நேற்றுப் பொதுப்பயனீட்டிற்கு வெளியிடப்பட்ட ஐ. ஓ. எஸ். 15இலும் விரைவில் வெளிவரவிருக்கும் மெக். ஓ. எஸ். 12இலும் ஆக்சுபோர்ட் தமிழ் அகராதி சேர்க்கப்பட்டுள்ளது.
இணையத்தில் உள்ளடக்கத்தை உட்கொள்வதற்கான முதன்மைக் கருவிகளாகக் கையடக்கக் கருவிகள் மாறியுள்ளன. தமிழ் படிக்கத்தெரிந்த பயனர்கள், இணையத்தில் கிடைக்கும் செய்திகளையும் நட்பூடகங்களில் நடக்கும் கலந்துரையாடல்களையும் ஆங்கிலத்தில் மட்டுமன்றி, தமிழிலும் படித்து வருகிறார்கள்.
செய்திகளையோ கட்டுரைகளையோ வாசிக்கும் போது, சில சொற்களுக்கான பொருளைத் தேடவேண்டிய சூழல் வரும். தமிழ்ச் சொல்லாக இருந்தால் ஆங்கிலத்தில் அதன் பொருளையும் ஆங்கிலச் சொல்லாக இருந்தால் தமிழில் அதன் பொருளையும் நாம் நாட வேண்டி வரும்.
மேலும், ஒரு சொல்லின் பொருளை இரண்டு மொழிகளிலும் படிக்கும்போது அந்தச் சொல்லைப் பற்றிய புரிதல் நமக்கு மேலும் மேம்படுகிறது.
சொல்லின் பொருளைத் தமிழில் தேடுவதற்கு, நாம் வேறொரு அகராதிச் செயலியைத் திறந்து, அதில் நாம் விரும்பும் சொல்லைத் தேடவேண்டி இருந்தது.
ஆக்சுபோர்ட் தமிழ் அகராதி
ஆப்பிள் இயக்க முறைமைகளின் அண்மைய வெளியீடுகள், நாம் படித்துக்கொண்டிருக்கும் செயலியை விட்டு வெளியேறாமல், படிக்கும்போதே சொற்களின் பொருளை எளிதாகத் தேடும் வாய்ப்பினைச் சேர்த்துள்ளது.
ஐபோன், ஐபேட் மற்றும் மேக் கணினிகளில் இப்போது ஆக்சுபோர்டு தமிழ்-ஆங்கில அகராதி இயங்குதளத்திலேயே சேர்க்கப்பட்டுள்ளது!
நாம் செய்ய வேண்டியதெல்லாம் தமிழ் அகராதியை இயங்குதள அமைப்புகளில் இயக்கிவிடுவது மட்டுமே! அதன்பின், நாம் விரும்பும் சொற்களைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருளை அங்கேயே பெற்றுக்கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் ஆங்கிலமாக இருந்தால், அதன் பொருள், முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்படும். அச் சொல் தமிழில் இருந்தால், அதன் பொருள், முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்படும்.
இந்த இரண்டு மொழிகளையும் வாசிப்பவர்களுக்கு இது வரவேற்கத்தக்க மேம்பாடாக இருக்கும். பொருளை இருமொழிகளிலும் சரிபார்க்கலாம் அல்லது இரண்டு மொழிகளிலும் பொருத்தமான மாற்றுச் சொல்லைத் தேடலாம்.
ஐபோன் ஐபேட் கருவிகளில் இந்தப் புதிய இயங்குதளத்தை இப்போதே மேம்படுதிக் கொள்ளலாம். மெக் கணினிகளுக்கான மெக். ஓ. எசின் புதிய மேம்பாடு தற்போது முன்னோட்டப் பதிப்பில் இருக்கிறது. பொதுப் பயனீட்டிற்கு வர சில வாரங்கள் ஆகலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்: