மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மொழிகளில் தமிழ்!

மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மின்னுட்பம் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பனுவல்களையும், குரல் வழி உள்ளிட்ட செய்திகளையும் ,மொழிபெயர்க்கப்பட்ட பனுவலாகவும், மொழிபெயர்த்துப்பேசப்பட்டச் செய்தியாகவும், தமது செயலிகள் வழி இதுவரை வழங்கி வந்துள்ளது. இந்த வசதிகள் அறுபதுக்கு மேற்பட்ட மொழிகளில், பல படிநிலைகளில், இருந்து வருகின்றன.

அந்த வரிசையில், தமிழையும் ஒரு மொழியாக இந்த வாரம் மைக்குரோசாப்ட் சேர்த்துள்ளது.

மொழிபெயர்ப்புச் செயலி

கூகுள் மொழிபெயர்ப்பு செயலியைப் போலவே மைக்குரோசாப்ட் மொழியாக்கத்திற்கும் ஏற்கனவே ஒரு செயலி ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும் இயங்கி வருகின்றது. இன்று, இந்த மைக்குரோசாப்ட் மொழியாக்கச் செயலியில் தமிழும் ஒரு மொழியாகத் தோன்றுகிறது. இந்தச் செயலிகளில், இணைய தொடர்பு இல்லாமலும் மொழியாக்கங்களைச் செய்ய தேவைப்படும் மொழிகளுக்கானத் தரவுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு

கணினிச் செயலிகள்

இதைத் தவிர, பவர் பையிண்ட், வெர்ட், அவுட்லூக் முதலிய கணினிச் செயலிகளிலும் மொழியாக்க வசதியைப் பயன்படுத்தலாம் என மைக்குரோசாப்ட் தனைது வலைப்பூ தளத்தின் பதிவில் கூறியிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, வெர்டில் வேறொரு மொழியில் உள்ள ஆவணத்தைத் தமிழிலும், தமிழில் உள்ள ஆவணத்தை வேறொரு மொழியிலும் மொழிபெயர்க்கச் செய்யலாம். அதுபோலவே, அவுட்லூக் வழி வரும் மின்னஞ்சல்களையும் மொழிபெயர்க்கலாம். அவுட்லூக் செயலி கணினிகளில் மட்டுமல்லாமல் திறன்கருவிகளிலும் இயங்கி வருகிறது. இவற்றிலும் இந்த வசதியைப் பெறலாம் என மைக்குரோசாப்ட் தனது வலைப்பதிவில் கூறியுள்ளது.

மொழியக்கச் சேவை

தமது சொந்தச் செயலிகளில் மட்டுமின்றி, மற்றவர்களும் இந்தச் சேவையைப் பெற்று, தங்களது செயலிகளிலும் இந்த வசதியினைச் சேர்க்கவும், மைக்குரோசாப்ட் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு மாதத்திலும், முதல் இரண்டு மில்லியன் (2,000,000) எழுத்துகளுக்கு இந்தச் சேவையை மின்னுட்ப மேம்பாட்டாளர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மைக்குரோசாப்ட் தமிழிலும் தனது மொழிபெயர்ப்பு வசதியைச் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றே. கூகுள் ஏற்கனவே தமிழில் இந்தச் சேவையை வழங்கி வந்துள்ளதால், அதன் மொழியாக்க நினைவகம் (translation memory) அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே கூகுளின் மொழியாக்கம் சற்றுத் தரம் கூடியதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எனினும் மொழிபெயர்ப்புத் தரம் என்பது மொழியாக்க நினைவகத்தின் அளவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. மின்னுட்ப அனுகுமுறைகளும் மொழியாக்கத் தரத்திற்குப் பங்காற்றுகின்றன.

தமிழையும் ஒரு மொழியாகச் சேர்த்தமைக்கு மைக்குரோசாப்டிற்கு நன்றி கூறுவோம். பனுவல்களுக்கு மட்டுமே தற்போது இருக்கும் இந்தச் சேவை, விரைவில் குரல் வழி மொழிபெயர்ப்புக்கும் பரவும் என எதிர்ப்பார்ப்போம்!

தொடர்புடையவை:

  1. குரல்வழித் தமிழ் உள்ளீடு
Did you like this? Share it: