பரிந்துரையில் தொடர்புகளின் பெயர்கள்

பரிந்துரையில் தொடர்புகளின் பெயர்கள் புதிய செல்லினத்தில் கிடைக்கவில்லை என்று சில பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பெயர்களை வர வைப்பது எப்படி என்பதனை, இக்கட்டுரையின் வழி விளக்குகிறோம்.

ஆண்டிராய்டுக்கான செல்லினம் 5இல், தனியுரிமை பாதுகாப்பு குறித்து செய்யப்பட்ட மாற்றங்களில், தொடர்பு பெயர்களின் பயன்பாடும் ஒன்று. பழைய செல்லினத்தில் இதற்கான இசைவு (permission) பதிவிறக்கத்தின் போதே பெறப்பட்டது. எனவே தொடர்புகளின் பெயர்கள் இயல்பாகவே பரிந்துரையில் தோன்றின.

ஆண்டிராய்டு 6.0 முதல், இதுபோன்ற ‘முன்கூட்டியே இசைவுகளைப் பெறும்’ வழி, மாற்றப்பட்டது.

புதிய ஆண்டிராய்டு பதிகைகளில், பயனர்களுக்கு, அவர்களின் தொடர்புகள் பட்டியலில் உள்ள பெயர்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை, தெளிவாக விளக்கி, அதற்கான தனிப்பட்ட இசைவினைப் பெறவேண்டும்.

இதையே ஆண்டிராய்டுக்கான செல்லினம் 5.0 செய்கிறது.

ஐபோன், ஐபேட் கருவிகளுக்கான செல்லினத்தின் பரிந்துரையில், தொடர்புகளின் பெயர்கள் தோன்றா. தனியுரிமை பாதுகாப்புக் காரணமாக, தொடர்பு பெயர்களை தேவைப்படும்போது பெறுவதற்கான வாய்ப்பினை ஐ.ஓ.எஸ் இயங்குதளம் வழங்குவதில்லை.

தொடர்புகளின் பெயர்களைப் பெறுவதற்கான இசைவு

ஆண்டிராய்டில் இந்த இசைவினை வழங்க பயனர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

முதல் வாய்ப்பு, செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்து, முதன்முதலாகப் பயன்படுத்தும் போது வழங்குவது. இந்த இசைவினைப் பெறுவதற்கு, பரிந்துரைகள் தோன்றும் இடத்தில் செல்லினம் ஒரு விண்ணப்பத்தைக் காட்டும்.

பரிந்துரையில் தொடர்புகளின் பெயர்கள் - விண்ணப்பம்
பரிந்துரையில் தொடர்புகளைக் காட்டக் கோரப்படும் விண்ணப்பம்

விண்ணப்பத்தின் மீது தொட்டு, அதன் விழைவாகத் தோன்றும் உரையாடல் கட்டத்தில் இசைவினை வழங்கலாம்.

இந்த விளக்கத்தை, பதிவிறக்க வழிமுறைகளைக் காட்டும் காணொளி இறுதி கட்டத்தில் வழங்குகிறது.

இரண்டாவது வழிமுறை

மேற்குறிப்பிட்ட இடத்தில், தவறுதலாக இசைவினை வழங்க மறுத்து விட்டாலும், தொடர்புகளின் பெயர்களை செல்லினம் பரிந்துரையில் காட்டாது. இந்தச் சூழ்நிலையில் வேறு ஒரு வாய்ப்பும் இருக்கிறது. ஆண்டிராய்டின் அமைப்புச் செயலியின் வழி இதற்கான இசைவினைச் சேர்க்கலாம்.

அதற்கான வழிமுறைகளை, கீழுள்ள படத்தொகுப்பு காட்டுகிறது. இது கூகுள் பிக்சல் கருவியில் இயங்கும் ஆண்டிராய்டு 11இல் பதிவு செய்யப்பட்டது. உங்கள் கருவியில் இது சற்று மாறுபட்டிருக்கலாம்.

குறிப்பு: தொடர்புகளின் பெயர்கள் தமிழில் இருந்தால், சில கருவிகளில் இசைவு வழங்கப்பட்டாலும் பரிந்துரைகளில் தோன்றுவதில்லை. இது ஒரு வழுவாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். அவ்வாறு உங்களுக்குத் தோன்றினால், செல்லினம் வழி எங்களுக்குத் தெரிவிக்கவும்.

தொடர்புடையவை:

  1. செல்லினம் : ஆண்டிராய்டில் முறையாக அமைத்தல்

Did you like this? Share it: