத்தால்தான் விரைவாக அவற்றைத் தேடித் தட்ட முடியும்.

 • Johnson Victor

  8. Auto dot வசதியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ‘கபபல்’ என்று அடித்தால் ‘கப்பல்’ என்று இடம் பெறச் செய்யலாம்.

 • Johnson Victor

  9. முக உணர்ச்சி மற்றும் குறிச் சிப்பங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 • Johnson Victor

  10. இந்த விசை முறை புழக்கத்தில் உள்ள மற்ற விசைமுறைக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். உதாரணமாக Old Typewriter Mode, Anjal, Tamil 99 என்ற விசை முறையையும் இது உள் வாங்கிக் கொள்ள வேண்டும். கணினி அறிவியலாளர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்து விட்டதாகவே கருதுகிறேன். என்ன விசை முறையாக இருந்தாலும் எழுத்துகள் மாறாமல் இருப்பதுதான் சிறப்பு. உதாரணமாக IME முறையாக இருந்தாலும் மேலே பரிந்துரைக்கப்பட்ட வகையிலேயே எழுத்துகள் இடம் பெற வேண்டும்.

 • உங்கள் கருத்துகள் 7, 8, 9, 10 என உள்ளனா. முழுமையான கருத்தை எங்களுக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப இயலுமா? “கணினி அறிவியலாளர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்து விட்டதாகவே கருதுகிறேன்” எந்த வகையில் என்று தெளிவாக விளக்கினால் நல்லது. நன்றி.

 • Johnson Victor

  மன்னிக்க வேண்டும் ஐயா,

  திறன்பேசியிலேயே என் கருத்துகளைத் தொகுத்துத் தந்ததால், முந்திய கருத்துகள் அடியிலும், பிந்திய கருத்துகள் மேலேயும் காட்சியளிக்கின்றன. மேலும், அந்த உரைப் பெட்டியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கருத்துகளைப் பதிவு செய்ய முடியவில்லை. எனவே, தனித் தனியாக கருத்துகளை வழங்க வேண்டியதாயிற்று.

  ‘கணினி அறிவியலாளர்கள்’ என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தமிழ் சார்ந்த கணினி அறிவியலாளர்கள் வட்டார அளவில் சுயமாக விசைப் பலகைகளை அமைக்க முனைந்ததால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. எழுத்துகளை இடமாற்றம் செய்யாமலேயே, பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு, பாமினி, அஞ்சல், தமிழ்99, வேறு எந்த முறையிலும் தமிழைத் தட்டலாம் என்று சொல்ல வந்தேன். இதை மேலும் விளக்க வேண்டும் என்றால், நாம் நேரடியாகச் சந்திப்பதுதான் சிறப்பு.

  இப்போது அந்தப் பதிவை சீராக அமைத்துத் தருகிறேன். மேலும் அதை muthu@murasu.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்புகிறேன். நன்றி.

 • Johnson Victor

  மன்னிக்க வேண்டும் ஐயா,

  திறன்பேசியிலேயே என் கருத்துகளைத் தொகுத்துத் தந்ததால், முந்திய கருத்துகள் அடியிலும், பிந்திய கருத்துகள் மேலேயும் காட்சியளிக்கின்றன. மேலும், அந்த உரைப் பெட்டியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கருத்துகளைப் பதிவு செய்ய முடியவில்லை. எனவே, தனித் தனியாக கருத்துகளை வழங்க வேண்டியதாயிற்று.

  ‘கணினி அறிவியலாளர்கள்’ என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தமிழ் சார்ந்த கணினி அறிவியலாளர்கள் வட்டார அளவில் சுயமாக விசைப் பலகைகளை அமைக்க முனைந்ததால், இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. எழுத்துகளை இடமாற்றம் செய்யாமலேயே, பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு, பாமினி, அஞ்சல், தமிழ்99, வேறு எந்த முறையிலும் தமிழைத் தட்டலாம் என்று சொல்ல வந்தேன். இதை மேலும் விளக்க வேண்டும் என்றால், நாம் நேரடியாகச் சந்திப்பதுதான் சிறப்பு.

  இப்போது அந்தப் பதிவை சீராக அமைத்துத் தருகிறேன். மேலும் அதை muthu@murasu.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்புகிறேன். நன்றி.

  ****************

  என் நீண்ட நாள் கனவு இந்த விசைப்பலகை. ஆனால் இந்த முறையிலும் சில வழு இருப்பதாக உணர்கிறேன். அவற்றையும்வ்வம் மேலும் சில ஆலோசனைகளையும் இங்கே எழுதி வருவேன்.

  1. உயிரெழுத்துகள் இருக்கின்றன வரிசையில் ‘ண’ (Z) என்ற எழுத்து தவறுதலாக இடம் பெற்றிருக்கிறது. இதை Q என்ற எழுத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

  2. இப்போது Z என்ற விசை காலியாகிறது. இந்த இடத்தில் ‘இ’ என்ற எழுத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் ஆங்கில விசைப்பலகையில் உள்ளது போல் முற்றுப் புள்ளியையும் காற்புள்ளியையும் நிலைத்திருக்கச் செய்யலாம். முரசு அஞ்சல் விசைப்பலகையில் ‘இ’ என்ற எழுத்து வலது Shift பக்கம் வைக்கப்பட்டிருக்கிறது.

  3. Caps Lock, Tab, வலப்பக்கம் இருக்கும் Shift விசை செல்லிடை பேசி விசை முகத்திற்குத் தேவையில்லை. இடப் பக்கம் இருக்கும் Shift விசையை நீண்ட நேரம் அழுத்தினால் Caps Lock செயல்படும். அல்லது இரண்டு முறை அழுத்தினால் Caps Lock செயல்படும்.

  4. பாமினி விசைமுகத்தில் ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும் ஒரே விசையில் அமர்த்தப்பட்டிருக்கிறது. இது தவறு. ‘ண’ என்ற எழுத்தை நாம் Q இடத்திற்குக் கொண்டு சென்று விட்டதால், ‘இ’ என்ற எழுத்தை Z என்ற விசைக்குக் கொண்டு வந்து விடலாம். இப்போது ஒற்றைக் கொம்பை B என்ற எழுத்திலும் இரட்டைக் கொம்பை N என்ற இடத்திலும் அமர்த்தலாம்.

  5. உயிர் எழுத்துகளைத் தட்டுவதற்கு இரண்டு தேர்வுகள் கொடுக்கலாம். உதாரணமாக ‘ஆ’ அடிப்பதற்கு Shift + M தட்டலாம். அல்லது இரண்டு முறை m என்ற எழுத்தைத் தட்டலாம். கூடுதலாக ஒரு வசதியையும் பயனருக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம். அதாவது, குறில் உயிரைத் தட்டும்போதே prediction முறையில் அதற்குரிய நெடிலையும் பரிந்துரைக்கலாம். ‘ஆண்டவர்’ என்ற சொல்லைத் தட்ட, ‘அண்டவர்’ என்று தட்டினால் போதும். Auto correction முறையில் செயலி ‘ஆண்டவர்’ என்று திருத்திக் கொள்ளும். 12 மெய்யெழுத்துகளையும் ஓரிரு விசைகளில் உருவாக்க முடிந்தால், ஈரிரண்டாக இருக்கும் உயிரெழுத்துகளை ஒன்றுக்குள் அடக்கி விடலாம்.

  6. ஐ மற்றும் ஔ என்ற எழுத்துகளுக்குத் தனித் தனி விசைகள் தேவையில்லை. ஔ என்ற எழுத்தும் ஔ-கார வரிசை எழுத்துகளும் புழக்கத்தில் அதிகம் இல்லாதவை. எனவே, ஔ என்ற எழுத்தை ஐ என்ற எழுத்தின் நெடிலாகக் கருத வேண்டும். Shift + ஐ என்று தட்டினால் ஔ என்ற எழுத்து வரிசை வர வகை செய்ய வேண்டும்

  7. மெய்யெழுத்துகளின் Shift பகுதி பெரும்பான்மையானவை இப்போது காலியாக இருக்கின்றன. இந்த இடங்களில் தமிழ் எண்கள் மற்றும் தமிழ் சுருக்கெழுத்துகளை இடம் பெறச் செய்யலாம். அதன் அடிப்படையில் வடமொழி எழுத்துகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ரோமானிய எழுத்துகளுக்கும் கீழ் தமிழ் எண்களை வைத்தால்தான் விரைவாக அவற்றைத் தேடித் தட்ட முடியும். (Shift விசை தட்டி ரோமானிய எண்களைத் தட்டினாலும் தமிழ் எண்கள் வருமாறு வகை செய்யலாம். இந்தப் பட்சத்தில் எண்கள் வரிசையில் இருக்கும் குறியீடுகள் அனைத்தும் (!, @, #, $, %, ^, &, *, (, ), _,+) வேறு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும். திறன்பேசியில் Symbols) என்ற தேர்வுக்குக் கொண்டு செல்லலாம்.

  8. Auto dot வசதியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ‘கபபல்’ என்று அடித்தால் ‘கப்பல்’ என்று இடம் பெறச் செய்யலாம்.

  9. முக உணர்ச்சி (smilies) மற்றும் குறிச் சிப்பங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  10. இந்த விசை முறை புழக்கத்தில் உள்ள மற்ற விசைமுறைக்கும் உகந்ததாக இருக்க வேண்டும். உதாரணமாக Old Typewriter Mode, Anjal, Tamil 99 என்ற விசை முறையையும் இது உள் வாங்கிக் கொள்ள வேண்டும். கணினி அறிவியலாளர்கள் இவ்விஷயத்தில் தவறு செய்து விட்டதாகவே கருதுகிறேன். என்ன விசை முறையாக இருந்தாலும் எழுத்துகள் மாறாமல் இருப்பதுதான் சிறப்பு. உதாரணமாக IME முறையாக இருந்தாலும் மேலே பரிந்துரைக்கப்பட்ட வகையிலேயே எழுத்துகள் இடம் பெற வேண்டும்.

 • நண்பரே, தன்மிப்பட்ட மின்னஞ்சல்களை இது போன்றப் பொதுக் கருத்துரைகளில் பதியாமல் இருப்பதே சிறப்பு. மேலும், கருத்தாடல்களில் சுறுங்கக் கூறுவதே சிறப்பு. உங்கள் மின்னஞ்சலை பெற்றுக் கொள்கிறோம். செல்லினத்தின் உதவி கணக்கில் இருந்து மறுமொழி கொடுக்கிறோம். நன்றி.

 • Johnson Victor

  தவறுக்கு வருந்துகிறேன்.

 • சிக்கல் இல்லை. மின்னஞ்சலை நீக்கிவிட்டோம் 🙂

 • அனைவருக்கும் விருப்பமான ஒரு விசைமுக அமைப்பை உருவாக்குவது கட்டாயம் இயலாது. ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் QWERTY கூட சரியானது அல்ல, அதனில் சிற்சில மாற்றங்களைச் செய்தால் சிறப்பக இருக்கும் என்று இன்று கூட பலர் கூறி வருகின்றனர். QWERTYக்கே இந்த நிலை என்றால், தமிழ் விசைமுகங்களுக்குச் சொல்லவா வேண்டும்?

  இலங்கையில் உள்ள பயனர்களுக்கு நாங்கள் சேர்க்க முன்வந்துள்ளது, அந்த நாட்டு அரசினால் பல தமிழ் பயனர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஒன்று. நாங்கள் கலந்துரையாடிய பல பயனர்களும் இதனையே விரும்புகின்றனர். எனவே ஆய்வு சரியாகவே நடந்திருக்கிறது என்பது, எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

  கையடக்கக் கருவிகளுக்கேற்ப, கண்ணுக்கெட்டாத, மிகச் சிறிய மாற்றங்களைத் தவிர, இந்த விசைமுக அமைப்பில் எந்த மாற்றத்தையும் நாங்கள் செய்யப்போவதில்லை என்பதை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.