சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் தமிழ் விளையாட்டு ஒன்றை, முரசு நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்தக் கையடக்கத் தமிழ் விளையாட்டை, இதுவரை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். நட்பு ஊடகங்கள் வழி மட்டுமே பகிரப்பட்ட இணைப்பு, 26 நாடுகளைச் சேர்ந்த பயனர்களைச் சென்றடைந்துள்ளது.
விளையாடுவதற்கு எளிமையாக உள்ளது என்றும், விளையாடிக்கொண்டே புதிய சொற்களை அறிந்து கொள்வதற்குப் பயனுள்ள செயலி என்றும், சொல்வளத்தின் முன்னோடிப் பதிப்பைப் பெற்று விளையாடியத் தமிழாசிரியர்கள் சிலர் கூறினர்.
ஆண்டிராய்டுக்கும் ஐபோனுக்கும் ஒரே நேரத்தில் வெளியீடு
ஆண்டிராய்டு திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களும், ஐபோன் ஐபேட் கருவிகளைப் பயன்படுத்துபவர்களும் சொல்வளத்தை இன்றே பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஐபேட் கருவிகளின் பெரிய திரையளவைக் கருதி, விளையாட்டில் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சொல்வளம் விளையாடும் முறை
ஒரு கட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லை, மறுகட்டத்தில் பரப்பப்பட்டிருக்கும் எழுத்துகளில் தேட வேண்டும். ஒவ்வொரு சொல்லைக் கண்டுபிடிக்கும் போதும் புள்ளிகள் வழங்கப்படும். சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும், பரப்பப்பட்டுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும், விளையாடும் படிநிலைக்கேற்ப மாறுபடும். மூன்று எழுத்துகளைக் கொண்ட சொற்களில் தொடங்கி ஏழு எழுத்துகளைக் கொண்ட சொற்கள் வரை கூடிக் கொண்டே போகும். எழுத்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புள்ளிகளும் மாறுபடும். ஒவ்வொரு சுற்றும் இரண்டு நிமிடங்கள் நீடிக்கும். ஒரு சுற்றில் பெறப்படும் அதிகமானப் புள்ளிகளே விளையாட்டாளரின் அடைவு நிலையாகக் கருதப்படும். விளையாட்டளர்கள் விரும்பினால் மற்றவரோடும் போட்டிப்போடலாம்.
உலகின் முதல் 10 வெற்றியாளர் பட்டியல்
விளையாட்டாளர்கள் விரும்பினால், அவர்களின் புள்ளிகள் ஒரு பொதுப் பட்டியலில் வரிசையிடப்படும். உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டாளர்களின் புள்ளிகளும் ஒரே வரிசையில் சேர்க்கப்படும். புள்ளிகள் சேர்க்கப்பட்டதும், உலகின் முதல் 10 விளையாட்டாளர் பட்டியலை, பங்கேற்கும் விளையாட்டாளர் உடனே பார்க்கலாம்.
புதிய விளையாட்டாளர்கள் சேரச் சேர, உலகின் முதல் 10 விளையாட்டாளர் வரிசை, சேர்க்கப்படும் புள்ளிகளுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பின் அவரவர் நிலையை, விளையாட்டாளர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
இலவச பதிவிறக்க இணைப்பு
சொல்வளைம் விளையாட்டை கீழ்க்காணும் இணைப்பின் வழி இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் கருவிக்கேற்ப கூகுள் பிளே அல்லது ஆப்பிளின் ஆப்சிட்டோருக்கு இந்த இணைப்பு உங்களை எடுத்துச் செல்லும்:
http://solvalam.mnewsapps.com
குறிப்பு: சொல்வளத்தின் முதன்மைப் பக்கம் விரைவில் உருபெறும்.