முரசு தமிழ் உள்ளீட்டுச் செயலி, 1985ஆம் ஆண்டு மலேசியாவில் உருவாக்கம் கண்டது. அப்போது மைக்குரோசாப்டு விண்டோசின் இயக்கம் பரவலான பயன்பாட்டில் இல்லை. கணினியில் ஆங்கிலத்தை மட்டுமே காணமுடியும் என்ற சூழலில், கணினியின் உட்கட்டமைப்பையே மாற்றித் தமிழ்ப் புழக்கத்தைக் கொண்டு வந்தது முரசு செயலி. இதன் பயன்பாடு இணையத்திற்கு வந்தபோதே ‘முரசு அஞ்சல்‘ என்று பெயர் மாற்றம் கண்டது. 2005ஆம் ஆண்டு, கைப்பேசிகளுக்காக வெளியிடப்பட்ட செல்லினத்திற்கும் முரசு அஞ்சலே அடிப்படையாக அமைந்தது. தொடக்க காலம் தொட்டு இன்றுவரை இந்தச் செயலியைப் பயன்படுத்திவரும் தமிழாசிரியர், ஜான்சன் விக்டர் அவரது அனுபவத்தை இந்தக் கட்டுரைவழிப் பகிர்கிறார்.
கட்டுரை ஆசிரியர் ஜான்சன் விக்டர்
முரசு செயலியை நான் 1987ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறேன். நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் ‘ஒரு காட்டிலே சில பூச்சிகள்’ என்ற நாடகத்துக்கு வெளியிடப்பட்ட சிறப்பிதழில்தான் முதன் முதலில் முரசு பயன்பட்டது (என்று நினைக்கிறேன்). அந்த இதழுக்குத் தமிழில் டைப்செய்ய ஆட்கள் தேவைப்பட்டதால், அதிகமான ஆர்வத்தின் நிமித்தம் அந்தப் பணிக்கு நான் முன்வந்தேன். அக்காலகட்டத்தில் அது டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே செயல்பட்டது.
மறு ஆண்டில், பகாங் காராக்கில் உள்ள ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி தமிழ்ச் செயலியைக் கொண்ட கணினியை வாங்கியுள்ளது என்ற செய்தியைத் தமிழ் நேசனில் கண்டேன். அப்போது லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்தேன். அந்தச் செய்தியைக் கண்டவுடன் அந்தப் பள்ளியில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 1989ம் ஆண்டில் எனக்கு அதே பள்ளியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது உண்மையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.
ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியார் தங்கவேலு (கழுத்துப்பட்டையுடன்) அவர்களுடன் கட்டுரை ஆசிரியர் ஜான்சன் விக்டர் (முன் வரிசை). தமது வகுப்பு மாணவர்களுடனும் மற்ற ஆசிரியர்களுடனும். 1990ஆம் ஆண்டுகளின் தொடக்கம்.
பள்ளிக்குச் சென்ற முதல் ஆண்டில், ஆசிரியர் பி. எம். மூர்த்தி அச்செயலியைப் பயன்படுத்தி டைப் செய்வதை நான் அருகில் நின்று ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். என் ஆர்வத்தைக் கண்ட அவர், கணினியைப் பயன்படுத்த என்னிடம் கொடுத்தார். நான் ஏற்கனவே கல்லூரியில் அந்தச் செயலியைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற செய்தி அப்போது அவருக்குத் தெரியாது.
தலைமையாசிரியர் தங்கவேலு, மூத்த ஆசிரியர் மூரத்தி ஆகிய இருவரின் சீரிய தலைமைத்துவத்தோடு, என்னுடைய கணினி ஆர்வம் ஒரு காட்டுப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழ்ப்பள்ளியின் புகழ், நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. பகாங் மாநில அளவில் நடத்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் சோதனைத் தாள்களைக் கணினியில் டைப் செய்து வெளியாக்கினோம். அக் கால கட்டத்தில் மற்ற ஆசிரியர்கள் தங்கள் கேள்வித் தாள்களைக் கையால் எழுதியே வெளியிட்டு வந்தனர்.
1988ஆம் ஆண்டு சூன் 7ஆம் நாள் ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் தமிழ்க் கணினி தொடக்கவிழாவையொட்டி வெளியிடப்பட்ட மலர்.
1994ம் ஆண்டில் நான் சிலாங்கூரில் உள்ள பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி மிகவும் முற்போக்கோடு செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், புதிதாக நான் செல்லும் பள்ளி மேலும் சிறப்பாக இருக்கும் என்று நம்பியிருந்த எனக்கு, அதிக ஏமாற்றம்தான் காத்திருந்தது.
“ஆசிரியர்கள் கணினியைத் தொடக் கூடாது” என்று தலைமையாசிரியர் உத்தரவு போட்டார். நாங்கள் கணினியைத் தொட்டு விட்டால் அது கெட்டுப் போகும் என்று மருட்டினான் கிராணி. கணினி பயன்படுத்துவதற்கு எனக்குச் சான்றிதழ் இல்லை என்று குற்றஞ் சாட்டினார் ஒரு மூத்த ஆசிரியர். கணினியில் நாங்கள் ‘கேம்’ விளையாடுகிறோம் என்று பழி சுமத்தினார் இன்னொரு மூத்த ஆசிரியர். கணினி வாங்குவதற்கு அரசாங்கத்தில் நான் செய்த மனு பாரத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டது பிபிடி (மாவட்டக் கல்வி அலுவலகம்).
வேறு வழி இல்லாமல் பேங் ராக்யாட்டில் கடன் எடுத்து ஒரு கணினியை வாங்கினேன். 1,200 ரிங்கிட்டுக்கு முரசு செயலியை வாங்கினேன். அக் கால கட்டத்தில் இவ்வளவு பணம் கொடுக்காமல் தமிழைப் பயன்படுத்த முடியாது, ஆனால், இன்றோ பல இலவச மென்பொருள்கள் வந்து விட்டன. அதனோடு ஆயிரக்கணக்கான தமிழ் எழுத்துருக்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இன்று முரசு அஞ்சல் பல பரிமாணங்களைக் கடந்து அஞ்சல் 10 என்ற பெயருடன் செயல்படுகிறது. மொத்தம் 25 யுனிகோட் எழுத்துகளுடன் வெளிவருகின்றது. இந்த 25 எழுத்துகள் ஒவ்வொன்றும் நமக்குப் புத்துயிர் தரும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது என்பதால், வேறு எழுத்துகளுக்கு நான் செல்வதில்லை. குறிப்பாக உரை (டெக்ஸ்), தலைப்பு (கேப்ஷன்), அலங்காரம் (டெகோரடிஃப்) என்று இந்த 25 எழுத்துகளும் பிரிக்கப்பட்டுள்ளன. அதனோடு சிற்பங்களைக் (தமிழ் டிங்பெட்) கொண்ட ஒரு எழுத்துருவும் உள்ளது.
இடையில் அச்சுக்கூடம், கன்வெர்டர், தமிழ் கிளிப் ஆர்ட், தமிழ் மின்னஞ்சல் போன்ற துணைச் செயலிகளையும் முரசு வெளியிட்டு வந்தது. ஆனால், அவை இப்போது பயன்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அஞ்சல் 10ல் லிப்கோ தமிழ் பேரகராதியும் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது எத்தனை பேருக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று தெரியவில்லை. இந்த மென்பொருளோடு வெளியாகும் பிடிஎஃப் ரைட்டரையும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
எங்கள் ஆலயத்தின் வாராந்தரச் செய்தியேட்டைத் தயாரிப்பதற்கு எனக்கு இந்த மென்பொருள் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக முல்லை என்ற எழுத்துரு இடத்தைச் சிக்கனப்படுத்தும் எழுத்துருவாக அமைகிறது. ஆங்கிலத்தில் 2 ஏ4 பக்கத்தில் வெளியாகும் செய்தியேட்டைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டியிருப்பதால் முல்லை எழுத்துரு பயனுள்ளதாக அமைகிறது. பெரும்பாலும் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தால் அதன் அளவு பெரிதாக இருக்கும். ஆனால், முல்லை இடச் சிக்கனத் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனையே முதன்மையாகப் பயன்படுத்துகிறேன்.
இந்த மென்பொருள் மேலும் பல புதிய மற்றும் அற்புதமான எழுத்துருக்களோடு வெளியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
இதன் தற்போதைய விலை விபரங்கள் எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக நீங்கள் என்னைப் போன்று ஆயிரம் ரிங்கிட் கொடுத்து வாங்கத் தேவையில்லை. நிச்சயமாக உங்கள் ‘விரலுக்குத் தகுந்த வீக்க விலை’ தான் இருக்கும். ஓர் உன்னதமான தமிழ்ச் செயலிக்கு நீங்கள் கொடுக்கும் விலை மிகவும் குறைவு என்று மட்டுமே நான் உத்திரவாதம் அளிக்கிறேன்.
அப்படியே, ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்? என்று கேட்கிறீர்கள் என்றால், உங்களுக்காக இலவசப் பதிப்பும் இருக்கிறது. ஆனால், நிச்சயமாக உங்களுக்கு 25 எழுத்துருக்கள் கிடைக்காது. இணைமதி, இணைக்கதிர், அருள்மதி, வரிசை என்ற 4 எழுத்துருக்களுடன் முதல் நிலைப் பதிப்பு வெளியாகிறது. அதை http://muthal.anjal.net/ என்ற தளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.