உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சல் விசைமுகத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!
மைக்குரோசாப்டின் விண்டோசு இயக்கத்தின் ஒரு பகுதியாக முரசு அஞ்சல் விசைமுகத்தையும் சேர்க்கவேண்டும் எனும் முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. மைக்குரோசாப்டின் உள்ளிடு முறை மேம்பாட்டுக் குழுவினருடன், அஞ்சல் விசைமுகத்தை உருவாக்கியவரான மலேசியாவின் முத்து நெடுமாறன் அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பை அமைத்துக் கொடுத்து அந்த விசைமுகம் சரிவர இயங்கத் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கி வந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வெளிவந்த இதன் முன்னோட்டப் பதிப்பில், தமிழ்-இந்தியா எனும் சூழிடத்திற்கு மட்டுமே இந்த விசைமுகம் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வெளிவரும் முழுமையான பதிப்பில், நான்கு தமிழ் சூழிடங்களுக்கும் இந்த விசைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்-இந்தியா, தமிழ்-இலங்கை, தமிழ்-மலேசியா, தமிழ்-சிங்கப்பூர் எனும் நான்கில் எந்தச் சூழிடத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அஞ்சல் விசைமுகத்தைத் தமிழ் உள்ளிடு முறையாகத் தேர்வு செய்யலாம்.
தமிழில் அதிகமாக எழுதுவோர், குறிப்பாகத் தமிழகத்தில் உள்ளோரும் சிங்கப்பூரில் உள்ள தமிழ் ஆசிரியர்களும் பெரும்பாலும் தமிழ்-99 விசைமுகத்தையே பயன்படுத்துவர். ஆனால் அவ்வப்போது தமிழில் எழுதுவோரும், தமிழ்-99 விசைமுகம் அறிமுகம் காண்பதற்கு முன்பே தமிழில் தட்டெழுதி வருவோரும் அதிகம் பயன்படுத்துவது அஞ்சல் விசைமுகமே!
“மலேசியாவில் மலாய், ஆங்கில மொழிகளை உள்ளிடும் அதே வேளை, தமிழிலும் உள்ளீடு செய்ய வேண்டி உள்ளதால், மூன்று மொழிகளையும் ஒரே விசைப்பலகை அமைப்பைக் கொண்டு உள்ளிடுவது எளிமையாகிறது. இதற்கு அஞ்சல் விசைமுகமே பொருத்தமானது; பெரிதும் உதவியாகவும் இருக்கிறது.” என்று இருபது ஆண்டுகளாக அஞ்சல் விசைமுகத்தைப் பயன்படுத்திவரும் கல்வியாளரும் மலேசியக் கல்வி அமைச்சின் மூத்த பள்ளி ஆய்நருமான திரு என். எஸ். கமலநாதன் கூறினார்.
இந்த அஞ்சல் விசைமுகம் ஏற்கனவே மெக்கின்தாசு (மெக்) கணினிகளில் சேர்க்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு வெளிவந்த மெக் இயங்குதளத்தில் இதனைச் சேர்த்தவரும் முத்து நெடுமாறன்தான். பிறகு 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஐ.ஓ.எசின் 7ஆம் பதிப்பில் இருந்தும் இந்த விசைமுகம் ஐபோன்களிலும் ஐபேட்டுகளிலும் இயங்கி வருகிறது. ஆண்டிராய்டில், செல்லினம் செயலியின் வழி இந்த விசைமுகத்தைக் கொண்டு உலகெங்கிலும் இருந்து இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் தமிழில் தட்டெழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டோசு கணினிகளில், முரசு அஞ்சல் செயலியே இந்த விசைமுகத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தது. 1993ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்த விண்டோசு 3.1 முதலே அஞ்சல் விசைமுகத்தின் வழித் தட்டெழுதும் வாய்ப்பினை முரசு அஞ்சல் செயலி வழங்கி வந்திருக்கின்றது. அதன்பிறகு விண்டோசு 95, விண்டோசு 98, விண்டோசு மி, விண்டோசு என்.டி., விண்டோசு 2000 என்று தொடர்ந்து செயல்பட்டுவந்து இன்று இருக்கும் விண்டோசு 11இலும் இயங்கி வருகிறது.
அஞ்சல் விசைமுகம் அறிமுகம் கண்ட நாள் முதல் அதனைப் பயன்படுத்திவரும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர், திரு அருண் மகிழ்நன், “நான் கணினியில் தமிழ் தட்டச்சுச் செய்யத் தொடங்கியபோது, ஆங்கில எழுத்துகளுடன் கூடிய முரசு அஞ்சல் விசைப்பலகையைத்தான் தேர்ந்தெடுத்தேன். நான் ஆங்கிலத்தில் எழுத்துகளைத் தட்டத் தட்ட, அது தமிழ்ச் சொற்களாகத் தட்டச்சு செய்யும். தமிழ் விசைப்பலகைகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளும் பொறுமை எனக்கு இல்லாதிருந்ததால், அஞ்சல் விசைமுகம் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.” என்று கூறினார்.
மைக்குரோசாப்டு நிறுவனம் தனது விண்டோஸ் 10 இயங்குதளத்தில் தமிழ்-99 விசைமுகத்தையும் ‘ஒலிபெயர்ப்பு’ (phonetic) விசைமுகம் ஒன்றனையும் 2017ஆம் ஆண்டில் சேர்த்தது. இருப்பினும், ‘ஒலிபெயர்ப்பு’ விசைமுகம் அஞ்சல் விசைமுகத்தைப்போல் இல்லை. எனவே அஞ்சல் விசைமுகத்திற்கு முரசு அஞ்சல் செயலியையே பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.
“முரசு அஞ்சல் செயலி எந்தவிதச் சிக்கலும் இன்றிச் சிறப்பாக இயங்கி வந்தாலும், உள்ளீடு என்பது சிலவேளைகளில் இயங்குதளத்தோடு சேர்ந்து வருவதே சிறப்பு எனும் நிலை தற்போது நிலவி வருகிறது. அதற்கேற்ப அஞ்சல் விசைமுகமும் விண்டோசு 11ஓடு சேர்ந்து வருவது மிகவும் வரவேற்கத் தக்க ஒன்று. இதற்காகவே மைக்குரோசாப்டு நிறுவனத்தோடு சில ஆண்டுகளாக முயன்று வந்தேன். இன்று இதற்கானத் தீர்வு நமக்குக் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் மற்ற மொழி உள்ளீடுகளுக்குச் செய்யப்படும் மேம்பாடுகள் அனைத்தும் அஞ்சல் விசைமுகத்திற்கும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம். அது நமக்கு நல்ல பயன்களையும் அளிக்கும்” என்று முரசு அஞ்சல் செயலியையும் விசைமுகத்தையும் உருவாக்கிய முத்து நெடுமாறன் கூறினார்.
தொடர்புடையவை:
2. Murasu Anjal keyboard is now in Windows 11