ஆப்பிள் விருது பெற்ற தமிழ் நாட்டின் இராஜா விஜயராமன்

ஜூன் 4ஆம் நாள்  தொடங்கி, அமெரிக்காவின் சான் ஓசே நகரில் 5 நாட்களாக நடைபெற்ற ஆப்பிள் மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாட்டில், வழக்கத்திற்கும் மாறாகப் பல தமிழ் பேசும் மேம்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

பெறும்பாலும் தமிழகத்தில் இருந்து வந்த இவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒருவர் தமிழிலேயே பேசிக்கொண்டது மாநாட்டில் ஆங்காங்கே ஒலித்தது.

புத்தாக வடிவமைப்புக்கான ஆப்பிள் விருது

இந்த மாநாட்டில், ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் “புத்தாக வடிவமைப்பு விருது” – இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த இராஜா விஜயராமன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

மிகவும் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் இந்த ஆப்பிள் விருது, அவர் ஆப்பிள் ஐபோன்களுக்காக உருவாக்கிய “கல்சி 3 (Calzy 3)” என்று அழைக்கப்படும் கணக்குப் பொறி (கல்க்குலேட்டர்) குறுஞ்செயலிக்காக வழங்கப்பட்டது.

இந்த குறுஞ்செயலி பல்வேறு திறமைகளைக் கொண்டக் கணக்குப் பொறிச் செயலியாகும்.

இது குறித்து இராஜா விஜயராமன் தனது கருத்துகளை, அமெரிக்காவில் இதே மாநாட்டில் கலந்துகொண்ட செல்லினத்தின் வடிவமைபாளர், முத்து நெடுமாறன் வழி, பின்வருமாறு தெரிவித்தார்:

“1970-ஆம் ஆண்டுகளில் கணக்குப் பொறிகள் வடிவமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தது முதல், அவற்றின் உருவாக்கத்திலும் பயன்பாட்டிலும் இதுவரை பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் செய்யப்பட்டதில்லை. ஐபோன்களில் தற்போது கிடைக்கக் கூடிய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளின் துணையோடு எனது கணக்குப் பொறிசெயலியில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைச் செய்ய நான் முனைந்தேன்” என்று ராஜா தனது இலக்கை விளக்கினார்.

‘முழுமையான பயனுருவாக்கம்’, கலைநயம் கொண்ட வடிவமைப்பு, பயன்பாட்டு எளிமை, ஈர்க்கும் தன்மையைக் கொண்ட பயனர் இடைமுகம் முதலியக் கூறுகளின் அடிப்படையில் இந்த விருது எனது உருவாக்கத்திற்காக வழங்கப்பட்டது என்று கூறிய ராஜா, இலக்கு சிறியதானாலும், பயன்பாட்டில் நாம் சேர்க்கும் புதுமைகளுக்கு கண்டிப்பாக வரவேற்புக் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆப்பிள் விருதுபெற்ற இராஜா விஜயராமனுடன் முத்து நெடுமாறன்

தமிழ் நாட்டின் தேனி மாவட்டத் தமிழர்

இராஜா விஜயராமன் தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இயந்திரப் பொறியியல் (mechanical engineering) துறையில் பட்டம் பெற்ற இவர், கடந்த 5 ஆண்டுகளாக குறுஞ்செயலிகளை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக இவர் ஆப்பிள் அனைத்துலக மின்னுட்ப மேம்பாட்டாளர் மாநாடுகளை இணையம், காணொளி வழியாக மட்டுமே பார்த்து வந்திருக்கிறார்.

இந்த ஆண்டு, அவர் விரும்பிப் பின்பற்றும் இந்த மாநாட்டில் முதன் முறையாக நேரடியாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார். முதல் மாநாட்டிலேயே அவரின் உருவாக்கத்திற்கு ஆப்பிள் விருது வழங்கப்பட்டுச் சிறப்பும் செய்யப்பட்டிருக்கிறார்!

உலகம் முழுவதுமிலிருந்து வந்திருக்கும் தன்னைப் போன்ற மேம்பாட்டாளர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதும், புதிய புத்தாக்கங்களுக்குப் பல அடிப்படைகளைப் பெற்றதும், தனக்குக் கிடைத்த மறக்க முடியாத வாய்ப்பு என்று இராஜா மகிழ்வுடன் குறினார்.

நன்றி: செல்லியல்.காம்

Did you like this? Share it: