தமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது!

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2050 சித்திரை திங்கள் 7ம் நாள் “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியது தமிழ் மொழி விழா.

அன்று சங்கம் வளர்த்த தமிழ், இன்று சிங்கப்பூர் தமிழர்களாலும்  வளர்க்கப்படுகிறது. தமிழ் தனது பெருமை, மேன்மை, மரபு, என்று எதையும் விட்டுக்கொடுக்காமல் இன்றளவும் அதே அழகுடனும், சுவையுடனும் இயங்கி வருகிறது என்றால், அது தன்னை காலத்திற்கேற்றார்போல் புதுப்பித்துக்கொண்டே வளர்ந்து வருகிறது என்றே பொருள். இன்றைய உலகமயமாதல் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழை ஈடுகொடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு இணையதளமும், தகவல் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை மையக்கருத்தாகக் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தினரால் உமறுபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ்மொழி விழா தழிழுக்கே உரிய சுவையுடன் சிறப்பாக நடைபெற்றது.  

அண்ணாமலை பல்கலைக்கழக  முன்னாள் மாணவர் சங்கத்தினர் , வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவோடு 6வது ஆண்டாக தமிழ்மொழி விழாவை வெற்றிகரமாக நடத்தினர். ஆண்டுதோறும் மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எண்ணிக்கை பெருகிய வண்ணமே உள்ளது. இதன் வழியாக அவர்கள் தமிழின்பால் கொண்ட ஈர்ப்பினை உணர முடிகிறது. தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற கூற்றும் பொய்யாகி போனது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை உயிரோட்டம் மிக்க மொழியாக வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் காலகட்டத்தில் உள்ளோம். தகவல் தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் சிங்கப்பூரில் இந்நிகழ்ச்சி நடந்தது இன்னும் சிறப்பு.

தமிழ் மொழி விழா – சிறப்புரை

இந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டவர் திரு. முத்து நெடுமாறன் அவர்கள். தமிழை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்றதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. கணினியிலும் தமிழுக்கு வடிவம் கொடுத்தவர். இவர் பேசிய பிறகு காற்று நிறைந்த அரங்கம் கருத்து நிறைந்த அரங்கமாக மாறியது.  எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ் என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை பயனுள்ள தகவல்கள் நிறைந்த களஞ்சியமாகவே அமைந்தது. தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை எவ்வாறு உயர்த்துவது, சமூக கூட்டு முயற்சி மற்றும் நம் பயன்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலமே நம் இலக்கை அடைய முடியும் என்ற சிந்தனைகள் தமிழ்மொழி விழாவில் வலியுறுத்தப்பட்டன.

விழாக் கருப்பொருளை ஒட்டி முத்து நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார்

மாணவர்களுக்கான ஆய்வுப் போட்டிகள்

இவ்விழாவின் சிறப்பம்சமாக,  மாணவர்கள் தமிழின்பால் கொண்ட பற்றையும், ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விழா தலைப்பில் ஆய்வு போட்டிகள் நடைபெறும். மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு தங்கள் படைப்புகளைப் படைப்பார்கள். மாணவர்களின் ஆய்வுத்திறன், பேச்சுத்திறன், படைப்பைப் பார்வையாளர்களிடம் எளிமையாகக் காட்சிப்படுத்தும் திறன், போன்றவைகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறாக இந்த ஆண்டும் உயர்நிலைப்பள்ளி,  தொடக்கக்கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 45 மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது கடந்த 13-04-2019 அன்று உமறுபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. மாணவர் “எதிர்காலத்  தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற விழா தலைப்பில் தங்கள் ஆய்வு படைப்புகளை ஆர்வத்துடன் படைத்து விழாவிற்கு வலிமை சேர்த்தனர். உயர்நிலை( 1, 2 ), உயர்நிலை (3, 4 ), தொடக்கக்கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடைப்பெற்றது.

உயர்நிலைப் பள்ளி 1, 2 மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு நடுவர்களாக திரு. ரஜித் அகமது, திரு. நாராயணன் ஆண்டியப்பன் மற்றும் திருமதி. கஸ்தூரி இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

உயர்நிலைப் பள்ளி 3, 4 மாணவர்களுக்கு நடுவர்களாக திரு. ரவிச்சந்திரன் சோமு, திரு. சு. கல்யாண்குமார் மற்றும் முனைவர் திருமதி. வி. தேன்மொழி ஆகியோர் கலந்துகொண்டார்கள். 

விழாநாள் 20-04-2019 அன்று வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. உயர்நிலை (1, 2) பிரிவில் யுவபாரதி பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரபாகரன் சுபிட்ஷா முதல் பரிசினை வென்றார். உயர்நிலை (3, 4) பிரிவில் ஜூரோங் மேற்கு உயர்நிலைப்பள்ளியைச் சேரந்த சுபத்ரா சுந்தர்பாபு மற்றும் வாசுப்ரியா ஆகியோர் முதல் பரிசினை வென்றனர்.  தொடக்கக்கல்லூரி பிரிவில் செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த அருணா கந்தசாமி மற்றும் ரோமா தயாள் ஆகியோர் முதல் பரிசினை வென்றனர். 

தமிழ் மொழி விழா - மாணவர்கள் படைப்பு
வெற்றிப் பெற்ற மாணவர்கள் தங்கள் ஆய்வினைப் படைக்கின்றனர்

நிகழ்ச்சியின் வரவேற்புரையை சங்கத் தலைவர் திரு. நெடுஞ்செழியன் அவர்கள் வழங்கினார். வளர் தமிழ் இயக்க தலைவர்  ராஜாராம் உட்பட பல அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அண்ணாமலை பல்பலைக்கழக முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நன்றி உரையை செயளாலர் ராஜேஷ் அவர்கள் வழங்கினார். விழாவினைத் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்புபாக வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்தார் ஏற்பட்டுக் குழுத் தலைவர் திரு முரளி கலியமூர்த்தி அவர்கள். 

“தமிழைப் பயன்படுத்துவோம், தமிழில் பெயர் சூட்டுவோம்”

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்)

இணைப்பு: விழாவில் எடுக்கப்பட்டக் காணொளி

Did you like this? Share it: