சொல்வளத்தின் ‘உலகின் முதல்-10’ விளையாட்டாளர்களின் பட்டியல், இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மீட்டமைக்கப்படும் (reset செய்யப்படும்). மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த சொல் விளையாட்டு என அறிமுகம் கண்ட சொல்வளம், கடந்த வாரம் சில புதிய மேம்பாடுகளைக் கண்டது.
புதிய பதிகையில் உள்ள வசதிகள் சில:
- சரியான சொல் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தொட்ட இடத்திற்கும், அதன் பக்கத்தில் உள்ள எழுத்துக்கும் சிற்சிறு இடவெளி இருந்ததால், சொல் தேர்வு சரியாக அமையாத நிலை இருந்தது. இந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டது. குறிப்பாக, 5 எழுத்துகளுக்கும் மேல் உள்ள சொற்களை, இனி விரைவாகத் தேர்ந்தெடுக்கலாம். இதன்வழி, கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நிமிடங்களுக்குள், மேலும் அதிகமான புள்ளிகளைப் பெறலாம்.
- உலகின் முதல்-10 விளையாட்டாளர் பட்டியலில், இனி விளையாட்டாளரின் நாட்டுக் கொடியும் சேர்க்கப்பட்டிருக்கும். யார்யார் எங்கிருந்தெல்லாம் விளையாடுகிறார்கள் என்பதை அனைவரும் பார்த்து மகிழலாம்.
- முந்தைய பதிகையில் ஓர் ஆட்டத்தையாவது ஆடிய பின்னரே ‘உலகின் முதல்-10’ பட்டியலைப் பெறமுடியும். புதியதில், எந்த ஆட்டமும் ஆடாமலேயே இந்தப் பட்டியலைப் பெறலாம். முகப்பில் உள்ள ‘login’ கட்டத்தைத் தொட்டு, உங்களுக்கென பெயர் ஒன்றைக் கொடுத்தவுடன், Top-10 என்னும் கட்டம் உடனே தோன்றும்!
- ஆண்டிராய்டு பயனர்கள், பின் (back) பட்டனைப் பயன்படுத்திப் பழகியவர்கள். சொல்வளம் ஐபோனுக்கும் ஆண்டிராய்டுக்கும் ஒரே அமைப்பில் உருவாக்கப்பட்டதால், ஆண்டிராய்டு கருவிகளின் கூறுகளை இதுவரைப் பயன்படுத்தாமல் இருந்தது. புதிய பதிகையில் இதுபோன்ற வசதிகள் சேர்க்கப்பட்டன.
- இந்தப் பதிகையின் முதன்மையான மேம்பாடு, ஒவ்வொரு வாரமும் வெற்றியாளர் பட்டியல் மீட்டமைக்கப்படுவதுதான்! ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின், எல்லோருடைய புள்ளிகளும் நீக்கப்படும். திங்கட்கிழமை முதல் அனைவரும் உலகின் முதல்-10 இடங்களுக்குப் போட்டி இடலாம்.
சொல்வளம் விளையாட்டை கீழ்க்காணும் இணைப்புகளைக் கொண்டு உங்கள் திறன்பேசிகளில் தரவிறக்கிக் கொள்ளலாம்: