We crossed 50,000 downlaods on Android!

ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்து மாதங்களுக்கு முன்பு செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பை வெளியிட்டோம். இதன் பதிவிறக்க எண்ணிக்கை 50,000த்தைத் தாண்டியுள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது!

ஒரு தமிழ் உள்ளீட்டுச் செயலியை எத்தனைபேர்தான் விரும்புவார்கள் என்ற ஐயம் தொடக்கத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்த பயனர்களிடமிருந்து வந்த கருத்துகளைப் பார்க்கும்போது, பயன்பாட்டுக்கு எளிமையான செயலியைக் கொடுத்தால் பலரும் தமிழில் எழுதத் தயங்கமாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் உள்ளீட்டை எளிமைப் படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே முரசு அஞ்சல், செல்லினம் முதலிய செயலிகளை உருவாக்கியும் அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தியும் வருகின்றோம்.

பயனர்களின் எதிர்பார்ப்பு அவரவர் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கு ஏற்றவாறு அமைகிறது. சிலர் கையடக்கக் கருவிகளில் உள்ள அதிநவீன ஆங்கில உள்ளீட்டு முறைமைக்கேற்ப தமிழ் உள்ளீடும் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னும் சிலர் ‘சுவைப்’ (swype) போன்ற வசதி தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என ஏங்குகிறார்கள்.

இருப்பினும் செல்லினத்தைப் பயன்படுத்திய பெரும்பாலோர் இதுவே தமிழில் உள்ள மிகச் சிறந்த உள்ளீட்டுச் செயலி என்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இவர்களின் கருத்துகள் அனைத்தையும் கூகள் பிளேயில் உள்ள செல்லினத்தின் பக்கத்தில் காணலாம். (https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam)

Sellinam-Play.png

செல்லினத்தின் கூறுகள் சில கையடக்கக் கருவிகளில் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளதைப் பலரும் அறிவர். எச்.டி.சி. நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எசின் ஏழாம் பதிப்பிலும் “முரசு அஞ்சல்”, “தமிழ் 99” ஆகிய இரண்டு தமிழ் விசைமுக அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.ஒ.எசில் இயங்கிய செல்லினத்தைக் கொண்டு மற்றச் செயலிகளில் நேரடியாகத் தமிழில் உள்ளிட இயலவில்லையே என்ற குறையை ஐ.ஒ.எசின் ஏழாம் பதிப்பு நீக்கியுள்ளது. ஐ.ஒ.எசின் செல்லினம் இனித் தமிழ் உள்ளீட்டின் மற்றத் தேவைகளை நாடி நிறைவு செய்யும். கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு இனி மேலும் கூடும் என எதிர்பார்க்கலாம்.

IMG_2430.PNGScreenshot_2013-10-29-19-16-32.png

ஆண்டிராய்டு செல்லினத்தின் அடுத்தப் பெரும் பதிகை (major version) எந்த நேரத்திலும் வெளிவரலாம். பல புதிய வசதிகளை இந்தப் பதிகையில் சேர்த்துள்ளோம். இவை பயனர்களின் வரவேற்பைப் பெரும் என நம்புகிறோம்!

Did you like this? Share it: