வாட்சாப் பகிர்வுகளிலும் இனி படங்களின் மேல் கிறுக்கலாம்!

புகழ்பெற்ற நட்பூடகங்கள் அறிமுகமாகும் போது ஒவ்வொன்றும் சில தனிச் சிறப்புகளோடே தோன்றுகின்றன. நடைமுறையில் இருக்கும் ஓர் ஊடகத்தின் பயனர்களை, வென்றெடுக்கும் வியூகங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த அடிப்படையிலேயே செய்திப்பரிமாற்றச் செயலிகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்போடு முதன்முதலில் வெளிவந்தன. லையின், தெலிகிறாம், வீச்செட் போன்ற செயலிகளும் அதிகப் பயனர் எண்ணிக்கையைக் கொண்டிருந்த வாட்சாப் பயனர்களை ஈர்க்க, புதுப்புது வசதிகளையும் பயன்பாடுகளையும் கொண்டு அறிமுகம் கண்டன. ஒட்டிகைகளைச் (stickers) சேர்த்தல், அருகில் இருக்கும் நண்பர்களைத் தேடுதல், பி.டி.எப். ஆவணங்களை இணைத்தல் போன்ற வசதிகள் அனைத்தும் செய்திப் பரிமாற்றச் செயலிகளுக்குப் புதியனவே.

அதிகமான பயன்பாட்டை ஈர்க்கும் இந்த வசதிகளை, அனைத்துச் செயலி மேம்பாட்டாளர்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கின்றனர்.  புதுப்புது பதிகைகளிள் (versions) இந்த வசதிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்தும் வருகின்றனர். அவரவரின் செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் மற்றச் செயலிகளுக்கு மாறாமல் இருக்கவே இந்தச் சேர்க்கைகள்.

செய்திச் செயலிகளுக்கேல்லாம் முன்னோடியாக இருப்பது வாட்சாப். முதலில் தோன்றிய செயலியும் இதுவே. செய்திப் பரிமாற்றங்கள் எந்தவிதத் தடையோ தாமதமோ இன்றி நடக்கவேண்டும் என்பதே வாட்சாப்பின் தலையாய நோக்கமாக இருந்தது. பணம் கொடுத்து அனுப்பப்படும் குறுஞ்செய்திச் (எஸ்.எம்.எஸ்) சேவைக்கு நிகரான சேவையை வழங்கி குறுஞ்செய்தியின் பயன்பாட்டைக் குறைத்ததும் இந்த வாட்சாப் செயலியே.

இருப்பினும், கேளிக்கைச் செயல்களுக்கு அதிக இடமளிக்கும் மற்றச் செயலிகளை இளையோர் நாடும்போது, வாட்சாப்பும் தனது பிடிவாதத்தைச் சற்று விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது. மற்ற செயலிகளில் காணப்படும் புதுப்புது வசதிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்தும் வருகிறது.

அந்த வரிசையில் சில நாள்களுக்குமுன் வெளிவந்த வாட்சாப்பின் புதிய பதிகையில், படங்களைப் பகிரும்போது அதன் மேல் கிறுக்கவும், குறிப்புகளை எழுதவும் வாய்ப்பினைத் தந்துள்ளது. கோடிடுதல், வட்டமிடுதல், எழுத்துகளையும் சொற்களையும் சேர்த்தல் போன்ற செயல்களை, வாட்சாப்பில் இருந்தவாறே செய்யலாம். செல்லினத்தைக் கொண்டு தமிழ் எழுத்துகளையும் சொற்களையும் சேர்ப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதும் மகிழ்ச்சியளிக்கிறது!

வாட்சாப் - படத்தின் மேல் கிறுக்கல்

நட்பூடகக் கூறுகள்

மேற்குறிப்பிட்ட வசதியோடு நின்றுவிடாமல், பயன்பாட்டை எளிமையாக்கும் மேலும் சில வசதிகளையும் இந்தப் பதிகையில் சேர்த்துள்ளனர். ‘ஜிஃப்’ (gif) எனப்படும் நகரும் படங்களைச் சேர்ப்பது, செய்திக்குழுமங்களின் நிருவாகிகள் புதிய உறுப்பினர்களை அழைப்பதற்கு ஒரு இணைப்பை மட்டுமே அனுப்பும் வாய்ப்பு, குழுமங்களில் உரையாடும்போது டுவிட்டரில் குறிப்பிடுவதைப் போல உறுப்பினர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது போன்ற வசதிகள், வாட்சாப் செயலியில் நட்பூடகக் கூறுகள் ஒவ்வொன்றாகச் சேர்க்கப்படுவதைக் காட்டுகிறது.

வாட்சாப் செயலியில் புதிய மேம்பாடுகள்
வாட்சாப் ஐ.ஓ.எஸ். பதிகையின் மேம்பாட்டுக் குறிப்பு
whatapp-android-update-oct-2016
வாட்சாப் ஆண்டிராய்டு பதிகையின் மேம்பாட்டுக் குறிப்பு. இது தற்போது முன்னோட்டத்தில் (பீட்டா) உள்ளது

போட்டிகளினால் ஏற்படும் நன்மைகள்

பில்லியன் கணக்கில் பயனர்களைக் கொண்டுள்ள வாட்சாப், போட்டிச் செயலிகள் வழங்கும் அறைகூவல்களுக்குச் செவிசாய்ப்பது, போட்டி எவ்வளவு கடுமையாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆண்டிராய்டும் ஐ.ஓ.எசும் போட்டிப்போட்டுக்கொண்டு பயனர்களை ஈர்க்கப் புதுப்புது வசதிகளைத் தருவதைப்போல, நட்பூடகச் செய்திச் செயலிகளும் போட்டிப்போட்டுக் கொண்டு புதுப்புது வசதிகளை நமக்குத் தருகின்றன.

போட்டிகளினால் அதிகம் பயனடையப் போவது பயனர்களே!

தொடர்புடையது : வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை

குறிப்பு:
வாட்சாப் செயலியை ‘புலனம்’ என்றும், தெலிகிறாம் செயலியை ‘தந்தி’ என்றும், இவற்றைப் போலவே மற்ற செயலிகளின் பெயர்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து சிலர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த வழக்கத்தைச் செல்லினம் வரவேற்பதில்லை. எப்படி ஒருவருக்குக் கொடுக்கப்பட்டப் பெயர் எல்லா மொழியிலும் அதே பெயராக இருக்கிறதோ, அது போலவே ஒரு செயலிக்கோ செல்பேசிக்கோ கொடுக்கப்பட்டப் பெயர் எல்லா மொழியிலும் அதே பெயராக இருக்க வேண்டும். ‘தமிழரசன்’ என்னும் பெயர் கொண்ட ஒருவர் ஆங்கிலத்தில் ‘Tamil King’ என்று அழைக்கப்படுவதில்லை. ‘போன் பண்ணுகிறேன்’ என்பதை ‘அழைக்கிறேன்’ என்று அழகு தமிழில் சொல்லுவோம், ‘ஃபர்ஸ்ட்’ என்பதை ‘முதல்’ என்று நமது மொழியில் சொல்லி மகிழ்வோம். ஆனால், விண்டோசை சாளரமாக மாற்ற வேண்டாம், பவர் பைண்டை பெயர் மாற்றம் செய்து குழப்ப வேண்டாம். தெலிகிறாமை தந்தி ஆக்க வேண்டாம்.  வாட்சாப்பை வாட்சாப்பாகவே வைத்திருப்போம். இலவசமாகவே அவர்களின் உழைப்பால் பயன்பெறும் நாம், அவர்களின் பெயரையாவது சரியாகச் சொல்லவேண்டும் அல்லவா?
Did you like this? Share it: