முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதுதல்

முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக, கடந்த சில நாட்களாக சில பயனர்கள் கூறிவந்தனர். குறிப்பாக நீண்ட வரிகளைப் பதிவுகளாகவோ, கருத்துகளாகவோ எழுதும்போது, நான்கு வரிகளுக்கு மேல் எழுத முடியாமல் போய்விடுகிறது. இதுவே சிக்கல் எனத் தெரிவித்தனர். ஆண்டிராய்டில் மட்டுமே இருந்தது. ஐ.ஓ.எசில் இல்லை.

நாங்களும் இதற்கானக் காரணங்களை ஆய்ந்து வந்தோம். ஆண்டிராய்டு 5, 6, 7, 8ஆம் பதிகைகள் அனைத்திலும் முகநூல் செயலியில் நீண்ட வரிகளை எழுதிப் பார்த்தோம். சரியாகவே வந்தது. கூர்ந்து  கவனிக்கையில், நாங்கள் பயன்படுத்திய முகநூல் செயலி மிக அண்மையில் வெளிவந்தது என்பதை அறிந்தோம்.

பயனர்கள் சிலரிடம் இந்த விவரத்தைப் பகிர்ந்து அவர்கள் கண்டதையும் கேட்டோம். புதிய முகநூல் செயலியில் சிக்கல் தீர்ந்தது என்று அவர்களும் உறுதி கூறினர்.

உங்களுக்கும் இந்தச் சிக்கல் இருந்தால் முகநூல் செயலியை மேம்படுத்திப் பாருங்களேன். கூகுள் பிளே செயலியைத் திறந்து, கீழ்க்கண்டவாறு மேம்படுத்திக் கொள்ளலாம்.

அண்மைய பதிகை எண்

நாங்கள் இதுவரைப் பார்த்ததையும், நண்பர்கள் சிலர் அனுப்பியதையும் வைத்துப் பார்க்கும் போது, இந்தச் சிக்கல் தீர்க்கப்பட்ட முகநூல் செயலியின் பதிகை எண் 151.0.0.44.205 எனத் தெரிகிறது. உங்களுக்கு இந்தப் பதிகையோ அல்லது இதைவிட மேம்பட்டப் பதிகையோ இருந்தும், இதே சிக்கல்  மீண்டும் எழுந்தால் அன்பு கூர்ந்து எங்களுக்கு எழுதுங்கள்.

முகநூல் செயலியில் செல்லினம் - தேவைப்படும் பதிகை எண்

காண்க:
செல்லினம் முகநூல் பக்கத்தில் இது குறித்த உரையாடல்

மேலும் காண்க:
குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதியை செல்லினத்திலும் பெறலாம்!

Did you like this? Share it: