ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் செல்லினம்

இரண்டு நாட்களுக்குமுன் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் (iOS 13) சேர்க்கப்பட்டுள்ள பல புதிய வசதிகளை, பயனர்கள் வரவேற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தப் பதிகையின் புதிய வரவான ‘கருமை நிலை’ (dark mode) பெரும்பாலோரைக் கவர்ந்துள்ளது.

ஆங்கில உள்ளிடு முறையில், விரலை எடுக்காமலேயே விசைப்பலகையின் மேல் கிறுக்கித் தட்டெழுதுவது (swipe input) இயல்பாகவே ஐ.ஓ.எசில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்காக வேறொரு உள்ளீட்டுச் செயலியைத் தரவிறக்கம் செய்ய இனித் தேவை இல்லை. இந்த வசதி மற்ற மொழிகளுக்கு இன்னும் விரிவாக்கப்படவில்லை என்றாலும், ஆங்கிலம் பயன்படுத்தும் பலர் இதனை வரவேற்கின்றனர்.

ஆப்பிளின் உள்ளிடுமுறைகளோடு செல்லினம் போன்ற மற்ற மேம்பாட்டாளர்கள் உருவாக்கும் உள்ளிடுமுறைகளும் சிறப்பாகவே இந்த ஐ.ஓ.எசின் புதிய பதிகையில் இயங்கி வருகின்றன. சொற்களின் பரிந்துரைகள், பிழைத்திருத்தங்கள், உணர்ச்சிக்குறிகளின் பரிந்துரைகள் (emoji suggestions) போன்றவை செல்லினத்தின் சிறப்புக் கூறுகள். இந்தக் கூறுகள் ஐ.ஓ.எசின் தமிழ் விசைமுகங்களில் இல்லை.

இருப்பினும் ஒரே ஒரு சிறிய சிக்கல் ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் எழுந்துள்ளது.

மொழித்தாவலுக்காகப் பயன்படுத்தப்படும் ‘உலகம்’ சின்னத்தைக் கொண்ட விசையை, சில ஐபோன்களில் காண முடியவில்லை. குறிப்பாக ஐபோன் 10க்குமுன் (iPhone X) வெளியிடப்பட்ட ஐபோன்களில் இந்த விசை தோன்றுவதில்லை. ‘உலகம்’ விசை தோன்றாத ஐபோன் எட்டில் எடுக்கப்பட்டப் படங்களையும், தோன்றும் ஐபோன் பத்தில் எடுக்கப்பட்டப் படம் ஒன்றையும், கீழே காணலாம்.

உலகம் விசை இல்லாத செல்லினத்தின் அஞ்சல் விசைமுகம் - iphone 8.
ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் ‘உலகம்’ விசை இல்லாத செல்லினத்தின் அஞ்சல் விசைமுகம். ஐபோன் 8
உலகம் விசை இல்லாத செல்லினத்தின் தமிழ்-99
ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் ‘உலகம்’ விசை இல்லாத செல்லினத்தின் தமிழ்-99 விசைமுகம். ஐபோன் 8

ஐபோன் 10க்குப் பிறகு வெளிவந்த ஐபோன்களில் முழுத்திரையும் பயன்படுத்தப்படுவதால், மொழித்தாவலுக்கான விசை, விசைமுகத்தின் கீழே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே விசைமுகத்தில் இது இருக்க வேண்டியத் தேவை இல்லை. முழுத்திரை இல்லாத பழைய ஐபோன்களில் விசைமுகத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். இங்குதான் சிக்கல்!

ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் உலகம் விசை உள்ள செல்லினத்தின் அஞ்சல் விசைமுகம். ஐபோன் 10
ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் ‘உலகம்’ விசை கீழே உள்ள செல்லினத்தின் அஞ்சல் விசைமுகம். ஐபோன் 10

தீர்வு : இன்னும் இரண்டே நாட்களில் ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகை

இந்தச் சிக்கலுக்கானத் தீர்வு இன்னும் இரண்டே நாட்களில் வெளிவர இருக்கும் ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகையில் உள்ளது. இந்தப் பதிகையில் எடுக்கப்பட்டத் திரைப்பிடிப்புகளைக் கீழேக் காணலாம்.

ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகையில் செல்லினத்தின் அஞ்சல்
ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகையில் ‘உலகம்’ விசை தோன்றும் செல்லினத்தின் அஞ்சல் விசைமுகம் – கருமை நிலையில். ஐபோன் 8
ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகையில் செல்லினத்தின் தமிழ்-99
ஐ.ஓ.எசின் 13.1ஆம் பதிகையில் ‘உலகம்’ விசை தோன்றும் செல்லினத்தின் தமிழ்-99 விசைமுகம் – கருமை நிலையில். ஐபோன் 8

Did you like this? Share it: