புதிய ஐபோன்களுக்கான செல்லினம் 5.0 வெளியிடப்பட்டது

புதிய ஐபோன்களுக்கான செல்லினம் இன்று ஆப்பிள் ஆப்சுட்டோரில் வெளியிடப்பட்டது.

புதிய ஐபோன்களுக்கான செல்லினம் 5.0
ஐபோன் 12. படம்: ஆப்பிள்

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12 வரிசைக் கருவிகளில் செல்லினம் சரிவர இயங்காமல் இருந்தது. இந்தச் சிக்கல் நீக்கப்பட்டதோடு, ஐ. ஓ. எஸ் 14இல் சரிவர இயங்குவதற்கும் இன்று வெளியிடப்பட்ட செல்லினத்தில் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தவிர, இந்தப் பதிகையில் செய்யப்பட்ட மிக முக்கிய மாற்றங்களில் ஒன்று, பரிந்துரைகளுக்கான சொற்பட்டியல் செயலித் தொகுப்பிலேயே சேர்க்கப்பட்டதாகும்.

முந்தைய பதிப்புகளில் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்தபின், அதன் அமைப்புப் பக்கத்தில் இருந்து சொற்பட்டியலைத் தனியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இனி இதனைச் செய்ய வேண்டியதில்லை. செல்லினத்தோடு சொற்பட்டியலும் வந்துவிடும்.

ஐ. ஓ. எஸ் 11ஐயும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களையும் கொண்ட ஐபோன்களிலும், ஐபேட் கருவிகளிலும் புதிய செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்தவர்கள், புதிய செல்லினத்திற்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஐபோன்களில் செல்லினம் 5.0ஐ அமைக்கும் வழிமுறைகளை விளக்குவதற்காக, கீழ்க்காணும் காணொலியை உருவாக்கியுள்ளோம்:

ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தப் பழைய கருவிகளில் ஐ. ஓ. எஸ் 11 இயங்காது. இவற்றில், செல்லினம் 4.0ஐ தொடர்ந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

பழைய கருவிகளில் செல்லினத்தை அமைக்கும் முறைக்கும் காணொலியில் காட்டப்பட்ட முறைக்கும் வேறுபாடுகள் அவ்வளவாக இருக்காது.

ஐ. ஓ. எசின் தமிழ் விசைமுகங்களும் செல்லினமும்

செல்லினத்தில் உள்ள இரண்டு தமிழ் விசைமுகங்களும் ஐ. ஓ. எசில் இயல்பாக சேர்க்கப்பட்டுள்ளன. இது 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஐ. ஓ. எஸ் 7 முதல் இருந்து வருகிறது.

எனவே, செல்லினம் இல்லாமலேயே ஐ. ஓ. எசில் தமிழ்-99, அஞ்சல் ஆகிய விசைமுகங்களின் வழி தமிழில் உள்ளிடலாம்.

இயல்பாக உள்ள இந்த இரு விசைமுகங்களும் ஆங்கில விசைமுகங்களுக்கு நிகராக வேகமான பயன்பாட்டுக்கு உதவக் கூடியவை. ஆனால் செல்லினம் வழங்கும் பரிந்துரைகளும் பிழை திருத்தங்களும் அவற்றில் இருக்காது.

ஆங்கிலத்தில் வழங்கப்படுவது போல உணர்ச்சிக் குறிகளுக்கான பரிந்துரையும் இயல்பான விசைமுகங்களில் தோன்றாது.

இவை அனைத்தும் செல்லினத்தில் தோன்றும்!

தொடர்புடையவை:

  1. ஐ.ஓ.எசின் 13ஆம் பதிகையில் செல்லினம்
  2. iOS 14
Did you like this? Share it: