24 மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள்

கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 24ஆம் நாள் மாலை, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்ப் பரப்புரைக் கழகம் எனும் ஒரு புதிய அமைப்பைத் தொடங்கிவைத்தார்.

அதில் தமிழ் மொழியை பல நாடுகளையும் மாநிலங்களையும் சேர்ந்த குழந்தைகள், அந்தந்த நாட்டு மொழிகளின்வழி மிக எளிதாகப் படிக்க, ஒரு பாடநூலை 24 மொழிகளில் வெளியிட்டார்.

தமிழ்ப் பரப்புரைக் கழகம் - தொடக்க விழா
“தமிழ்ப் பரப்புரைக் கழகம்” திட்டத்தை தொடங்கி வைத்து, முதலமைச்சர் விழாப் பேருரையாற்றுகிறார்கள்.

பிரெஞ்சு மொழிக்கு Alliance Française உம், எசுப்பானிய மொழிக்கு Instituto Cervantes உம் சீன மொழிக்கு கன்பூசியசு இன்ஸ்டிட்யூட்டும் இந்தியாவில் இந்தி மொழிக்கு இந்தி பிரச்சார சபாவும் என்ன பணிகளை ஆற்றுகின்றனவோ அதைப் போல உலகெங்கும் தமிழ் மொழியைப் பரப்பும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருப்பதுதான் தமிழ்ப் பரப்புரைக் கழகம்.

இதன் முதல் செயல்பாடுகளில் ஒன்று புலம்பெயர் தமிழர்களுக்குத் தமிழ் கற்பித்தல். குறிப்பாக நெடுங்காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்து தமிழ் மொழியை மறந்துவிட்ட மொரிஷீயஸ், பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் அமெரிக்கா, வளைகுடா நாடுகள் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழைக் கற்பிப்பதற்கான பாடநூல்கள் இல்லாமல் இருந்தது.

தமிழ் இணையக் கல்விக் கழகம் அந்தப் பணியை இணைய வழியில் நிறைவேற்றிவந்தது. இப்போது அதன் கீழ் தொடங்கப்பட்டுள்ள தமிழ் பரப்புரைக் கழகம், தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்கும் தமிழைக் கற்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

தமிழ்ப் பரப்புரைக் கழகம் : தமிழ் கற்றல் - கற்பித்தலுக்கான துணைக் கருவிகள்

அதன் முதற்கட்டமாக அடிப்படைத் தமிழ் பாடநூல் ஒன்று 24 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஜெர்மன், பிரெஞ்சு, போர்த்துக்கீசியம், ஸ்பானிஷ், ருஷ்யன். சீனம், ஜப்பானியம், அரபிக், கொரியன், தாய், மலாய் நேபாளி போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, அசாமி, வங்காளி, ஒடியா, பஞ்சாபி உள்பட பல இந்திய மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழ்ப் பரப்புரைக் கழகம் : பயில் - பாடநூல் செயலி

நன்றி: ஆழி செந்தில்நாதன்
படங்கள்: தமிழ் இணையக் கல்விக் கழகம்

இணைப்பு:
நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு

பயில் செயலி பதிவிறக்கம்:
ஆண்டிராய்டு | ஐபோன்/ஐபேட்/மெக்கு

தொடர்புடையவை:
கனியும் மணியும் – அனைத்துலக வெளியீடு

Did you like this? Share it: