ஆட்சென்ஸ் விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்!

ஆட்சென்ஸ் (adsense) எனப்படுவது, கூகுள் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும்  இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவை.

ஆட்சென்ஸ் சேவையின் சின்னம்

வெற்றெழுத்து (text), படங்கள், காணொளிகள் மட்டுமல்லாமல் மற்ற ‘ஊடாடும் வடிவங்கள்’  (interactive media) வழியாகவும், இந்த விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.

இணைய தளங்கள் வழங்கும் உள்ளடக்கங்கள், அவற்றைப் படிக்கவும், காணவும் வரும் பயனர்களின் எண்ணிக்கை, இருக்கும் இடம், போன்றத் தகவல்களைச் சேகரித்து, அவற்றுக்கேற்ப விளம்பரங்களை வழங்குவதுதான் கூகளின் தொழில்நுட்பம்.

ஒரு விளம்பரம் எத்தனை முறைத் தோன்றுகின்றது என்பதைப் பொறுத்தும், அதனை எத்தனை முறை பயனர்கள் ‘கிளிக்’ செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும், இணைய பக்கங்களின் உரிமையாளர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது. அதிக வாசகர்களைக் கொண்ட இணைய தளங்கள், குறிப்பாக வலைப்பூக்கள் (blogs), இவ்வாறே தங்களின் உழைப்புக்கேற்ற பொருளை ஈட்டிவருகின்றன.

உள்ளடக்கங்களை அலசி ஆராய்ந்த பின்னரே விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப் படுவதால், மொழி ஒரு முக்கியக் கூறாக இருக்கிறது. ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளில் நிறைய தளங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்துவரும் வாசகர்களும் உலகளவில் அதிகமானோர் இருக்கிறார்கள். எனவே இதுவரை கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட சில மொழிகளில் மட்டுமே இந்த ஆட்சென்ஸ் சேவையை வழங்கி வந்தது.

ஆட்சென்ஸ் போன்ற மற்ற நிறுவனங்களின் சேவைகள் கூடத், தமிழ் இணைய தளங்களுக்குத் தரமான பொருளீட்டும் வாய்ப்பை வழங்கவில்லை. தளத்தில் உள்ள வரிகளையும், சொற்களையும் அலசாமல், பொருந்தும் விளம்பரங்களைத் தருவது கடினமே!

தமிழ் இணைய தளங்கள், குறிப்பாகச் செய்தி ஊடகங்களும் வலைப்பூக்களும், விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்திப் பொருள் ஈட்ட, இதுவரை வாய்ப்பில்லாமல் இருந்தது.

இந்த நிலையை கூகுள் மாற்றியுள்ளது!

ஆட்சென்ஸ் தளத்தில் பட்டியலிடப் பட்டிருக்கும் மொழிகள்
ஆட்சென்ஸ் தளத்தில் பட்டியலிடப் பட்டிருக்கும் மொழிகள்

கடந்த 10 ஆண்டுகளுக்குமேல் ‘ஆதரிக்கப்படாத மொழி’ (unsupported language) எனும் வரிசையில் தமிழ் இருந்து வந்தது.

இன்று, ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியாகத் தமிழ் அமைந்திருப்பதை, ஊடகங்களும், வலைப்பதிவாளர்களும் மகிழ்வோடு வரவேற்கின்றனர்.  நட்பு ஊடகங்களில் இந்த இனிப்பானச் செய்தியைப் பரிமாறியும் வருகின்றனர்.

ஆட்சென்ஸ் இனித் தமிழ்ச் சொற்களையும் தேடும்

இலட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்தாலும், தமிழ் மொழியில் உள்ள சொற்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கேற்ற விளம்பரங்களைத் தேடித்தர வாய்ப்பில்லாமல் இருந்த சூழல், இன்று மாறியுள்ளது.

பயணம் தொடர்பான கட்டுரையாக இருந்தால், அது முழுக்க முழுக்கத் தமிழில் இருந்தாலும், பயண விளம்பரங்களை எடுத்துத்தரும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இதைப்போலவே தொழில்நுட்பம், உணவு, கலை, வணிகம், விவசாயம் போன்றத் துறைகள். எவற்றிற்கு அதிகமான விளம்பரங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றிற்கேற்ப இணைய தளங்கள் இனி தமிழிலும் பொருளீட்டலாம்.

தனிமனிதராலும், ஒருசிலராலும் மட்டுமே நடத்தப்படும் தமிழ் இணைய தளங்கள், இந்தச் சேவையின் வழி பெரிதும் பயனடையலாம். விளம்பரங்களைத் தேடிச் சென்று அலையத் தேவையில்லை. கூகுள் அதனைச் செய்யும். தமிழில் விளம்பரங்களைத் தேடும் பணி கூகுளுடையது!

கட்டுரைகள், செய்திகள் முதலான பதிவுகள் தரமானதாகவும், அதிக வாசகர்களைக் கவரும் தன்மையுள்ளவையாகவும் இருப்பதை உறுதி செய்வதில் இனி வலைப்பதிவாளர்கள் அவர்களின் நாட்டத்தைச் செலுத்தலாம்!

மற்ற பதிவுகள்:
1.  AdSense now supports Tamil
2.  பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

Did you like this? Share it: