கின்டில் நூல்வாசிப்புச் செயலியில் ஐந்து இந்திய மொழி நூல்களை வாங்கிப் படிப்பதற்கான வசதியை, அமேசான் ஓராண்டுக்கு முன் ஏற்படுத்தியது. இந்தி, குஜராத்தி, மராத்தி, மலையாளத்தோடு தமிழும் அந்த ஐந்தில் இடம் பெற்றிருந்தது.
இந்தச் சேவைத் தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள், மற்ற மொழிகளைவிட தமிழ் நூல்களே எண்ணிக்கையில் முதலிடம் வைத்தன. இது குறித்து ஒரு பதிவையும் செல்லினத்தில் வெளியிட்டிருந்தோம்.
நூல் வாசிப்புக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட கின்டில் வாசிப்பு கருவிகள் உள்ளன. இவற்றில் மட்டுமல்லாமல், ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும், அதே நூல்களை வாசிக்கும் வாய்ப்பையும் அமேசான் அமைத்துத் தந்தது. இந்தத் திறன் கருவிகளில் இயங்கும் வாசிப்புச் செயலிகள் தமிழ் நூல்களையும் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டன.
கின்டில் செயலியில் தமிழ் அகராதி
ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது, புரியாத சொற்கள் ஏதும் தென்பட்டால், உடனே அவற்றின் பொருளை உடன் இருக்கும் அகராதியில் பெற்றுக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் இயல்பாக இருக்கும் இந்த வசதியை இனித் தமிழிலும் பெறலாம்!
அண்மையில் வெளிவந்த கின்டில் செயலியின் புதிய மேம்பாட்டில், தமிழ் அகராதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடு இதுவரை அண்டிராய்டுக்கும் மட்டுமே வந்துள்ளது. செயலியிலேயே இந்த அகராதி சேர்க்கப்பட்டதால், புரியாத சொற்களுக்கான விளக்கம் உடனுக்குடன் நமக்குக் கிடைக்கின்றது.
குழப்பம் தரும் சொல்லை தேர்ந்தெடுத்தாலே போதும், விளக்கம் தானாகவே தோன்றும் (படம்).
இதுவரை ஆண்டிராய்டுக்கு மட்டுமே இருக்கும் இந்த வசதி, கின்டிலின் ஐ.ஓ.எசின் பதிகையில் இன்னும் வரவில்லை. தேவை அதிகரித்தால்தான், வசதியும் அதிகரிக்கும். செயலிகளில் மட்டும் அல்லாமல், வாசிப்புக் கருவிகளை வைத்திருப்பவர்களும் இதனை பெற்று மகிழும் காலம் விரைவில் வரும் என்று எதிர்ப்பார்ப்போம்!
தொடர்புடைய பதிவு:
1. அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!