ஐபோன், ஐப்பேட்டிற்கான புதிய செல்லினம்!

ஐபோன், ஐப்பேட் கருவிகளுக்கான புதிய செல்லினம் இன்று வெளியீடு காண்கிறது. 2009ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தப் பதிப்பு வெளிவந்தது. அப்போது இது தனிப்பட்டச் செயலியாகவே இருந்தது. மற்ற செயலிகளில் தமிழில் உள்ளிடுவதற்கான வாய்ப்பு ஐ.ஓ.எசில் அப்போது இல்லை. 2014ஆம் ஆண்டு ஆப்பிள் கருவிகளில் இயல்பாகவே செல்லினத்தின் விசைமுகங்கள் சேர்க்கப்பட்டன. எனவே வேறொரு செயலியைக் கொண்டு தமிழில் உள்ளிடவேண்டும் என்ற தேவை இல்லாமல் போனது.

Screen_Shot_2016-08-17_at_2_47_22_PM

இன்று வெளிவரும் ஐ.ஓ.எசுக்கான புதிய செல்லினம், ஏற்கனவே உள்ள இயல்பான விசைமுகங்களைவிட சில கூடுதல் வசதிகளைக் கொண்டுவருகிறது:

பரிந்துரைகளும் பிழை திருத்தங்களும்

ஆண்டிராய்டு செல்லினத்தில் உள்ளது போலவே, இனி ஐ.ஓ.எசிலும் தமிழில் தட்டெழுதும்போது பரிந்துரைகள் தோன்றும். தவறாக எழுதப்பட்ட சொல்லின் சரியான எழுத்துக் கூட்டலைக் காட்டும். ஒரு சொல்லை உள்ளிட்டவுடன், அடுத்து வரும் சொற்களுக்கான பரிந்துரைகளையும் காட்டும். இந்த வசதிகள் யாவும் ஐ.ஓ.எசில் உள்ள ஆங்கில உள்ளீட்டிற்கு இருந்தது. தமிழில் இதுவரை இல்லை. இந்தக் குறையை புதிய செல்லினம் நிறைவு செய்கிறது.

புதிய செல்லினம் காட்டும் தமிழ் 99 விசைமுகம்

நிறங்களைச் சேர்க்கும் அணிகள்

விசைமுகத்தின் நிறங்களை மாற்ற, பல வகையான அணிகள் (தீம்) சேர்க்கப்பட்டுள்ளன. செல்லினம் விசைமுகங்கள் எங்கு தோன்றினாலும், அவை பயனர் விரும்பிய நிறத்திலேயே தோன்றும்.

விசைமுகங்களின் முன்னோட்டம்

மற்ற செயலிகளில் செல்லினத்தின் விசைமுகங்களைச் சேர்ப்பதற்குமுன், முன்னோட்டமாக அவற்றைக் கொண்டு தட்டெழுதிப் பார்க்கலாம். புதிய பயன்களை முழுமையாக உணர்ந்த பிறகு மற்ற செயலிகளிலும் பயன்படுத்தலாம். அணிமாற்றங்களையும் இந்த முன்னோட்டத்தில் உடனுக்குடன் காணலாம்.

Sellinam-iOS-Screens

செல்லினம்.காம் பதிவுகள்

ஆண்ட்டிராய்டு பதிப்பைப் போலவே இந்த ஐ.ஓ.எசின் பதிப்பிலும் செல்லினம்.காம் வலைப்பூ பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.  தொழில்நுட்பத்தில், குறிப்பாகக் கையடக்கத் தொழில்நுட்பத்தில், தமிழின் பயன்பாடு குறித்த பயனுள்ள கட்டுரைகள் அவ்வப்போது இங்கே படைக்கப் படுகின்றன. அவை செல்லினம் செயலியில் வந்து சேரும். புதிய பதிவுகள் குறித்த அறிவிக்கைகளும் அவ்வப்போது வந்தடையும்.

தேர்வுப் பதிப்பை இன்றே பெற்றுக் கொள்ளலாம்

ஏற்கனவே செல்லினத்தை வைத்திருப்பவர்களுக்கு, ஓரிரு நாட்களில் செயலி மேம்படுத்தப்படும். அதற்கு முன்னரே புதிய பதிகையைப் பெற விரும்புவோர், sellinam (dot) help (at) gmail (dot) com என்னும் முகவரிக்கு எழுதலாம். தேர்வுப் பதிப்பிற்கான தரவிறக்க அழைப்பு அனுப்பப்படும்.

Did you like this? Share it: