உணர்ச்சிக்குறிகள் (emoji) – இன்றைய செய்திப் பரிமாற்றத்தில் மிக முக்கியப் பங்கை ஆற்றும் கலை வடிவங்கள்!
செல்லினத்தில் இவற்றை உள்ளிடுவதற்கான வசதி சில ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. என்றாலும், கொடுக்கப் பட்டுள்ள குறிகளின் எண்ணிக்கைப் போதவில்லை என்ற குறையைப் பல பயனர்கள் சில காலமாகவே கூறி வந்துள்ளனர். குறிப்பாக, புதிதாக அறிமுகம் கண்ட உணர்ச்சிக் குறிகளை ஆங்காங்கே பயன் படுத்த விரும்புவோர், அவற்றைத் தேடிப் பார்த்து, ஏமாற்றம் அடைந்து, எங்களுக்கு எழுதியுள்ளனர்.
இந்தக் குறை, இன்றோடு நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்! இன்று வெளிவரும் ஆண்டிராய்டுக்கான* செல்லினத்தின் புதிய பதிகையில், பற்பலப் பிரிவுகளில் புதிய உணர்ச்சிக்குறிகளைச் சேர்த்துள்ளோம். இனி மிக அண்மையில் வெளிவந்தக் குறிகளையும் நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம், உங்கள் திறன்பேசி அவற்றைக் கொண்டிருந்தால்*.
ஆனால் … இதுவல்ல இன்றைய முதன்மைச் செய்தி!
மின்னுலகத் தமிழ்ப் பயன்பாட்டிற்கு, முதன் முறையாகத் தமிழ்ச் சொற்களுக்கேற்ப உணர்ச்சிக் குறிகளை நுண்ணறிந்து பரிந்துரைக்கும் வசதியைச் செல்லினத்தின் வழி இன்று அறிமுகம் செய்கின்றோம்!
மகிழ்ச்சி என்று எழுதியவுடனே மகிழ்ச்சிக்கான உணர்ச்சிக்குறி தோன்றினால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? செல்லினத்தில் இனி அவ்வாறு தோன்றும்! விசைமுகத்தை மாற்றி, மகிழ்ச்சிக்கான உணர்ச்சிக்குறியைத் தேடவேண்டியதில்லை!
அதோடு நாங்கள் நின்றுவிடவில்லை. செல்லினத்தில் ஏற்கனவே உள்ள பிழை திருத்தும் வசதிக்கும் உணர்ச்சிக் குறிகளை அறிமுகம் செய்துள்ளோம்! தவறாக எழுதப்பட்டச் சொற்களைத் திருத்தி, அதே நொடியில் திருத்தப்பட்ட சொற்களுக்கேற்ற உணர்ச்சிக் குறிகளைத் தேர்ந்தெடுக்கும் வேலையையும் இனி செல்லினம் உங்களுக்குச் செய்து கொடுக்கும்.
இதோ சில எடுத்துக் காட்டுகள்:
படம்: பிழையாகத் தட்டெழுதப்பட்டச் சொல்லைத் திருத்தி, திருத்தப்பட்டச் சொல்லுக்கேற்ற உணர்ச்சிக்குறியையும் ஆண்டிராய்டில் இயங்கும் செல்லினம் பரிந்துரைக்கின்றது.
படம்: ஐஓஎசில் இயங்கும் செல்லினம், முழுமையாகத் தட்டெழுதப்படாத சொல் ஒன்றை முழுமையாக்கி, அந்தச் சொல்லுக்கேற்ற உணர்ச்சிக்குறியும் பரிந்துரைக்கின்றது.
தொடர்ந்து வரும் உணர்ச்சிக்குறிகள்
பரிந்துரையில் தோன்றும் உணர்ச்சிக்குறிகளைத் தொட்டவுடன், தட்டெழுதப் படும் சொல் உடனே உணர்ச்சிக்குறியாக மாறிவிடும். ஆனால் குறிகளுக்குப் பதில் சொற்களைத் தொட்டால், சொல்லைத் தொடர்ந்து அதே குறி பரிந்துரையில் மீண்டும் தோன்றும். எனவே, மகிழ்ச்சி என்பதை உணர்ச்சிக் குறியை மட்டுமே கொண்டு எழுதலாம். அல்லது ‘மகிழ்ச்சி’ என்று எழுதி அதன்பின் உணர்ச்சிக் குறியினைச் சேர்க்கலாம். இரண்டையுமே செல்லினத்தில் விசைமுதத்தை மாற்றாமலேயே செய்யலாம்!
மகிழ்ச்சிதானே?
படம்: ஐஓஎசில் அஞ்சல் விசைமுகத்தின் வழி ‘மகிழ்ச்சி’ என்னும் சொல்லைப் பரிந்துரையில் இருந்து சேர்த்தப்பின், மகிழ்ச்சியைக் குறிக்கும் உணர்ச்சிக்குறியை மீண்டும் செல்லினம் காட்டுகின்றது.
இன்றே பெற்றுக் கொள்ளலாம்!
ஆண்டிராய்டு, ஐஓஎசுக்கான செல்லினத்தின் புதிய பதிகைகளை அனைவரும் இன்றே பெற்றுக் கொள்ளலாம். கூகுள் பிளே அல்லது ஆப்சுட்டோரில் உங்கள் செல்லினத்தின் பதிகையை மேம்படுத்திக் கொண்டாலே போதும். இந்த வசதிகள் அனைத்தும் உங்கள் கையடக்கத்தில் வந்து சேரும்.
தமிழில் இது புதுவரவு. ஆங்கிலத்தில் இதனைப் போன்ற வசதி ஏற்கனவே உள்ளது. தமிழில் செய்திகளை எழுதும்போதே இந்தக் குறியீடுகள் இடத்திற்கேற்பத் தோன்றினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்திலேயே இதனைச் செய்து முடித்தோம். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட செல்லினத்தின் பயனர்கள் அனைவரும் இதனை வரவேற்பார்களா என்று எங்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. எனவே, இதன் இயக்கத்தை நிறுத்துவதற்கான வசதியையும் சேர்த்துள்ளோம்:
படம்: ஐஓஎசிலும் ஆண்டிராய்டிலும் செல்லினத்தில் உணர்ச்சிக்குறிகள் பரிந்துரைகளை நிறுத்துவதற்கான விருப்பத் தேர்வு.
உங்கள் கருத்துகள் தேவை
இந்த வசதியைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு ஏற்படும் நிறைகளையும் குறைகளையும் நாங்கள் அறிய விரும்புகின்றோம். இதனைத் தொடர்ந்து மேம்படுத்த அவை பெரிதும் உதவும். உங்களுக்கு விருப்பமான உணர்ச்சிக்குறிகள் சேர்க்கப்படவில்லை எனில் அதன் குறியீட்டை இட்டு நீங்கள் அதனை அழைக்க விரும்பும் தமிழ்ப் பெயரையும் எங்களுக்கு அனுப்புங்கள். பொருத்தமாக இருப்பின், இயன்றவரைச் செய்கிறோம்.
ஒரு மில்லியன் பயனர்கள். எல்லோரின் செய்திகளுக்கும் மறுமொழிக்கூற எங்களுக்கு வாய்ப்பில்லை. இருப்பினும், சுவையான செய்திகளாக இருந்தால், டுவிட்டர் வழியாகப் பகிர்கிறோம். டுவிட்டரில் எங்களைக் கண்டிப்பாகத் தொடருங்கள்.
எங்கள் தொடர்பு விவரங்கள் இதோ:
வாட்சாப் (அழைப்புகளுக்கோ தனிச் செய்திகளுக்கோ வாய்ப்பில்லை) |
+60 17 2656750 |
தெலிகிராம் (அழைப்புகளுக்கோ தனிச் செய்திகளுக்கோ வாய்ப்பில்லை) |
@sellinam |
டுவிட்டர் | @sellinam_app |
மின்னஞ்சல் | sellinam.help@gmail.com |
முகநூல் | http://facebook.com/sellinam |
இந்தப் பதிவை இணையத்தில் காண்பவர்கள், உங்கள் கருத்துகளை நேரடியாகக் கீழே பதிவு செய்யலாம்.
உங்கள் உணர்ச்சிகளை, இனித் தமிழில் மகிழ்ச்சியாக வெளிப்படுத்துங்கள். சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்துப் பயனர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
*குறிப்புகள் :
- ஐஓஎசுக்கான செல்லினத்தில் உணர்ச்சிக்குறிகளுக்கென தனி விசைமுகம் இல்லை. அதற்கானத் தேவையும் இல்லை. ஐஓஎசில் உள்ள உணர்ச்சிக்குறிகள் விசைமுகத்திற்கே எளிதாகச் சென்று உள்ளிடலாம்.
- புதிய உணர்ச்சி குறிகள் உங்கள் திறன்பேசியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அண்மைய ஆண்டிராய்டு அல்லது ஐஓஎஸ் பதிகைகளில் இவை அடங்கியுள்ளன.
தொடர்புடையப் பதிவுகள்: