‘ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டு வரும் பயனர்களுக்கு வருகிறது நற்செய்தி: இன்று முதல் உங்கள் ஆண்டிராய்டு திறன் கருவிகளிலும் சொல்வன் தமிழ் வரிகளை வாசிப்பதைக் கேட்கலாம்!
கடந்த பொங்கல் அன்று, வரிவடிவத்தை ஒலிவடிவமாக்கும் ‘சொல்வன்’ எனும் சிறப்புக்கூறு, செல்லினத்தில் சேர்க்கப்பட்டது. ஐபோன், ஐப்பேட் திறன்கருவிகளுக்கான செல்லினத்தில் சேர்க்கப்பட்ட சொல்வன், இன்று ஆண்டிராய்டு கருவிகளிலும் சேர்க்கப்படுகின்றது!
சொல்வனின் முதல் வெளியீட்டிற்குப் பிறகு, அதன் செயல்பாட்டினை ஐபோனில் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டிலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தோம்.
இந்த மேம்பட்ட வெளியீடு தான் இன்று இரு திறன் கருவி தளங்களிலும் இயங்கும் செல்லினத்தில் வெளியீடு காண்கின்றது.
நீண்ட பனுவல்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனித்தனியே வாசிப்பது, எண்கள், தமிழ் வரிகள், ஆங்கில வரிகள் என சரிவர கண்டறிந்து, அவற்றை முறையாக வாசிப்பது, உணர்ச்சிக் குறிகளைக் கண்டறிந்து அவற்றை உச்சரிப்பது போன்ற வசதிகளை மேம்படுத்தியுள்ளோம்.
அதோடு மட்டுமல்லாமல், தமிழ் எண்களைச் சரிவர உச்சரிக்கும் வசதியையும் இந்த மேம்பாட்டில் புதிதாகச் சேர்த்துள்ளோம்!
நீண்ட பனுவல்கள்
நீண்ட உரையை வரிவடிவத்தில் இருந்து ஒலிவடிவத்திற்கு மாற்ற நேரம் எடுக்கும். இந்த மாற்றம் செய்யப்படும்போது சில வேளைகளில் திரை உறைந்துவிடுவதுபோல் தோன்றும். பயன்பாட்டில் நொடிப்பொழுது சிக்கல் ஏற்படும்.
இதைத் தவிர்க்க, உரையை முதலில் பத்திகளாகப் பிரித்து, பத்திகளை மேலும் வரிகளாகப் பிரித்து, அதன்பின் ஒவ்வொரு வரியாக ஒலிவடிவத்திற்கு மாற்றி சொல்வனைப் படிக்க வைக்கின்றோம்.
இது ஓரளவு சரிவர இயங்கினாலும், சில வேளைகளில் பத்திகளையும் வரிகளையும் பிரிப்பதில் தவறுகள் ஏற்பட்டன. இந்தத் தவறுகளை வெகுவாகக் குறைத்து, சரளமான வாசிப்பிற்கு இந்த மேம்பாட்டில் வழிவகுத்துள்ளோம்.
சொற்களுக்கிடையே எண்கள்
தமிழ் வரிகளின் இடையே, ஆங்கில சொற்கள் தோன்றுவதை நாம் அடிக்கடிக் காண்கின்றோம். இவை கலைச்சொற்களாக இருக்கலாம். பொருள் தெளிவிற்காக ஆங்கில சொற்கள் ஆங்கில எழுத்துகளில் அப்படியே எழுதப்பட்டிருக்கலாம். இந்த வரிகளை சொல்வன் வாசிக்கும்போது, ஆங்கில சொற்களைக் கண்டறிந்து, அவற்றை ஆண்டிராய்டிலோ ஐபோனிலோ உள்ள உரையொலி மாற்றியைப் பயன்படுத்தி ஒலிவடிவமாக்கி வாசிக்கும். அவ்வாறு செய்யும்போது, இடையில் தோன்றும் ஆங்கில சொற்களை ஒலிக்கச் செய்யும்முன், ஒரு சிறிய இடைநிறுத்தம் இருக்கும்.
இதேப்போல, தமிழ் உரையின் நடுவில் ஒரு எண்ணைக் கண்டறியும்போது, முதலில் அந்த எண்ணை சொற்களாக மாற்றி, பின்னர் அவற்றை ஒலியாக ஒருங்கிணைக்கிறது. முந்தைய சொல்வன் பதிப்பில், ஆங்கிலச் சொற்களுக்குமுன் இருக்கும் இடைநிறுத்தம் போன்றே எண்களுக்கும் இருந்தது. இன்று வெளிவரும் புதிய பதிப்பில், எண்களுக்குமுன் தேவையற்ற இடைநிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது. வாசிப்பதில் சரளம் இருக்கும்.
தமிழ் எண்கள்
எண்களைச் சொற்களாக மாற்றிப் படிக்கும் போது, பயனர்களின் நாட்டை சொல்வன் கணக்கில் எடுத்துக்கொண்டது. பயனரின் நாடு இந்தியாவாகவோ இலங்கையாகவோ இருந்தால் இலட்சம், கோடி என்ற முறையையும், மற்ற நாடாக இருந்தால் மில்லியன் பில்லியன் என்ற முறையையும் பயன்படுத்தியது.
எண்களுக்கிடையில் காற்புள்ளி போடப்பட்டிருந்தால், காற்புள்ளிக்கேற்றவாறே வாசித்துக் காட்டியது. இதற்கு பல எடுத்துக்காட்டுகள் சொல்வன் வெளியீட்டு நிகழ்ச்சியில் காட்டப்பட்டன.
இலட்சம் கோடி முறையாக இருந்தாலும், மில்லியன் பில்லியன் முறையாக இருந்தாலும், தற்கால ஆங்கில எண் வடிவங்களையே சொல்வனின் முதற்பதிகை ஆதரித்தது.
இன்று வெளியாகும் பதிகையில், தமிழ் எண்களுக்கான ஆதரவைச் சேர்த்துள்ளோம்!
உரையில் ௨௦௨௧ என இருந்தால், அது ‘ஈராயிரத்து இருபத்து ஒன்று’ என்று சரியாக வாசிக்கப்படும். இது சுழியங்கள் அடங்கிய புதிய முறையிலானத் தமிழ் எண்கள். பழைய முறையில், சுழியம் இல்லை. எனவே, 2021 எனும் எண் ௨௦௨௧ க்கு பதிலாக ௨௲௨௰௧ என்று எழுதப்படும்.
சொல்வன், புதிய முறைத் தமிழ் எண்களையும் பழைய முறைத் தமிழ் எண்களையும் சரிவர வாசிக்கும்!
பயனர் கருத்துகள்
ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன் சேர்க்கப்பட்ட முன்னோட்டப் (பீட்டா) பதிகையைப் பயன்படுத்தி பல நாடுகளைச் சேர்ந்தப் பயனர்கள் பயனுள்ள கருத்துகளைத் தெரிவித்தனர். சொல்வன் மேலும் செப்பமடைய, இவர்களின் கருத்துகள் பெரிதும் உதவின. முன்னோட்டப் பதிகையின் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிலரின் கருத்துகள் அடங்கிய காணொலியை, இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சிலரின் கருத்துகள் அடுத்தடுத்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.
இப்போதே மேம்படுத்திக் கொள்ளலாம்
செல்லினம் பயனர்கள் அனைவரும் இப்போதே உங்கள் செல்லினத்தை மேம்படுத்தி, சொல்வன் வசதியைப் பயன்படுத்தி மகிழலாம்!
தொடர்புடையவை: