முனைவர் ரெ. கார்த்திகேசு மறைவு

மலேசியாவின் மூத்த எழுத்தாளரும், நாவலாசிரியருமான் முனைவர் ரெ. கார்த்திகேசு இன்று (10.10.2016) காலை இயற்கை எய்தினார்.
ரெ. கா. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் முனைவர் ரெ. கார்த்திகேசு நான் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ செயலியின் முதல் பயனர். முதல் பயனர் மட்டுமல்ல, முதன்மைப் பயனரும் கூட. அவரோடு சேர்ந்து செய்த ஒவ்வொரு திட்டமும் வெற்றி பெற்றது! மிகவும் நெருங்கிய நண்பர். நான் மதித்துப் போற்றும் உயர்ந்த பண்பாளர். ‘மலேசியர்’ என்று கூறிக்கொள்வதில் மகிழ்பவர், பெருமைப்படுபவர். அவரின் மறைவு மலேசியத் தமிழுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. தனிப்பட்ட முறையில், ஓர் ஆழ்ந்த நட்பின் இழப்பு என்னை வாட்டுகிறது!
அவரைப் பற்றிய சில குறிப்புகளை அவரின் நினைவாக இங்கே பகிர்கிறோம்.
– முத்து நெடுமாறன்

 

reka-blackbg

ரெ. கா. வைப் பற்றி

ரெ.கார்த்திகேசு காலனித்துவ காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த தமிழர்களின் மூன்றாம் தலைமுறை. அங்கு தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் பயின்று பின்னர் ஆங்கிலமும் மலாயும் கற்றுத் தேர்ந்தார். மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவில் ஒலிபரப்பாளராகப் பணியைத் தொடங்கி அங்கே துணைத் தலைவராகவும் நிர்வாகியாகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பினாங்கில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் பொதுமக்கள் தொடர்பு ஊடகப் பிரிவில் விரிவுரையாளரானார். அங்கு ஒலிபரப்புத் துறையில் விரிவுரையாளராகவும் துறைத்தலைவராகவும் பேராசியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

மலாயாப் பல்கலைக் கழகத்தில் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் கீழ் இந்திய ஆய்வு இயல் துறையில் இளங்கலைப் பட்டமும் (B.A.Hons, 1968) பின்னர் நியு யார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலைப்பட்டமும் (Master of Science in Journalism,1977)தொடர்ந்து இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் பொது மக்கள் தொடர்புத் துறையில் முனைவர் பட்டமும் (Ph.D,1991) பெற்றுள்ளார்.

ஊடகங்கள் மற்றும் ஒலி, ஒளிபரப்புத் துறைகள் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் கருத்தரங்களில் வாசிக்கப்பட்டு, அனைத்துலக ஆய்விதழ்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

12 வயது முதலே தமிழில் எழுத ஆரம்பித்த ரெ.கா. மலேசியாவின் முன்னணி எழுத்தாளர். தமிழ்நாட்டில் கணையாழி, தீராநதி, இந்தியா டுடே, கல்கி ஆகிய இதழ்களில் சிறுகதைகளும் விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். திண்ணை முதலிய இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். தம்முடைய படைப்புக்களுக்காக மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் பல பரிசுகள் பெற்றுள்ளார்.

  • ஆண்டு தோறும் அளிக்கப்படும் சிறந்த நூலுக்கான தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு, (2 முறை)
  • தனிநாயகம் அடிகள் விருது
  • கணையாழி இதழ் வழங்கும் சம்பா நரேந்திரர் பரிசு
  • தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கும் கரிகால் சோழன் விருது

ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து நாவல்கள், இரண்டு விமர்சனக் கட்டுரை நூல்கள் ஆகிய 12 நூல்கள் எழுதியுள்ளார்.

நன்றி: மலேசியாவிலிருந்து ரெ.கா.

ரெ. கா. ‘முரசு அஞ்சலின் முதல் பயனர்’ ஆன பின்னணியை நாளை வெளியிடுகிறோம்.
Did you like this? Share it: