சீரி – ஆப்பிள் நிறுவனத்தின் குரல் வழி உதவும் மின்னுட்பம். திம் கூக் தலைமைப் பொறுப்பை ஏற்றப்பின் ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோன் – ஐபோன் 4S. இதில் தான் முதன் முதலில் சீரி சேர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வசதிகள் சேர்க்கப்பட்டன. ஆப்பிளின் இந்த அனுகுமுறையைப் பின்பற்றி, மற்ற நிறுவனங்களும் குரல்வழி உதவும் மின்னுட்பங்களைச் சேர்த்தன. கூகுள் அசிஸ்டண்ட், அமேசானின் அலெச்சா, மைக்குரோசாப்டின் கோட்டானா ஆகியவை சீரிக்கு நிகரான உருவாக்கங்கள்.
அப்பிளின் கருவிகளில் இந்தக் குரல் வழியான இடைமுகம் ஆப்பிளின் செயலிகளில் மட்டுமே சில ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாட்டில், ஆப்பிள் அல்லாத செயலி மேம்பாட்டாளர்களும் சீரி நுட்பத்தை அவரவர் செயலிகளில் இணைக்கலாம் என்னும் இனிப்பான செய்தியை ஆப்பிள் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல பெரிய செயலி நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் குரல் வழிக்கட்டளைகளை, சீரியின் துணையோடு சேர்ந்தன.
வாட்சாப்புடன் சீரி
அந்த வரிசையில் வாட்சாப்பும் அண்மையில் இணைந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், வாட்சாப் குரல் வழியே செய்திகளை உள்ளிடும் வசதியைச் சேர்த்தது. எடுத்துக் காட்டாக “Hey Siri … Compose a whatsapp message to arulmathi” என்று குரல் வழிக் கட்டளையிட்டால், அருள்மதிக்கு வாட்சாப் ஒரு புதிய செய்தியை எழுதத் தொடங்கும். அதன் பின் செய்தியையும் குரல் வழியே சொல்லி, அதனை அனுப்பவும் சொல்லலாம்.
கடந்த வாரம் வந்த புதிய வாட்சாப் பதிகையில் நமக்கு வந்த வாட்சாப் செய்திகளை, சீரியைப் படித்துக்காட்டச் சொல்லும் வசதியும் சேர்க்கப்பட்டது. “Hey Siri, read my last WhatsApp message” என்று கட்டளையிட்டால் கடைசியாக வந்தச் செய்தியை சீரி நமக்குப் படித்துக் காட்டும்.
வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதோ, கைகள் மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதோ, நமது ஐபோனைத் தொடாமலேயே இனி வாட்சாப் செய்திகளை சொல்லி அனுப்பலாம், படிக்கச்சொல்லிக் கேட்கலாம். ஐஓஎசின் குறுஞ்செய்திச் செயலிக்கு மட்டுமே இருந்த இந்தப் பயனுள்ள வசதி, வாட்சாப் முதலிய மற்றக் குறுஞ்செய்திச் செயலிகளுக்கும் பரவி வருகின்றது.
தமிழில் குரல் வழி இடைமுகம்
மேற்குறிப்பிடப்பட்ட வசதிகள் சீரியில் இதுவரைச் சேர்க்கப்பட்டுள்ள மொழிகளிள் மட்டுமே பெற வாய்ப்புள்ளது. சீரிக்கு இன்னும் தமிழ் ‘சொல்லித்தரப்படாமல்’ இருப்பதால், தமிழிலேயே கட்டளைகளையும் செய்திகளையும் சொல்வதற்கான வாய்ப்பு இன்னும் வரவில்லை. தமிழ் பேசும் பயனர்கள் பெரும்பாலும் ஆண்டிராய்டு கருவிகளையே அதிகம் பயன்படுத்துவதால், ஆண்டிராய்டிலேயே தமிழ் குரல் வழி இடைமுகம் முதலில் தோன்றும் என்று எதிர்ப்பார்க்கலாம். எந்தக் கருவியில் முதலில் தோன்றினாலும், தோன்றியவுடன் அடுத்தடுத்த நிறுவனங்களும் தமிழில் வழங்க முன்வரும் என்பதில் ஐயமில்லை.
முதல் தோற்றம் விரைவில் வரும் என்று ஆவலோடு எதிர்ப்பார்ப்போம்!
தொடர்புடைய கட்டுரைகள்:
1. வாட்சாப் பகிர்வுகளிலும் இனி படங்களின் மேல் கிறுக்கலாம்!
2. வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை
வாட்சாப்பின் ஐஓஎஸ் பதிப்பு : https://itunes.apple.com/us/app/whatsapp-messenger/id310633997?mt=8