ஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில் தமிழில் எழுதச் சிக்கல்.

ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியின் புதிய பதிப்பில், தமிழில் எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. இந்தச் சிக்கல் குறித்து பல பயனர்கள், தெளிவான விளக்கங்களை எங்களுக்குத் தந்து வருகின்றனர்.

சிக்கல் இதுதான்: ஜி-மெயில் செயலியில் புதிய மின்னஞ்சல்களை எழுதும்போதோ, அல்லது வந்த மின்னஞ்சல்களுக்கு மறுமொழி எழுதும்போதோ, ஒருசில சொற்களுக்குமேல் முழுமையாக எழுத முடிவதில்லை. சில வேளைகளில் இரண்டாவது சொல்லே தடுமாறுகிறது.

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

ஜி-மெயில் செயலியில் தமிழில் எழுதும்போது ஏற்படும் சிக்கல்

“மிகவும் அருமையான” என்று எழுதத் தொடங்கும்போது, “மிகவும்” என்ற முதற்சொல் சரியாக வருகிறது. அடுத்து எழுதப்படும் சொற்களின் எழுத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக சேராமல் ஒன்றன் மேல் ஒன்றாக விழுகின்றன. இதன்பின், தொடர்ந்து எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தச் சிக்கல் ஏற்படும் ஜி-மெயில் செயலியின் பதிப்பு எண் 7.2.12.147797444.  இருப்பினும், ஆண்டிராய்டு கருவிகளுக்கு ஏற்றவாறும், அவற்றில் உள்ள ஆண்டிராய்டு பதிப்புக்கு ஏற்றவாறும் இந்த எண் மாறலாம்.

இந்தச் சிக்கலை ஏற்படுத்துவது கூகுளின் ஜி-மெயில் செயலியில் உள்ள ஒரு வழு!  இது தெளிவாகியுள்ளது. செல்லினம் மட்டுமல்லாமல், மற்ற உள்ளீட்டுச் செயலிகளைக் கொண்டுத் தட்டெழுதும்போதும் இதேச் சிக்கல் தோன்றுகின்றது.

இடைக்காலத் தீர்வுகள்

கூகுள் இந்த வழுவை நீக்கும் வரை, ஒருசில மாற்றுவழிகளைக் கையாளலாம்.

அ. வேறொரு செயலியைப் பயன்படுத்துவது:

மின்னஞ்சல்களை எழுதுவதற்கும் படிப்பதற்கும் கூகுள் பிளேயில் பல செயலிகள் உள்ளன. மேலும் புகழ் பெற்ற ஆண்டிராய்டு கருவிகளில் அந்தந்த நிறுவனங்கள் உருவாக்கிய மின்னஞ்சல் செயலிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். தமிழில் எழுதும்போது இவற்றைப் பயன்படுத்தலாம்.  எடுத்த்க்காட்டாக எச்.டி.சி.  திறன்பேசியில் உள்ள மின்னஞ்சல் செயலிகளைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

ஆ. முந்தைய பதிப்பிற்கு மாறுவது:

ஜி-மெயிலின் புதிய பதிப்பில்தான் இந்த வழு. பழைய பதிப்புகளில் இல்லை. இந்த வழு நீங்கும் வரை, பழைய பதிப்பையே பயன்படுத்தலாம். இதனைச் செய்ய Settings -> Apps -> Gmail பக்கத்திற்குச் சென்று “Uninstall Updates” கட்டத்தைத் தட்டினால், பழைய பதிப்பிற்கு மாறிவிடும். செயலி புதுப்பிக்கப்பட்ட பிறகு மீண்டும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு: இதனைச் செய்யும் போது, உங்கள் மின்னஞ்சல் கணக்குகள் செயலியில் இருந்து நீக்கப்படும். பதிப்பு மாற்றப்பட்டப் பிறகு, நீங்கள் மீண்டும் உங்கள் கணக்குகளைச் சேர்க்கவேண்டும்!

மேற்குறிப்பிட்ட இரண்டுமே இடைக்காலத் தீர்வுகளே. இவற்றைத் தவிர மற்ற வழிகளும் உள்ளன. நீங்கள் அவ்வாறு மாற்றுவழிகளைப் பயன்படுத்தினால், சொல்லுங்கள். மற்றவர்களுக்கும் அது பயனுள்ளதாக அமையும்.

கூகுளுக்கு வழு அறிக்கை

இந்த வழுவைப் பற்றிய அறிக்கையை கூகுளுக்கு அனுப்புவது நல்லது. விரைவில் தீர்வுகாண அவர்களுக்கு உதவியாக இருக்கும். கூகுள் பிளேயில் உள்ள செயலியின் பக்கத்தில் தொடர்பு மின்னஞ்சல் கிடைக்கும். விவரங்களை மின்னஞ்சல் வழி அவர்களுக்கு அனுப்பலாம். திரைப்பிடிப்புகளைச் சேர்தால் (screen shot) மேலும் உதவும்.

  • Johnson Victor

    Even in this comment box, not possible to type in Tamil. I try to post in Tamil using Samsung Tamil keyboard but to it’s vain.

  • Dear Johnson Victor, Thank you for letting us know. We have found this problem in several apps published by Google. We believe it has to do with some framework inside Android that’s causing this problem. We have alerted Google as even with their own keyboard, this problem exists. Let’s hope that they will fix this soon.

  • Sakthivel Perumal

    இரண்டாவது சொல்லின் முதல் எழுத்தின் மேல் எல்லா எழுத்தும் ஏறி ஏறி வருகின்றன. அல்லது இரண்டாவது சொல்லைத் தட்டச்சவே முடியவில்லை. ஜிமெயில் செயலியில் மட்டுமல்ல. கூகுள் குரோம் உலாவியிலும் இதே நிலைதான். இந்தச் சிக்கலை நானும் எதிர்கொள்கின்றேன்….. அதனால் கூகுள் உலாவியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து UC Browser-ஐப் பயன்படுத்துகிறேன். சிரமத்தைச் சீக்கிரம் களைய உதவவும் என்று கூகுளுக்கு எனது சிக்கலைப் புகார் மூலம் தெரிவித்திருக்கின்றேன். இது வரை எந்த பதிலும் இல்லை என்ற தகவலை வறுத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • நங்களும் தெரிவித்திருக்கிறோம் நண்பரே. விரைவில் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்!

  • Pingback: குரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு! - செல்லினம்()

  • Pingback: ஜி-மெயில் - தமிழுக்குத் தடையாக இருந்த வழு நீக்கப்பட்டது! - செல்லினம்()