நண்பர்களே,
அண்டிராய்டு கருவிகளில் செல்லினம் எப்போது செயல்படும் என்று கேட்டுக்கொண்டிருந்த நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று முதல் உங்கள் கருவிகளில் செல்லினத்தை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்!
2003ஆம் ஆண்டு முதன் முதலில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட செல்லினம் 2005ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக்காக ஒரு மாபெரும் நிகழ்ச்சியின் வழி வெளியிடப்பட்டது. ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டக் கருவிகளில் மட்டும் இயங்கி வந்த இந்தச் செயலி, 2009ஆம் ஆண்டு ஐ-போனில் மறுவடிவம் கண்டது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு டிசம்பரில் எச்.டி.சி. நிருவனம் தனது ‘எக்ஸ்பிளோரர்‘ கருவியில் செல்லினத்தின் கூறுகளான இணைமதி எழுத்துருவையும் மற்றும் அஞ்சல், தமிழ்-99 விசைப்பலகை அமைப்புகளைக் கொண்ட உள்ளீட்டு முறைகளையும் கருவியிலேயே சேர்த்தது. இன்று அண்டிராய்டு கருவிகளை வைத்திருக்கும் பயனர்கள் தாங்களே தங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள கூகல் பிளேஸ்டோரில் செல்லினம் வெளியீடு காண்கிறது.
முழுமையான செயல்பாட்டுக்கு அண்டிராய்டு 4.1ஆம் பதிப்பு (ஜெலி பீன்) தேவைப்படும். இருப்பினும் எச். டி. சி. மற்றும் சம்சுங் போன்ற கருவிகளில் முந்தைய பதிப்புகளிலும் தமிழ் சரிவர இயங்குவதால், செல்லினம் அவற்றிலும் செயல்படும். சரியான பயன்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்கும் செல்லினத்தில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் அடங்கியுள்ள முக்கியக் கூறுகள்:
- சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம்
- அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்-99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை
- மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு
- தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி – இதன் வழி கருவியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்பு
ஆண்டிராய்டு கருவிகளை வைத்திருப்பவர்கள் இந்த இலவசச் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் கருத்துகளை இங்கே எழுதிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்!
அனைவருக்கும் எங்களின் இனிய விழாக்கால வாழ்த்துகள்!
அன்புடன்,
– செல்லினம்