அண்மையில் ஆண்டிராய்டு 13க்கு மேம்படுத்தப்பட்ட சியாவுமி, ரெட்மி, போக்கோ கருவிகளில் செல்லினம் முழுமையாகச் செயல்படவில்லை என்று சில பயனர்கள் கூறிவருகின்றனர்.
ஆண்டிராய்டு 13இல் இயங்கும் மற்றக் கருவிகளில் செல்லினத்தைப் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
சியாவுமி, ரெட்மி, போக்கோ கருவிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதால், நாங்களும் இந்தக் கருவிகளை விலைகொடுத்து வாங்கி, செல்லினத்தை இயக்கிப் பார்த்தோம். அமைப்புச் சேவை சரியாக இயங்கினாலும் மொழித்தேர்வைச் (language selection) சேய்ய முடியவில்லை. மொழித்தேர்வைத் தட்டினால், அதற்கானத் திரை தோன்றவில்லை.
இதை நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில், செல்லினத்தில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. மொழித்தேர்வு ஆண்டிராய்டு நமக்குச் செய்து கொடுக்கும் ஒன்று. செல்லினத்தின் உள் ஏற்படுவதில்லை. எனவே எங்களால் இதனைத் தீர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்தது.
மற்றக் கருவிகளில் இந்தச் சிக்கல் இல்லை என்பதால், சியாவுமி நிறுவனத்திடமே இதுகுறித்து ஒரு வழு அறிக்கை (bug report) அனுப்பினோம். ஒரே நாளில் அவர்கள் இதனை கவனிக்கப் போவதாக உறுதி அளித்து, சில நாட்கள் கழித்து சிக்கல் சியாவுமியின் செயல்பாட்டில்தான் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று காலை, இதற்கானத் தீர்வைக் கண்டுவிட்டதாகவும், அடுத்த சியாவுமி மென்பொருள் மேம்பாட்டில் (system update) இதனை சேர்த்துவிடப்போவதாகவும் கூறினர்.
இது மகிழ்ச்சியான செய்தியே!
என்று இந்த மேம்பாடு வெளிவரும் என்பதையும், எந்தெந்தக் கருவிகளுக்கு இவை இயல்பாகக் கிடைக்கும் என்பதையும் அவர்கள் கூறவில்லை. இந்தக் கருவிகளில் செல்லினத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் அந்நிருவனத்திடமே தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறுவது சிறப்பு. செல்லினத்தையும் தமிழையும் பயனர்கள் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சிக்கல்கள் நிகழாமல் இருக்க உதவும். தமிழின் பயன்பாடும் மேன்மைபெறும்!