சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு

சொல்வன் – வரிவடிவத்தை ஒலிவடிவமாக்கிக் கொடுக்கும் ஒரு புதிய சிறப்புக்கூறு! பொங்கல் அன்று நடைபெற்ற செல்லினத்தின் புதிய வெளியீட்டு நிகழ்ச்சியில், பல செயல்முறைக் காட்சிகளின்வழி விளக்கப் பட்டது.

சொல்வன் : வெளியீட்டு நிகழ்ச்சியை வழிநடத்திய கஸ்தூரி ராமலிங்கம், முத்து நெடுமாறன்.
‘சொல்வன்’ வெளியீட்டு நிகழ்ச்சியை வழிநடத்திய கஸ்தூரி ராமலிங்கம், முத்து நெடுமாறன்

செல்லினத்தின் 16 ஆண்டு கால வரலாற்றுக் காணொலியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சொல்வனின் சிறப்புப் பயன்பாடுகள் ஒவ்வொன்றையும் செயல்முறைக் காட்சிகளோடு விளக்கினார் செல்லினத்தை உருவாக்கிய முத்து நெடுமாறன்.

நிகழ்ச்சியின் நிரலை மலேசியாவின் சோகூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி இராமலிங்கம் வழிநடத்தினார்.

இரண்டு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த இந்தச் செயலியை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த பயனர்கள், பயன் படுத்திக் கருத்துகளைக் கூறி வந்திருந்தனர். அவர்களுள் சிலர்,  சொல்வனில் தாங்கள் அடைந்த பயனை அழகாக நிகழ்ச்சியில் விளக்கினர்.

காலங்கடந்து தமிழைப் படிக்கத் தொடங்கியவர்கள் முதல், தமிழ் மொழியில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருவோர் வரை அவரவர் தேவைக்கு எவ்வாறு சொல்வன் உதவுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தனர்.

எண்களைப் புரிந்துகொண்டு வாசிக்கும் சொல்வன்

தமிழ் வரிவடிவங்களை வாசிப்பது மட்டுமல்லாமல், எண்களையும் நாட்டின் சூழலுக்கேற்பச் சொல்வனால் வாசித்துக் காட்ட முடியும் என்பதை முத்து நெடுமாறன் படக்காட்சிகளோடு விளக்கினார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் வாசிக்கும் போது, இலட்சம் கோடி எனும் எண்கள் முறையையும், மலேசியா, சிங்கப்பூர் முதலிய மற்ற நாடுகளில் வாசிக்கும் போது நூறாயிரம், மில்லியன், பில்லியன் எனும் எண்கள் முறையையும் சொல்வன் வாசித்ததை அனைவரும் திரையில் கண்டனர்.

எண்களில் காற்புள்ளி போடப்பட்டிருந்தால், எந்த நாட்டு சூழலில் வாசித்தாலும், காற்புள்ளிக்கேற்றவாறே சொல்வன் சரியாக வாசித்ததைப் பார்த்தனர்.

எண்கள் மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பயன்படுத்தப்படும் பணச் சின்னங்களையும் சொல்வனால் வாசிக்க முடிந்தது.

எண்களுக்கு முன் தோன்றும் ரூபாய் (₹, ₨), டாலர் ($), யூரோ (€), ரிங்கிட் (RM), ரியால் (﷼) முதலிய சின்னங்கள் சொற்களாக வாசிக்கப்பட்டன.

வெளியீட்டு நிகழ்ச்சியில் சொல்வனின் சிறப்புகளை நாடகத்தின் வழி விளக்கும் இள. அருள்குமரன், வாணிஶ்ரீ

நிகழ்ச்சியின் இறுதியில், முன்னோடிப்பதிப்பைப் பயன்படுத்தியவர்கள்கூட சற்றும் எதிர்பாராத வியப்பூட்டும் கூறு ஒன்றை முத்து நெடுமாறன் விளக்கிக் காட்டினார். குறுஞ்செய்திகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் உணர்ச்சிக்குறிகளையும் சொல்வனால் புரிந்து வாசிக்க முடிந்தது.

வணக்கம் எனும் உணர்ச்சிக்குறி பலமுறை தொடர்ந்து வந்தால், முதலில் வந்ததை ‘வணக்கம்’ என்றும் அடுத்து வந்ததை ‘நன்றி’ என்றும் வாசிக்கப்பட்டது, பலரின் வரவேற்பைப் பெற்றது.

தொழில்துறையும் கல்வித்துறையும் சேர்ந்து ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்வதை விரும்பியதாகக் கூறிய முத்து நெடுமாறன், சொல்வனின் முதற்கட்ட ஆய்வுகள் தமிழ் நாட்டிலுள்ள எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியோடு சேர்ந்து செய்ததை நினைவு கூர்ந்தார்.

இக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் – பேராசிரியர் முனைவர் தி. நாகராஜன் அவர்களுக்குத் தமது நன்றியினைத் தெரிவித்தார்.

செல்லினத்தின் புதிய பதிகை

சொல்வன் அடங்கிய செல்லினத்தின் இவ்வாண்டுப் பொங்கல் பதிகையை, சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன், அதிகார முறையில் வெளியிட்டார்.

செல்லினம் பொங்கல் பதிகையை வெளியிட்ட அருண் மகிழ்நன்

இந்தப் பதிகை ஐபோன், ஐப்பேட் திறன்கருவிகளில் மட்டுமே இயங்கக்கூடியது. ஆண்டிராய்டுக்கான பதிகை இன்னும் மேம்பாட்டில் உள்ளதென்றும், இன்னும் சில வாரங்களில் அது வெளிவரலாம் என்றும் முத்து நெடுமாறன் அறிவித்தார்.

புதிய உருவாக்கம் என்பதால், சொல்வனில் உடனுக்குடன் மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐபோன், ஐப்பேட் திறன்கருவிகளை வைத்திருப்போர் இதன் மிக அண்மைய பதிப்பைக் கீழ்க்காணும் இணைப்பின் வழிப் பெற்றுக்கொள்ளலாம்:

https://testflight.apple.com/join/OHtPcal5

நிகழ்ச்சியின் காணொலிப் பதிவு

வெளியீட்டு நிகழ்ச்சியின் முழுமையான காணொலிப் பதிவினை இங்கே காணலாம்:

தொடர்புடையவை:

  1. தனிச்சிறப்புடன் செல்லினத்தின் பொங்கல் வெளியீடு
Did you like this? Share it: