இடுகைக்கான விசையும் உணர்ச்சிக்குறி விசையும்

இடுகைக்கான விசையும் உணர்ச்சிக்குறி விசையும் தேவைப்படும் நேரங்களில் காணாமல் போகின்றதென்று சில பயனர்கள் கூறிவருகின்றனர். குறிப்பாக வாட்சாப், முகநூல், கூகுள்-பிளசு போன்ற செயலிகளில், செல்லினம் கொண்டு தமிழில் தட்டெழுதும்போது இந்தச் சிக்கலை எதிர்நோக்குவதாகக் கூறுகின்றனர்.

முதலில் வாட்சாப்பில் உள்ள நிலையைக் காண்போம்: வாட்சாப்பில் செய்தியை எழுதும்போது, அடுத்த வரிக்குச் செல்வதற்கு இடுகைக் குறி (Enter key) தேவைப்படுகிறது. இது சில வேளைகளில் தோன்றுவதில்லை. மாறாக அனுப்புவதற்கான (Send) விசையே தோன்றுகிறது. எவ்வாறு புதிய வரியைச் செய்தியில் சேர்ப்பது?

இதற்கான தீர்வு வாட்சாப்பின் அமைப்பில் (settings) இருக்கிறது. உங்கள் அரட்டைகள் அமைப்பில் ‘புகு விசை உங்களது செய்தியை அனுப்பும்‘ எனும் கட்டம் தேர்வு செய்யப் பட்டிருந்தால், விசைமுகத்தில் இடுகைக்குப் பதிலாக அனுப்பு விசையே தோன்றும். உங்களுக்கு இடுகை விசை வேண்டும் என்றால், இந்தக் கட்டத்தைத் தேர்வு செய்யக் கூடாது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ள இந்தத் திரையின் பிடிப்பைக் கீழே காணலாம்.

இடுகைக்கான விசையும் உணர்ச்சிக்குறி விசையும்
வாட்சாப் அமைப்புத் திரையின் ஒரு பகுதி – தமிழ் இடைமுகம்
இடுகைக்கான விசையும் உணர்ச்சிக்குறி விசையும்
வாட்சாப் அமைப்புத் திரையின் ஒரு பகுதி – ஆங்கில இடைமுகம்

இந்த அமைப்பு ஆண்டிராய்டு பதிகையில் மட்டுமே. ஐபோனில் இடுகைக்கான விசை இயல்பாகவே இருக்கும்.

கீழ்க்காணும் விசைமுகங்களில், முதலாவது மேலே குறிப்பிட்டக் கட்டத்தைத் தேர்வு செய்யப் பட்டிருக்கும்போது தோன்றுவது. இதில் இடுகைக்கு பதிலாக அனுப்பு விசை இருப்பதைக் காணுங்கள். இரண்டாவது அந்தக்கட்டம் தேர்வு செய்யப்படாதிருக்கும் போது தோன்றுவது. இங்கே இடுகை விசை தோன்றியுள்ளதையும் பாருங்கள்.

‘இடுகை’ விசைக்குபதில் ‘அனுப்பு’ விசை
இடுகை விசை அடங்கிய விசைமுகம்

உணர்ச்சிக் குறிகள்

சரி இடுவதற்கும் அனுப்புவதற்கும் உள்ள போராட்டம் தீர்ந்தது. இனி உணர்ச்சிக் குறிகளுக்கான (emoji) விசையை எங்கே தேடுவது?

மேலே உள்ள விசைமுகங்களில் தோன்றும் இடுகை விசையையோ, அனுப்பு விசையையோ சில நொடிகள் அழுத்தியவாறே வைத்திருந்தால், உணர்ச்சிக் குறிகளுக்கான விசை தோன்றும். இதனைத் தொட்டு உணர்ச்சிக் குறிகளைப் பார்க்கலாம். கீழே உள்ள படம் இந்த விசையைக் காட்டுகிறது.

உணர்ச்சிக் குறிகளுக்கான விசை
உணர்ச்சிக் குறிகளுக்கான விசைமுகம்

இதே முறையைப் பின்பற்றி வாட்சாப் மட்டுமின்றி மற்ற எல்லா செயலிகளிலும் உணர்ச்சி குறிகளை நீங்கள் எளிதாக உள்ளிடலாம்.

மேலும் குழப்பங்கள் இருப்பின், வழக்கம்போல் sellinam dot help at gmail dot com என்னும் முகவரிக்கு எழுதுங்கள். இயன்றவரை உதவுகின்றோம்!

 

தொடர்புடைய பதிவுகள்:
1. உணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்!
2. வாட்சாப் செயலியில் எழுத்துரு வித்தை
3. வாட்சாப் பகிர்வுகளிலும் இனி படங்களின் மேல் கிறுக்கலாம்!

Did you like this? Share it: