கையடக்கக் கருவிகளில் விரைவாகத் தட்டெழுத, புளூதூத் விசைப்பலகைகளைப் பயன்படுத்துவது இயல்பாகி வருகின்றது. சில தட்டைக் கருவிகளில் (டேபிளட்டுகளில்) இதுபோன்ற விசைப்பலகைகள் சேர்ந்தே வருகின்றன.
கணினியைவிட கையடக்கக் கருவிகளின் வழியே அதிகம் தட்டெழுதுபவர்கள் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
செல்லினத்தில் இந்தப் பலகைகளைக் கொண்டு தமிழில் எழுத இயலவில்லையே என்றக் குறை இருந்து வந்தது. சில ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த 4.0.6ஆம் பதிகையில் அது நீக்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டு புதிதாக வந்த செல்லினம் 5.0இல் சில தொழில்நுட்பக் காரணங்களால் அது விடுபட்டது. இன்று வெளிவரும் செல்லினம் 5.1.1இல் புளூதூத் விசைப்பலகைகளின் வழி உள்ளிடும் வசதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்தப் பதிகை பயனர்களைப் படிப்படியாகச் சென்றடையும்.
உங்கள் ஆண்டிராய்டு கருவியில் புளூதூத் வழி விசைப்பலகையை சேர்க்கும் வசதி இருந்தால், இந்தப் புதிய சேர்க்கையைப் பயன்படுத்தலாம்.
விசைப்பலகையை செல்லினத்தோடு இணைக்கும் அமைப்பு முறை, கருவிக்குக் கருவி மாறுபட்டிருக்கின்றது. சாம்சாங் கருவியில் அமைக்கும் முறைக்கும், மற்றக் கருவியில் அமைக்கும் முறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. புளூதூத் விசைப்பலகை உங்கள் கருவியில் சரிவர அமைத்ததும், அமைப்புப் பக்கத்தைப் படமெடுத்து, sellinam dot help at gmail dot com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். செல்லினத்தின் முகநூல் பக்கத்தில் அவற்றைப் பகிர்கிறோம். மற்ற பயனர்களுக்கும் அந்தப்படங்கள் கண்டிப்பாக உதவும்.
விசைமுக மாற்றங்கள்
பலகையின் வழித் தட்டெழுதுவதால், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் உள்ளீட்டு முறையை மாற்றுவதற்கும் சில புதிய வழிகளை அறிமுகம் செய்துள்ளோம்:
விசைகள் | உள்ளிடு முறை |
---|---|
Alt-A | முரசு அஞ்சல் |
Alt-T | தமிழ்-99 |
Alt-E | ஆங்கிலம் |
ஆண்டிராய்டு கைபேசி ஒன்றில் புளூதூத் விசைப்பலகையைக்கொண்டு தமிழில் எழுதப்படுவதை கீழே உள்ள படம் காட்டுகின்றது.
இந்த அமைப்பின்வழி தட்டெழுதும்போது, இயல்பாகத் திரையில் தோன்றும் விசைமுகம் மறைந்துவிடும். அதற்கானத் தேவையும் இருக்காது. இருந்தாலும், திரையில் விசைமுகங்கள் வேண்டுமெனில், ஆண்டியாய்டின் அமைப்பு செயலியின் வழி (Android settings), அவை தோன்றுமாறு செய்யலாம் (படம்).
ஆப்பிள் கருவிகளில் புளூதூத் வெளிவிசைப்பலகைகள்
ஆப்பிளின் ஐபோன், ஐபேட் கருவிகளில் வெளிவிசைப்பலகைகளின் வழி ஏற்கனவே தமிழில் எழுதும் வாய்ப்பு இருக்கின்றது. செல்லினத்தின் அதே விசைமுகங்கள் இந்தக் கருவிகளிலும் இருப்பதால், அவற்றையே வெளிவிசைப்பலகைகளுக்குப் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய பதிவுகள்:
1. கம்பியில்லா விசைப்பலகை வழியே செல்லினம் தமிழ் உள்ளீடு
2. முந்தைய வெளியீடு: புளூதூத் விசைப்பலகைகளுடன் செல்லினம்
குறிப்பு: பழைய முறையில் Alt-1, Alt-2, Alt-3 விசை இணைகள் விசைமுகங்களை மாற்றின. புதிய முறையில், இவை Alt-A, Alt-T, Alt-E என மாற்றப்பட்டது.
3. செல்லினம் செயலியில் பேசினாலே தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?
கலைச்சொற்கள்:
1. விசைப்பலகை: Keyboard
2. விசைமுகம்: அ) Keyboard layout. ஆ) திரையில் தோன்றும் விசைப்பலகை அமைப்பு. இதனை ஆங்கிலத்தில் Soft input panel (SIP) என்று அழைப்பர். இதற்கும் தமிழில் விசைமுகம் என்றே பயன்படுத்துகின்றேம் – வெல்லும்சொல் கிட்டும் வரை.