விண்டோசு 11இல் அஞ்சல் விசைமுகம்!

விண்டோசு 11இல் அஞ்சல் விசைமுகம் சேர்க்கப்பட்டு வருகிறது. மைக்குரோசாப்டின் விண்டோசு இன்சைடர் ஓடுயில் (Windows Insider Channel) இன்று வெளியிடப்பட்ட முன்னோட்டப்பதிப்பில் இந்த விசைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைக்குரோசாப்டு வெளியிட்ட அறிவிப்பில் கீழ்க்காணும் குறிப்பினைக் காணலாம்:

இதன் தமிழாக்கம்:

  • இந்தக் கட்டில் தமிழ் மொழிக்கான தமிழ் அஞ்சல் விசைமுகத்தைச் சேர்க்கிறோம். இது தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதற்காக பரவலாகப் பயன்படுத்தப்படும் விசைமுகம். எனவே நீங்கள் இந்த மொழியைப் பேசினால், தயவுசெய்து இதனைப் பயன்படுத்திப் பார்க்கவும். இந்த விசைமுகம் தற்போது “இன்சைடர்” துணைக்குழுவிற்கு மட்டுமே வெளிவருகிறது. இதன் வழி நாங்கள் இதன் செயல்பாட்டின் தரத்தை முதலில் மதிப்பிடுகிறோம். அஞ்சல் விசைமுகத்தைச் சேர்க்க (உங்களுக்குக் கிடைத்ததும்) இதனைச் செய்யுங்கள்: அமைப்புகள் > நேரமும் மொழியும் > மொழியும் வட்டாரமும் பகுதியின் கீழ், தமிழ் (இந்தியா) பட்டியலிடப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். பின்னர் மொழிக்கு அடுத்துள்ள “…” என்பதைக் கிளிக் செய்து, மொழி விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து, அஞ்சல் விசைமுகத்தை விசைமுகப் பட்டியலில் சேர்க்கவும் .
விண்டோசு 11இல் அஞ்சல் விசைமுகம்
விண்டோசு 11இல் அஞ்சல் விசைமுகம்!

நமது பங்களிப்பு

நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த இந்த முயற்சி, இன்று நிறைவேறி வருவதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது மிகச் சிறப்பாக வெளிவர தொடர்ந்து சில பணிகளைச் செய்வது நன்றாகும். இயன்றோர் இவற்றைச் செய்யலாம்:

  1. முதலில் விண்டோசு இன்சைடர் ஓடையில் உருப்பினராகச் சேரவேண்டும். அதற்கான இணைப்பு: https://insider.windows.com/en-us/register
  2. இன்சைடர் ஓடையில் உள்ள விண்டோசு 11ஐ பதிவிறக்கம் செய்து கணினியில் பதிந்தபின், முரசு அஞ்சல் விசைமுகத்தைப் பெற மேற்குறிப்பிட்ட அமைப்புகளைச் செய்யவேண்டும்.

குறிப்பு: இந்த ஓடை தொழில்நுட்ப வல்லுனர்களுக்காக உருவாக்கப்பட்டது. இயல்பான பயன்பாட்டுக்கு சிலநாள் காத்திருக்க வேண்டும். எனினும் நுட்பவியலாளர்கள் இதனைப் பயன்படுத்தி முன்கூட்டியே கருத்துகளைக் கூறினால், விண்டோசு 11இல், அஞ்சல் விசைமுகத்தின் சரியான பயன்பாட்டினை உறுதி செய்ய உதவலாம்.

மேலோட்டமான சில பார்வைகள்

அனைத்துலகத் தரத்தில் தமிழுக்கு நாங்கு உள்ளிடங்கள் (locale) வரையறுக்கப்பட்டுள்ளன. அவை தமிழ்-இந்தியா (ta_IN), தமிழ்-இலங்கை (ta_LK), தமிழ்-மலேசியா (ta_MY), தமிழ்-சிங்கப்புர் (ta_SG).

விண்டோசின் இந்த முன்னோட்டப்பதிப்பில் முரசு அஞ்சல் விசைமுகம் தமிழ்-இந்தியா உள்ளிடத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

அதே போல, குரல் வழித் தமிழ் உள்ளீடும் தமிழ்-இந்தியாவுக்கு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.

மற்ற தமிழ் உள்ளிடங்களிலும் இவை சேர்க்கப்பட வேண்டும். முன்னோட்டப்பதிப்பைப் பயன்படுத்திப் பார்போர், மைக்குரோசாப்டிடம் இதைச் சொல்ல வேண்டும். எவ்வளவு விரைவாகச் சொல்கிறோமோ அவ்வளவு விரைவாக அவர்களால் இதனைச் சரிசெய்ய இயலும். முழுமையான வெளியீட்டிற்குப்பின் சரிசெய்வது மிகவும் கடினமா ஒன்றாகிவிடும்.

அஞ்சல் விசைமுகம்

முரசு அஞ்சல் விசைமுகத்தை புதிதாகப் பழக விரும்புவோருக்கு இந்த இணைப்பில் உள்ள விவரங்கள் உதவும்: முரசு அஞ்சல் விசைமுகமும் அதன் பயன்பாடும்

தொடர்புடையவை:

  1. அஞ்சல் விசைமுகத்தில் ‘ந’, ‘ன’ வேறுபாடுகள்.
Did you like this? Share it: