கனியும் மணியும் – அனைத்துலக வெளியீடு கண்டது!

கனியும் மணியும் எனும் ஊடாடும் நகர்படங்களையும் விளையாட்டுகளையும் கொண்ட, குழந்தைகளுக்கான செயலியின் அனைத்துலக வெளியீடு, கடந்த பொங்கல் அன்று சிறப்பாக இயங்கலை வழி நடந்தேறியது.

கனியும் மணியும்

மொழிக்கல்வி இளமையிலேயே தொடங்கப்பட வேண்டியதன் அவசியம், பன்மொழி ஆற்றலால் ஏற்படும் பயன்கள் முதலிய கருத்துகளை பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன் அவர்களின் முகாமை உரை வலியுறுத்தியது. 

செயலி குறித்த சிங்கப்பூர் கற்றல் வளர்ச்சிக்குழுவின் படைப்பும், திரு இனியன் அவர்கள் வழங்கிய ஆய்வுரையும், செயலியின் முழுமையான பயன்பாட்டையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் அழகாக எடுத்துரைத்தன. 

செயலியைப் பயன்படுத்திப் பார்த்த குழந்தைகள் அவரவர் திறமைகளை ஆவலோடு  வெளிகாட்டினர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி குறித்தும், விளையாடிக்கொண்டே கற்பதற்கான சூழலை கணியும் மணியும் செயலி எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது குறித்தும், சில பெற்றோர்கள் கருத்துரைத்தனர். 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர், வகுப்பறைகளில் இச்செயலியைக் கொண்டு தமிழ் மொழிப்பாடத்தைக் குழந்தைகளுக்கு எவ்வாறு நடத்தலாம் என்பதை விளக்கினர்.

நிகழ்ச்சியை, இச்செயலியை உருவாக்கிய முத்து நெடுமாறனும் கஸ்தூரி இராமலிங்கமும் வழிநடத்தினர். செயலியில் அடங்கியுள்ள சிறப்புக்கூறுகளை கஸ்தூரி இராமலிங்கம் மிகத் தெளிவாக விளக்கினார்.

கனியும் மணியும் செயலியில் 6 ஊடாடும் உயிரோவியக் கதைகள் உள்ளன (animated and interactive stories). குழந்தைகள் அவற்றை வாசித்துக் காட்டச் சொல்லலாம். அழகான, தெளிவானத் தமிழ் உச்சரிப்போடு ‘அக்காவின் குரல்’ கதைகளை வாசித்துக் காட்டும். வாசிக்கும்போது, வாசிக்கப்படும் சொற்கள் நிறம் மாறிவரும். எந்தச் சொல் வாசிக்கப்படுகிறது என்பதை குழந்தைகள் பார்த்துப் பின்பற்றலாம்.  

அக்கா வாசித்ததும், குழந்தைகள் தாங்களாகவே கதைகளை வாசிக்கலாம். புரியாத சொற்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தொட்டால் போதும், அக்காவின் குரலில் அந்தச் சொற்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

ஆறு கதைகளோடு ஆறு விளையாட்டுகளும் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் கதையைப் படித்து முடிந்ததும், முதல் விளையாட்டினை குழந்தைகள் விளையாடலாம். கதையில் தோன்றும் பொருள்களுக்குப் பொருத்தமான சொற்களைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு. இதுபோல மற்ற கதைகளுக்கும் வெவ்வேறு விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

கதைகளின் வழியும் விளையாட்டுகளின் வழியும் குழந்தைகள் 72 சொற்களைக் கற்றுக்கொள்வர் என்று முத்து நெடுமாறன் கூறினார். இதில் உள்ள விளையாட்டுகளைப்போல வெறும் விளையாட்டுகளை மட்டுமே கொண்ட செயலிகளையும் வெளியிடுவதற்கான பணியில் இருவரும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வெளியீட்டு நிகழ்ச்சியின் முழுமையானப் பதிவை செல்லினத்தின் யூடியூப் ஓடையில் காணலாம்:

ஆப்பிளின் ஆப்சுடோர், கூகுளின் கூகுள் பிளே தளங்களில் இந்தச் செயலியை உலகெங்கிலும் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையன:

  1. ‘கனியும் மணியும்’ செயலியின் அனைத்துலக வெளியீடு
  2. கனியும் மணியும் – தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி
Did you like this? Share it: