ஐ.ஓ.எசில் மீண்டும் தமிழ் விசைமுகப் பெயர்கள்!

கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த ஐ.ஓ.எஸ். மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்வதன் வழி தங்களின் கருவிகளின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புதிய பதிகையாக ஐ.ஓ.எஸ். 12 மென்பொருளை, ஆப்பிள் கடந்தத் திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ஆம் நாள், பொதுப் பயனீட்டிற்காக வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஐபோன் 5எஸ் போன்ற பழைய ஐபோன்களின் செயல்பாட்டையும் இந்த மென்பொருள் மேம்படுத்தும். செயல்திறன் மேம்பாட்டைக் கருவாகக் கொண்ட வெளியீடு என்றாலும், பல புதிய வசதிகளையும் ஐ.ஓ.எஸ். 12 தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

அதன்படி, புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு முக்கியக் கூறு, இரண்டுக்கும் மேற்பட்டப் பயனர்கள் ஒரு குழுவாக, காணொளி வழி உரையாடும் வசதியாகும். ஐ.ஓ.எசின் 12.0 பதிகையில் இது விடுபட்டிருந்தாலும், அடுத்து வரும் 12.1 பதிகையில் இந்த வசதி இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் விசைமுகப் பெயர்கள்

ஐந்து ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த ஐ.ஓ.எசின் 7ஆம் பதிகை முதல், ஐபோன்களிலும் ஐபேட்களிலும் தமிழில் உள்ளிடுவதற்கான வசதியை ஆப்பிள் சேர்த்திருந்தது.  அஞ்சல், தமிழ்99 என இரு தமிழ் விசைமுகப் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

அதற்கும் முன்பாக, 2004ஆம் ஆண்டு முதல், மெக் கணினிகளிலும் இதே இரு விசைமுகங்கள் தமிழுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தன. தமிழில் உள்ளிடுவதற்குப் பலவகையான விசைமுக அமைப்புகள் இருந்த போதிலும், அதிகப் பயன்பாட்டினைக் கொண்டிருந்த காரணத்தினால், இந்த இரண்டு விசைமுகங்கள் மட்டுமே ஆப்பிள் இயங்குதளங்களில் சேர்க்கப்பட்டன.

ஆனால், கடந்த ஆண்டு வெளிவந்த ஐ.ஓ.எசின் 11ஆம் பதிகையில் இவற்றிற்கான பெயர்கள், வேறு பெயர்களாக மாற்றப்பட்டன. இந்தப் பெயர்மாற்றம் பல பயனர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. தாங்கள் விரும்பும் விசைமுகங்கள் அகற்றப்பட்டன எனவும், தமிழில் உள்ளிட ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் இனி வாய்ப்பில்லை எனவும், பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விசைமுகங்களுக்கானப் பெயர்கள் ஐ.ஓ.எசின் 12ஆம் பதிகையில் சரிசெய்யப்பட்டுள்ளன. இதே மாற்றம், இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கும் மெக் கணினிகளுக்கான மெக்.ஓ.எசின் புதிய பதிகையிலும் தென்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐ.ஓ.எசின் 12ஆம் பதிகையில் சரிசெய்யப்பட்டத் தமிழ் விசிமுகப் பெயர்கள்ஐ.ஓ.எசின் 12ஆம் பதிகையில் சரிசெய்யப்பட்டத் தமிழ் விசிமுகப் பெயர்கள்

தமிழ் 99 தமிழ் நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் விசைமுக அமைப்பாகும். அஞ்சல் விசைமுகம் மலேசியா உள்ளிட்ட மற்ற பல நாடுகளில் புகழ்பெற்று விளங்கி வருகின்றது.

ஐபோனில் உள்ள அஞ்சல் விசைமுகம்

மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறன் (படம்), அஞ்சல் விசைமுகத்தை 1993-ஆம் ஆண்டில் உருவாக்கி, அதனை இணையம் வழி பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கினார். இந்த விசைமுகம் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பரவியது. கணினியிலும் இணையத்திலும் தமிழை எழுதவும், பதிவேற்றம் செய்யவும் பயனர்களுக்குப் பேருதவியாக அமைந்தது.

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் 99 விசைமுகம், நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்ய விரும்புபவர்களும், ஆங்கிலப் புழக்கம் அதிகம் இல்லாதவர்களும் வேகமாகத் தட்டெழுத உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.

இந்த இரண்டு விசைமுகங்களும் நாளடைவில் கணினி மற்றும் இணையம் வழியான தமிழ் பயன்பாட்டுக்கானத் தர நிர்ணயமாக உருவெடுத்தன. இவற்றின் பெயர்களும் தமிழ் பயனர்களிடையே நிலைபெற்றும் வருகின்றன. ஒரு மில்லியன் பயனர்களுக்கு மேல் கொண்டிருக்கும் செல்லினம் உள்ளீட்டுச் செயலியிலும், இவ்விரண்டு விசைமுகங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஐபோனில் உள்ள தமிழ்99 விசைமுகம்

இந்தச் சூழல் காரணமாகத்தான், கடந்த ஆண்டு ஆப்பிள் இயங்கு தள மென்பொருளில் பெயர்மாறிச் சென்றத் தமிழ் விசைமுகப் பெயர்கள் மீண்டும் அவற்றின் அசல் பெயர்களுக்கு மாறி வந்துள்ளன!

நன்றி: செல்லியல்.காம்

 

Did you like this? Share it: