அண்மையில் எங்களுக்குக் கிடைத்த மின்னஞ்சல்களிலும், செல்லினம் செயலியின் வழி அனுப்பப்பட்ட செய்திகளிலும், செல்லினத்தின் கூகுள் பிளே பக்கத்தில் பதியப்பட்ட கருத்துகளிலும் சில கேள்விகள் அடிக்கடிக் கேட்கப்படுவதைக் கண்டுள்ளோம். இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்கள் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும், புதிய பயனர்களின் வசதிக்காகவும் விரைவானத் தீர்வினை நாடும் மற்ற நண்பர்களுக்காகவும் சிறு குறிப்புகளை இங்கே தருகின்றோம்.
கேள்வி: செல்லினத்தில் கொண்டு உள்ளிடும் போது, கடவுச்சொல் (password), கடன் அட்டை (credit card) எண் போன்ற தனிப்பட்ட விவரங்களைச் செல்லினம் பெற்றுக் கொள்கிறதா?
உள்ளிடு முறைகளை வழங்கும் செயலிகள் (input method apps) பயனரின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். கடவுச் சொற்கள் போன்றத் தரவுகளைச் சேமித்துக் கொள்ளும் உரிமையை ஆண்டிராய்டு, ஐ.ஓ.எஸ், விண்டோஸ் போன்ற இயங்குதளங்கள் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு வழங்குவதில்லை.
இதுபோன்ற தரவுகளைப் பெறாமலும் பாராமலும் இருப்பதை செல்லினம் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. பயனர் உள்ளிடும் எந்தத் தனிப்பட்ட விவரங்களையும் செல்லினம் சேகரிப்பதில்லை. தனிப்பட்ட சொற்பட்டியலில் சேர்க்கப்படும் சொற்களும் கூட செல்லினத்தின் உள் சேமிக்கப்படுவதில்லை. அவை அனைத்தும் பயனரின் தனிப்பட்ட சொற்பட்டியலில் சேர்ந்துவிடும். எனவேதான் செல்லினத்தை நீக்கினாலும் அந்தச் சொற்கள் நீக்கப்பட மாட்டாது.
செல்லினத்தின் இந்தத் தனிப்பட்டத் தரவுகள் பாதுகாப்புக் கொள்கையை இங்கே காணலாம்: Sellinam Privacy Policy
கேள்வி: தமிழ்-99 விசைமுகத்தைக் கொண்டு தட்டெழுதும் போது, சில சொற்களை எழுத முடியவில்லை.
எ.கா: ‘கிராமம்’, ‘வீட்டுக்காரர்’, ‘சமமாக’, ‘மனனம்’ போன்ற சொற்கள்.
‘கிராமம்’ என்று எழுதும்போது ‘கிராம்ம’ என்று வருகிறது. அதுபோல ‘வீட்டுக்காரர்’ => ‘வீட்டுக்கார்ர’, ‘சமமாக’ => ‘சம்மாக’, ‘மனனம்’ => ‘மன்னம்’ என வருகின்றன.
இதற்குக் காரணம், தமிழ்-99 விசைமுக அமைப்பில் உள்ள ‘தானியக்கப் புள்ளி’ எனும் வசதியே. அகரமேறிய உயிர்மெய் எழுத்துகள் தொடர்ந்து இருமுறை தட்டெழுதப்பட்டால், முதலில் தட்டப்பட்ட எழுத்தின் மேல் புள்ளி விழும். அதுபோலவே ‘நத’, ‘ணட’, ‘னற’, ‘மப’, ‘ஞச’ போன்ற இணைகள் வந்தாலும் முதல் எழுத்தின் மேல் புள்ளி தானாக விழும். தட்டெழுத்து வேகத்தைக் கூட்டுவதற்காகவே இந்த வசதி தமிழ்-99 விசைமுகத்தில் சேர்க்கப்பட்டது. எடுத்துக்காட்டாக ‘அந்த’ எனும் சொல்லை ‘அ’, ‘ந’, ‘த’ எனும் மூன்று தட்டுகளிலேயே எழுதிவிடலாம். ‘ந’ வுக்குப் புள்ளி தானாகச் சேர்க்கப்ப்பட்டுவிடும்.
தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் இந்த விதிக்குள் அடங்கி இருப்பதால் இந்தத் ‘தானியக்கப் புள்ளி’, தட்டெழுதும் வேகத்தைக் கூட்டுகிறது.
இதே வசதிதான் மேலே கூறப்பட்ட சொற்களை எழுதுவதற்குத் தடையாகவும் இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு மாற்று வழி உண்டு. புள்ளியைத் தவிர்ப்பதற்கு ‘அ’ விசையைப் பயன் படுத்தலாம். எடுத்துக்காட்டாக ‘க’ ‘இ’ ‘ர’ ‘ஆ’ ‘ம’ ‘அ’ ‘ம’ ‘புள்ளி’ என்று தட்டெழுதினால், முதல் ‘ம’ வில் புள்ளி விழாது. அதன்பின் தட்டப்பட்ட ‘அ’, புள்ளி சேர்வதைத் தடுத்துவிடும். இதுபோலவே மற்றச் சொற்களையும் எழுதலாம்.
ஓர் அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்குப் பிறகு ‘அ’ தட்டப்பட்டால், அதன் மேல் தானாகப் புள்ளி சேர்வது தவிர்க்கப்படும். இதுதான் விதி!
தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளியின் பயன்பாடு பற்றி இந்தப் பதிவில் காணலாம்: தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி
கேள்வி: இந்திய ரூபாய் சின்னம் செல்லினத்தில் காணவில்லை.
இந்திய ரூபாய் சின்னம் ஏற்கனவே உள்ளது. இந்தப் பதிவைக் காண்க: Sellinam 4.0.2 : Rupee (₹) symbol added. ஆனால், தங்கள் செல்பேசியின் மொழி தமிழாகவோ இந்திய-ஆங்கிலமாகவோ இருந்தால் அன்றி, ரூபாய் சின்னம் இயல்பாகத் தோன்றாமல் இருந்தது. அன்மையில் வெளியிடப்பட்ட செல்லினம் 4.0.7ஆம் பதிப்பில் இந்தச் சின்னத்தை ‘சின்னங்கள்’ விசைமுகத்தில் இயல்பாகவேத் தோன்றுமாறு செய்துவிட்டோம். இந்தப் பதிவைக் காண்க: 4.0.7 வெளியிடப்பட்டது.
கேள்வி: சில வேளைகளில் ‘ன’ எழுத்தின்மேல் ஈகாரக் குறியை எழுத முற்படும்போது, ன-கரத்தின் மேல் ஈகாரக் குறியீடு வருவதற்கு பதில் ‘றீ’ என்று வருகிறதே. இது செல்லினத்தில் உள்ள வழுவா?
கேள்வி: செல்லினத்தில் நகைப்புக்குறிகள் (smilies) இல்லை
இது குறித்தும் ஏற்கனவே எழுதியுள்ளோம். இந்தப் பதிவைக் காண்க: நகைப்புக்குறிகள்.
நகைப்புக்குறிகளை உள்ளிடுவதற்கு இடுகை (எண்டர்) விசையைச் சற்றதிகம் அழுத்தினால் சிரிப்புக்கான சின்னம் தோன்றும். அதைத் தொட்டால், அனைத்து குறிகளையும் கொண்ட விசைமுகம் தோன்றும். மீண்டும் எழுத்து விசைமுகத்திற்குச் செல்ல ABC எனும் விசையைத் தட்டினால் போதும். அவ்வளவுதான் :)
கேள்வி: செல்லினத்தில் அண்மையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வசதி என்ன?
கடந்த மாதம் வெளியிடப்பட்ட செல்லினத்தின் புதிய பதிப்பில், சொல்லுக்கேற்ற உணர்ச்சிக்குறிகளைப் பரிந்துரைக்கும் வசதியைச் சேர்த்துள்ளோம். இந்த வசதி ஐஓஎசின் பதிகையிலும் ஆண்டிராய்டு பதிகையிலும் உண்டு.
காண்க: உணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்!
மேலும் கேள்விகள்
செல்லினத்தின் பயன்பாடு மிகவும் எளியதாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இருப்பினும் தமிழில் புதிதாக தட்டெழுதத் தொடங்கியுள்ள நண்பர்கள் அவ்வப்போது சில பயன்பாட்டுச் சிக்கல்களை எதிர்நோக்கலாம். ஐயங்கள் எதுவாக இருப்பினும் தயங்காமல் கேளுங்கள்.