ஐ.ஓ.எசுக்கான புதிய வாட்சாப் பதிகை வெளிவந்துள்ளது. இதில், உரையாடல்களைப் பூட்டிப் பாதுகாக்கும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு வெளிவந்த ஐபோன் 5s முதல் விரல் அடையாளத்தைக் கொண்டும், 2017ஆம் ஆண்டு வெளிவந்த ஐபோன் 10 (X) முதல் முக அடையாளத்தைக் கொண்டும், பயனர் விவரங்களைப் பாதுகாக்கும் கூறுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியினை பல செயலிகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று வாட்சாப்பும் இணைந்துள்ளது.
இந்தப் பாதுகாப்பு வசதியை அமைத்தவுடன், விரல் அடையாளத்தையோ (டச் ஐடி), முக அடையாளத்தையோ (ஃபேஸ் ஐடி) செலுத்திய பிறகே உரையாடல்களைத் திறக்க முடியும். திறன்பேசியை மறந்து விட்டுச் சென்றாலும் மற்றவர் உங்கள் உரையாடல்களைப் பார்த்துப் படிப்பதை இந்தப் பாதுகாப்பு வசதி தடுக்கும்.
இந்த வசதியைக் கொண்டு ஒருசிலரின் உரையாடல்களை மட்டும் பாதுகாக்க இயலாது. ஒட்டுமொத்தமாக அனைத்து உரையாடல்களையும் பூட்டிப் பாதுகாக்க மட்டுமே இயலும்.
முகநூல் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்சாப்பில் சேர்க்கப்பட்ட இந்த வசதி, அவர்களின் மற்றச் செயலிகளான இன்ஸ்டாகிராமிலும் மெசஞ்சரிலும் விரைவில் சேர்க்கப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.