சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்!

தமிழ்த் தொழில்நுட்பர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பில் உருவான முரசு அஞ்சல், செல்லினம் எனும் செயலிகளைக் கொண்டு, கணினியிலும் கையடக்கக் கருவிகளிலும் தமிழில் உள்ளிட உலகம் எங்கும் வாழும் இலட்சக் கணக்கான பயனர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

சிங்கப்பூரிலும் முரசு அஞ்சல் அந்நாட்டுக் கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பள்ளிகளிலும் கல்விக் கழகங்களிலும் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வத் தமிழ் மென்பொருளாக விளங்கி வருகிறது.

இந்த வரிசையில், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியமும், முரசு அஞ்சல் மென்பொருளைப் அதன் நூலகங்களில் அறிமுகப்படுத்தி, பயனர்களுக்குப் பயன்மிக்க பயன்பாடு ஒன்றையும் தமிழில் வழங்கியுள்ளது.

பொதுவாக நூலகங்களுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் நூல்களைத் தேடுபவர்கள் நூலின் பெயரையோ, எழுத்தாளரின் பெயரையோ அங்குள்ளக் கணினிகளில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தே தேட வேண்டியதிருந்தது.

அவ்வாறான தேடல்களுக்குக் கிடைக்கும் முடிவுகள், நூறு விழுக்காடு சரியாக இருந்ததில்லை. அதோடு, நூலின் பெயர்களும் கணினித் திரையில் ஆங்கிலத்திலேயே தோன்றும் நிலையும் நிலவி வந்தது.

தமிழிலேயே தேடலாம்

சிங்கப்பூர் நூலகக் கணினிகளில் அண்மையில் பொருத்தப்பட்டிருக்கும் முரசு அஞ்சல் செயலிகளின் வழி, இனி தமிழிலேயே தட்டெழுதித் தேடும் வசதியை, அதன் நூலக வாரியம் உருவாக்கியுள்ளது.

பயனர்களுக்குத் தமிழில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தேடுதல் இயந்திரத்தில் மொழித் தேர்வை, தமிழ் எனத் தேர்ந்தெடுத்து, நூலின் பெயரையோ நூலாசிரியரின் பெயரையோ ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தாலும், இந்தப் பெயர்கள் தமிழிலேயே திரையில் தோன்றும்.

எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்களைத் தேடுவோர், இதற்குமுன் Jeyamohan, Jeyamogan, Jayamohan, Jayamogan என பலவாறு ஆங்கில எழுத்துகளில் தட்டெழுதித் தேடுவர். அந்தத் தேடல்களுக்கான முடிவுகளும் ஆங்கில எழுத்துகளிலேயே கிடைக்கும். ஆனால், ஜெயமோகன் எழுதிய நூல்கள் பல இருந்தாலும், அவரது பெயர் ஆங்கிலத்தில் எவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே தேடல் முடிவுகள் கிடைக்கும். தேடல்கள் தோல்வியிலும் முடியலாம், அல்லது அவரது எல்லா நூல்களும் பட்டியலில் இல்லாமலும் போகலா​ம்.

ஆனால் இப்போது முரசு அஞ்சல் உள்ளீட்டைக் கொண்டு ஆங்கிலத்தில் தட்டெழுதினாலும் “ஜெயமோகன்” எனும் பெயர் தமிழிலேயே தெரியும். இவ்வாறு தேடும்போது, ஜெயமோகனின் அனைத்து நூல்களும் தேடல் முடிவுகளில் பட்டியலிடப் படும். விருப்பமான நூலைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பும் அமையும்.

ஆங்கில வழி உள்ளீடு மட்டும் அல்லாமல், தமிழ்-99 விசைமுக அமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு, தமிழிலேயே தட்டெழுதிப் பழகியவர்கள், எந்தச் சிக்கலும் இன்றித் தமிழிலேயே தேடலாம்.

தமிழ் நூல்கள் நிறைய அளவில் இரவல் வாங்கப்படவேண்டும், பயனர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும் என்ற தங்களின் தொடர் முயற்சியின் இன்னொரு வெளிப்பாடுதான் எளிமையாகத் தமிழிலேயே தேடுவதற்காக உருவாக்கப் பட்டிருக்கும் இந்த ஏற்பாடு என்கிறார் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகளுக்கான தலைவர், அழகிய பாண்டியன்.

தமிழிலேயே தேடலாம் என்பதை விளக்குகிறார் அழகிய பாண்டியன்.
தமிழிலேயே தேடலாம் என்பதை விளக்குகிறார் அழகிய பாண்டியன்.

இதுகுறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திக்கு அவர் வழங்கிய பேட்டியை இந்த இணைப்பில் காணலாம்:

தற்போது சிங்கப்பூரின் அனைத்து தேசிய நூலகங்களிலும் முரசு அஞ்சல் தமிழ் மென்பொருள் பொருத்தப்பட்டு, நூல்களைத் தமிழிலேயே தேடும் முயற்சிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

நன்றி : செல்லியல்

காண்க:
1. நா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
2. தமிழ் மொழி விழா – சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தது!

Did you like this? Share it: