தமிழ் எழுத்துரு வளர்ச்சி குறித்து முத்து நெடுமாறன் உரை

கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு ஆவணகமும் ஊரூப் (Huruf) எனப்படும் எழுத்துருவாக்க அமைப்பும் இணைந்து முத்து நெடுமாறனின் உரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எழுத்துரு வடிவமைப்பாளரும் மின்னுட்ப வல்லுனரும் செல்லினத்தின் தோற்றுனருமான முத்து நெடுமாறன், “தமிழ் எழுத்துருக்களைக் கண்டுபிடித்தல்: அன்றாடத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மொழியை இணைத்தல்” (Finding Tamil Typography: Linguistic Inclusion in Everyday Technology)  எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி பிற்பகலில் கோலாலம்பூரில் உள்ள மலேசிய வடிவமைப்பு ஆவணகத்தில் நடைபெற்ற இந்த உரை நிகழ்ச்சியில், 1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலும், அனைத்துலக அளவிலும் தமிழ் அச்சுத் துறை இருந்த நிலை, அச்சுக் கோப்பு முறைக்கு முழுக்க முழுக்க உலோகத்திலான எழுத்துருக்களைப் பயன்படுத்தியதில் எழுந்த சிக்கல்கள், இவற்றைத் தீர்க்க அவருக்கு ஆழ்ந்து பதிந்திருந்த குறிக்கோள், கணினிகளில் தமிழ் எழுத்துருக்களைச் சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அதன் பின் கையடக்கக் கருவிகளில் பன்மொழிப் பயன்பாட்டிற்கு அவர் ஆற்றிய பங்கு குறித்து படங்களைக் கொண்டு விளக்கங்களைத் தந்தார், முத்து நெடுமாறன்.

பல வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த இந்தப் படைப்பு, அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் பெரும்பாலும் தமிழர் ஆல்லாதோரே. ஆப்பிள் ஐபோன், ஐபேட், மெக் கணினிகள், அமேசானின் கிண்டல் மற்றும் சில ஆண்டிராய்டு கருவிகளிலும் உள்ள தமிழ் எழுத்துருகள் ஒரு மலேசியரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து பெருமை கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட பல சுவையான கேள்விகளுக்கு முத்து நெடுமாறன் தெளிவாக பதிலளித்தார்.

அந்த உரையின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் ‘செல்லியல்’ யூடியூபு அலையில் காணலாம்:

Did you like this? Share it: