ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன

மைக்குரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில் வெர்ட், பவர் பைண்ட், எக்செல். கூகுள் தொகுப்பில் டாக்ஸ், ஷீட்ஸ், சிலைட்ஸ். இந்தச் செயலிகளை நாம் நாள்தோறும் பயன் படுத்தி வருகின்றோம். ஆவணங்களைத் தொகுத்தல், வில்லைகளை (slides) உருவாக்குதல், கணக்குகளைச் சரிபார்த்தல் போன்ற செயல்களுக்கு, இந்தச் செயலிகள் பெரிதும் உதவுகின்றன.  இவற்றைப் போலவே லீப்ரா ஆபிஸ், ஓப்பென் ஆபிஸ் போன்ற திறவூற்றுச் செயலித் தொகுப்புகளும் உள்ளன. ஒவ்வொரு தொகுப்பும் சில சிறப்பு வசதிகளை முன்வைத்தும், அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தியும் வருகின்றன.

இந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்களிப்பு அவர்களின் ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பாகும். ஆவணங்களுக்காக பேஜஸ் (Pages), வில்லைகளுக்காக கீநோட் (Keynote), விரிதாட்களுக்காக நம்பர்ஸ் (Numbers) என இம்மூன்று செயலிகளும் ஐ-வெர்க்ஸ் தொகுப்பில் அடங்கியுள்ளன.

ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பு

படம்: மெக் ஓஸ் கணினிகளிலும் (மேல் வரிசை), ஐ.ஓ.எஸ். கருவிகளிலும் (கீழ் வரிசை) இயங்கும் ஐ-வெர்க்ஸ் செயலித் தொகுப்பு.

மெக்கிண்டாசுக் கணினிகளில் மட்டுமே இயங்கி வந்த இந்தச் செயலிகள், ஐ-பெட் அறிமுகப் படுத்தப்பட்ட நாள்முதல், ஐ-பெட்டிலும் ஐ-போனிலும் இயங்கி வருகின்றன.  கணினிப் பதிப்பாக இருந்தாலும் கையடக்கப் பதிப்பாக இருந்தாலும், இந்தச் செயலிகளைக் கொண்டு எந்தவிதத் தடையுமின்றித் தமிழில் படைப்புகளை உருவாக்கலாம் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒன்று.

இவை மூன்றும் அன்மையில் மேம்படுத்தப்பட்டன. ஐநூறுக்கும் மேற்பட்ட வரைபடங்கள், படைப்பாளர் குறிப்புகளைச் சேர்ப்பதற்கான புதிய வசதிகள் போன்றவை, ஏற்கனவே உள்ள பல எளிமையான வசதிகளோடு சேர்கின்றன.

கையடக்கப் பதிப்புகள்

கூட்டங்களிலோ கலந்துரையாடல்களிலோ நாம் கலந்துகொள்ளும் போது, நமது கையடக்கக் கருவிகளைக் கொண்டே உடனுக்குடன் ஆவணங்களை உருவாக்கி அவற்றை மற்றவர்களுக்கு விளக்கக் காட்சிகளாகப் படைப்பது இப்போதெல்லாம் இயல்பான ஒன்றாகி விட்டது.  எடுத்துக்காட்டாக கீநோட் செயலியைக் கொண்டு உடனுக்குடனே நம்முடைய ஐ-போனில் வில்லைகளை உருவாக்கி, ஐ-போனைக் கொண்டே ஒளிப்படக் காட்சியாகப் படைக்கலாம். அவ்வாறு ஐபோனில் உருவாகப்பட ஒரு படைப்பைக் கீழே காணலாம்.

இலவச பதிவிறக்கம்

ஐ-வெர்க்ஸ் செயலிகளை இலவசமாகவே ஐபோன்களிலும், ஐபேட்களிலும், மெக்கிண்டாசுக் கணினிகளிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஒரு கருவியில் உருவாக்கிச் சேமிக்கப்பட்ட ஆவணத்தை, மற்றக் கருவிகளிலும் காணலாம், திருத்தங்களைச் செய்யலாம்.

இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டக் கலைச்சொற்கள்:
ஆவணம் document
வில்லைகள் slides
விரிதாள் spread sheet
செயலி application, app
செயலித் தொகுப்பு application suite
திறவூற்று open source
விளம்பரம்
http://solvalam.mnewsapps.com