செல்லினம் 5.0ஆம் பதிகைக்கு மேம்படுத்திய பயனர் சிலர், தமிழ் விசைமுகங்கள் எதனையும் தேர்வு செய்ய இயலவில்லை என்று செல்லினம் உதவிக் குழுவினருக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர்.
உதவிக் குழுவினர் ஆய்வுகள் நடத்தியதில், சில கருவிகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கூட சேர்க்கப்படாத சூழலில் இந்த சிக்கல் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதை அறிந்தோம்.
ஆங்கிலம் மட்டுமே பயன்பாட்டு மொழியாக அமைக்கப்பட்டால், தமிழ் விசைமுகங்கள் தாமாக இயக்கப் படாது. செல்லினம் அமைப்பைக் கொண்டுதான் நாமாக அவற்றை இயக்க வேண்டும்.
தமிழ் விசைமுகங்கள் ஒன்றுமே இல்லாத சூழல்
பயன்படுத்தப்படும் மொழிப்பட்டியலில் தமிழ் சேர்க்கப்படாத கருவிகளில், செல்லினத்தின் அமைப்பைக் கொண்டு தமிழ் விசைமுகங்களைச் சேர்க்கலாம்.
இதனை விளக்க, காணொலி ஒன்றை உருவாக்கியுள்ளோம். கீழ்க்காணும் இணைப்பில் அதனைக் காணலாம்.
‘ எனக்கு தமிழ்-99 விசைமுகமே வேண்டும்.’
தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாக இருந்தும், இயல்பான விசைமுகம் பல வேளைகளில் முரசு அஞ்சல் எனத் தேர்வு செய்யப்பட்டிருக்கும். தமிழ்-99 விசைமுகத்தைப் பயன்படுத்துவோர், இதனை எளிதாகத் தமிழ்-99க்கு மாற்றிவிடலாம். இந்த மாற்றத்தை எப்படிச் செய்வது என்பதை விளக்கவும் ஒரு காணொலியை உருவாக்கியுள்ளோம்:
முறையான, நிலையான தீர்வு
தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாக இல்லாத கருவிகளில் செல்லினம் அமைப்புகளைக் கொண்டு தமிழ் விசைமுகங்களைச் சேர்க்கலாம் என்பதை மேலே விளக்கினோம்.
செல்லினம் வழியான இந்தச் சேர்க்கை ஒரு தீர்வை வழங்கினாலும், தமிழை ஒரு பயன்பாட்டு மொழியாகச் சேர்ப்பதே சிறந்த, நிலையான தீர்வு. முதன்மை மொழியாக இருக்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. இருந்தால் சிறப்பு. ஆனால் இரண்டாம் மொழியாக இருந்தாலே போதுமானது.
புதிய ஆண்டிராய்டு கருவிகள் பெரும்பாலானவற்றில் தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனைத் தேர்வு செய்ய உங்கள் கருவியின் அமைப்புக்குச் செல்லவேண்டும் (செல்லினத்தின் அமைப்பு அல்ல).
இதையும் விளக்க, ஒரு காணொலியை உருவாக்கியுள்ளோம்:
மேலும் சிக்கல் இருந்தால் தயங்காமல் எங்களை மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளுங்கள்: sellinam.help@gmail.com
தொடர்புடையவை: