அச்சிட்டப் பதிவை அச்சு மாறாமல் வாசிக்கிறது சொல்வன்.

சிறப்புக் கட்டுரை

ராமேஸ்வரி ராஜா
தலைவர், தாப்பா தமிழ் எழுத்தாளர், வாசகர், பண்பாட்டு இயக்கம்.

நம்மவரோடு மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றமானது நமது தாய்மொழியில் இடம்பெறும்பொழுதுதான் உணர்வுபூர்வமானதாக நமக்குத் தோன்றும்.

அதுபோன்ற தமிழ் எழுத்துத் தட்டச்சு உரையாடலுக்குச் செல்லினம் மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

நாம் பதிவிடும் கருத்துகள், நம்முடன் எதிர்முனையில் பேசும் மற்றவர் பதில் பதிவு இடும்பொழுதும், அதனைப் புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கும்பொழுதும்தான் நம் கருத்து உயிர்பெறும் வாய்ப்பைப் பெறுகிறது.

Rameswary Raja
கட்டுரையாளர் ராமேஸ்வரி ராஜா

இந் நிலையில், தமிழ் வாசிக்கத்தெரியாது என நமது பதிவிற்கு பதில் வரும்பொழுது அது மிகப்பெரிய வருத்தத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகிறது. அதில் சிலர் ‘தமிழ் வாசிக்கத் தெரியாது’ என ஒற்றை வரியில் தங்களின் நாட்டமின்மையை வெளிபடுத்தி விடுவார்கள்.

அதிலும் சிலர் தமிழ் வாசிக்கத் தெரியாது, எழுதத்தெரியாது என்பதை வருத்தத்துடன் பகிர்வதுண்டு. அவரைப் போன்றவர்களுக்குச் செல்லினத்தை நான் அறிமுகம் செய்வேன்..

செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்யவைத்து அதில் இருக்கும் சுலபமான தமிழ்த் தட்டச்சு விதிமுறையையும் அவர்களுக்கு வழிகாட்டுவதுண்டு. அகம் மகிழ்ந்து தட்டச்சு முயற்சிகளை மேற்கொள்வதுடன் மீண்டும் நமக்கே தமிழில் ‘வணக்கம்’, ‘நன்றி’ போன்ற வார்த்தகளைச் சுயமாக அனுப்பும் பொழுது அதன் மகிழ்ச்சிக்கு அளவே இருப்பதில்லை.

தட்டச்சு செய்ய வழிகாட்டலாம். ஆனால் வந்த பதிவை வாசிக்கத் தெரியாது என்று சொல்பவர்களுக்கு என்ன செய்ய முடியும்? அந்த வருத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது தற்பொழுது செயல்பாட்டில் இருக்கும் செல்லினத்தின் ‘சொல்வன்’.

“என்ன எழுதியிருக்கிறது? வாசித்துச் சொல்லுங்களேன்” எனக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சொல்வனைச் சுட்டிக்காட்ட ஒரு வாய்ப்பு நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

வாசித்துக் காட்டும் சொல்வன்

தட்டச்சில் இருக்கும் பதிவை அச்சு மாறாமல் வாசித்துக் காட்டிவிடுகிறது சொல்வன். இதை அறிமுகம் செய்துவைக்கும்பொழுது நமக்கே மகிழ்ச்சித் துள்ளல் ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏதோ காரணங்களால் தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாத நிலையும் அதனால் தமிழ் கற்கும் சூழலும் வாய்க்காமல் போயிருந்திருக்கலாம். என்றாலும் காலத்திற்கும் தாய் மொழியை வாசிக்கத் தெரியாது எனும் சாக்கைச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? அதிலும் வாசித்துக் காட்டும் அரும்பெரும் வாய்ப்பைச் சொல்வன் தந்திருக்கும்பொழுது அதனைப் பயன்படுத்தும் வழிகளை அவர்களுக்குக் காட்டும் பொறுப்பு நமக்கும் இருக்கிறது அல்லவா?

பக்கம் பக்கமாகக் கேட்க, எழுத வைக்க முடியாவிட்டாலும் நம் உறவுகளையும் நட்புகளையும் சிறு சிறு துணுக்கு, பத்திகளையாவது புரிந்திட வைக்கலாம். தமிழின் சுவையை உணரத் துவங்கிவிட்டால், அது தன்னை தொடர்ந்து சுவைக்கவைத்துக் கொண்டே இருக்கும். இந்நிலையில், தாங்களாகவே தங்களை நாளடைவில் மேம்படுத்திக் கொள்வார்கள்.

செல்லினத்தை அறிமுகப்படுத்தி, இவ்வாறு பயனடைந்தவர்களை நான் என் அனுபவத்தில் கண்டதுண்டு. நம்மால் பயனடைந்தார்கள் என்பதை எண்ணிப் பெருமை கொள்வதும் உண்டு.

குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதை விட, குறைந்த பட்ச தமிழ் அமுதையாவது அவர்களுக்கு ஊட்டிவிடும் கையாக நாம் இருக்கலாம். நிச்சயமாக இதன் மூலம் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நமது நட்பு வட்டாரங்களையும் நமது தட்டச்சுப் படைப்புகளைத் தெரிந்துகொண்டு பயனடையவும் வைக்கலாம்.

ஆக, ஆர்வம் உள்ளவர்களுக்குச் சொல்வனின் பயனைச் சுட்டிக்காட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதனைப் பயன்படுத்தி அவர்கள் பயனடைந்து வியக்கிறார்கள் என்பதும் கூடுதல் மகிழ்வை ஏற்படுத்துகிறது.

செல்லினம் பயனர்களோடு ரமேஸ்வரி ராஜா
செல்லினம் பயனர்களோடு ராமேஸ்வரி ராஜா

தொடர்புடையவை:

  1. சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு
  2. ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன்
  3. காணொலி: சொல்வன் வெளியீட்டு நிகழ்ச்சி
Did you like this? Share it: