இன்று செல்லினத்தின் 4.0.3ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது. இதில் ‘அஞ்சல்’, ‘தமிழ்99’ இரு விசைமுகங்களிலும் இருந்த சிற்சில வழுகள் நீக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் விசைமுகத்தில் பேச்சு வழக்கில் உள்ள ‘ஏன்-டா’, ‘வரேன்-டி’ போன்ற சொற்களை எழுதும்போது அவை ‘ஏண்டா’, ‘வரேண்டி’ என தானாக மாறிவிடும். இதற்க்குக் காரணம் ‘n’ விசைக்கு அடுத்து ‘d’ விசையை தட்டினால் ‘ன்ட்’ → ‘ண்ட்’ என மாறிவிடுவதுதான். எனவே ‘eendaa’ என்று தட்டும்போது அதில் ‘nd’ இருப்பதால் ‘ஏண்டா’ என்று மாறிவிடும். இந்த ன்→ண் மாற்றம் இல்லாமல் ‘ஏன்டா’ என்றே எழுத விரும்புவோர் இனி ‘n’ எழுத்துக்கும் ‘d’ எழுத்துக்கும் இடையில் ‘f’ எழுத்தைத் தட்டலாம். செல்லினம் 4இன் அஞ்சல் விசைமுகத்தில் ‘f’ எழுத்துக்கு சில பயன்பாடுகள் உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று. ‘eendaa’ என்று தட்டுவதற்கு பதில் ‘eenfdaa’ என்று தட்டினால் ‘ன்’ ‘ண்’ மாற்றம் இல்லாமல் ‘ஏன்டா’ என்றே வரும்.
தமிழ்99 விசைமுகத்தில் ‘அர்த்தம்’, ‘பார்த்து’ போன்ற சொற்களை எழுதும்போது ‘த்த’ வரும் இடத்தில் ‘தத’ எனத் தட்டும்போது, முதல் ‘த’-வுக்குச் சேரவேண்டிய புள்ளி சேராமல் இருந்தது. இந்த வழு 4.0.3இல் நீக்கப்பட்டுள்ளது.
இந்த வழுநீக்கங்கள் மட்டுமின்றி, 4.0.3ஆம் பதிப்பில் செல்லினம் தொடர்பான பயன்பாட்டுக் கட்டுரைகளை sellinam.com இணையதளத்தில் இருந்து தானாகவே பெறும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இனி அவ்வப்போது வெளிவரும் இதுபோன்ற அறிவிப்புகள், பயன்பாட்டு நுணுக்கங்கள் அடங்கிய கட்டுரைகளை செல்லினம் செயலியிலேயே பெற்று வாசிக்கலாம். புதிய கட்டுரைகள் வெளிவந்தால் ‘push notification’ எனும் குறுஞ்செய்தி போன்ற அறிவிக்கை, கருவிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
இந்தப் புதிய பதிப்பு பயனர்களுக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் பயனை அளிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்!