செல்லினம் 4.0.10ஆம் பதிகையில் மேலும் ஒரு வழுநீக்கம்

செல்லினம் 4.0.10ஆம் பதிகை, கூகுள் பிளேயின் தேர்வு பக்கத்தில் கடந்த திசம்பர் திங்கள் முதலாம் நாள் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டக் கட்டின் எண் (build number) 437.

அதனைத் தொடர்ந்து இதுவரை 700க்கும் மேற்பட்டோர் இந்தக் கட்டைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

நாம் அடிக்கடி எழுதும் சொற்கள், செல்லினத்தின் சொற்பட்டியலில் இல்லாவிட்டாலும், அவற்றை நினைவில் வைத்து பரிந்துரைகளாக வழங்க வழிவகுத்தது 437வது கட்டு. இந்த வசதி அஞ்சல், தமிழ்-99 விசைமுகங்களைப் பயன்படுத்தும் அனைவருக்கும் சேரும்.

புதிய வழுநீக்கம்

முழுமையான பயன்பாட்டிற்கு இந்தப் பதிகை வெளியீடுகாணும் முன், மேலும் ஒரு வழுநீக்கம் இதில் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அஞ்சல் விசைமுகத்தைப் பயன்படுத்துவோருக்கு இந்த வழு அடிக்கடித் தோன்றும். ஒரு சொல்லை எழுதிவிட்டு, அதனைத் திருத்துவதற்காக ‘பின்’ (backspace) விசையைத் தட்டியவுடன் எழுத்துகள் உடைந்து போய்விடும் (படம்). இதற்குக் காரணமாக இருந்த வழு, புதிதாக வெளியிடப்பட்டுள்ள 438ஆம் கட்டில் நீக்கப்பட்டது.

செல்லினத்தில் வழுநீக்கம்

முந்தையக் கட்டைத் தரவிறக்கம் செய்த அனைவரும், புதிய கட்டுக்கு மேம்படுத்தி, பயன்பாட்டில் எந்தச் சிக்கலும் வராமல் இருப்பதை உருதி செய்யுமாறு வேண்டுகிறோம். சிக்கல் ஏதும் இருப்பின், sellinam.help@gmail.com எனும் முகவரிக்கு உங்களுக்கு ஏற்பட்டச் சிக்கலைத் தெளிவாக எழுதி அனுப்புமாறும் வேண்டுகிறோம்.

புதிய வழுக்கள் ஏதும் இல்லை எனில், இந்த 4.0.10ஆம் பதிகையைப் பொங்கல் அன்று அனைவரும் தரவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப் படும்.

இந்தப் பதிகை ஆண்டிராய்டுக்கு மட்டுமே. ஐபோனில் இந்தச் சிக்கல் இல்லை.

தரவிறக்க முகவரி

இந்தத் தேர்வுநிலைப் பதிகையைக் கீழ்க்காணும் முகவரியில் இருந்து, ஆண்டிராய்டு கருவிகளில் தரவிரக்கம் செய்யலாம்:
https://play.google.com/apps/testing/ com.murasu.sellinam

முந்தைய பதிவு:
தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் புதிய வசதி

Did you like this? Share it: