செல்லினத்தைக் கொண்டு தட்டெழுதும்போது ஒருசில எழுத்துக்களை எழுதியவுடன் அந்த எழுத்துகளோடு தொடங்கும் சொற்கள் பரிந்துரைப் பட்டியலில் தோன்றுகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன?
செல்லினத்தில் 100,000க்கும் மேற்பட்டத் தமிழ்ச் சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் (app) பதிவிறக்க அளவு பெரிதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தப் பட்டியலில் இருந்துதான் தட்டெழுதப்பட்ட முதல் எழுத்துக்களைக் கொண்டு சொற்கள் தேடப்படுகின்றன.
பட்டியலில் இல்லாத சொற்களை எழுதும்போது எந்தப் பரிந்துரையும் தோன்றாது. அப்படி எழுதப்பட்ட சொற்களை உடனே உங்கள் சொந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். சேர்த்துக்கொண்டபின் இந்தச் சொற்களை மீண்டும் எழுதத் தொடங்கும்போது மற்ற சொற்களைபோல் பரிந்துரையில் இயல்பாகத் தோன்றும். பேச்சுத் தமிழில் பயன்படுத்தப் படும் சொற்கள், வட்டார வழக்கு சொற்கள், நண்பர்களுடைய பெயர்கள், இவற்றை எல்லாம் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
சொற்களைச் சேர்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. இரண்டு வழிகளை இங்குக் காண்போம்.
அ. எழுதும்போதே சேர்த்தல்
பட்டியலில் இல்லாத ஒரு சொல்லை எழுதி, வெளியைத் (space) தாட்டியவுடன், அந்தச் சொல்லின் கீழ் உள்ள கோடு மறைந்துவிடும். மீண்டும் பின்வெளியைத் (back-space) தட்டினால் அதே சொல் பரிந்துரைப் பட்டியலில் தோன்றும். பரிந்துரைப் பட்டியலில் அந்தச் சொல்லைத் தட்டினால், ‘touch here to save’ எனும் கட்டம் தோன்றும். அதைத் தொட்டவுடன் நீங்கள் எழுதிய சொல் உங்கள் சொந்தச் சொற்பட்டியலில் சேர்ந்துவிடும்.
ஓர் எடுத்துக்காட்டு: ‘வச்சிக்கலாம்’ எனும் சொல்லை நீங்கள் எழுத நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தச் சொல் செல்லினத்தின் சொற்பட்டியலில் இல்லை. இந்தச் சொல்லை முதன்முதலில் எழுதும்போது பரிந்துரைப் பட்டியலில் தோன்றாது.
‘வச்சிக்கலாம்’ என்று எழுதியவுடன், சொந்தப் பட்டியலில் சேர்க்கும் வழியைக் கீழே கொடுக்கப்பட்ட காணொளியில் காணலாம். சேர்க்கப்பட்டச் சொல்லை மீண்டும் எழுதும்போது ஒருசில எழுத்துக்களை எழுதியவுடனே ‘வச்சிக்கலாம்’ எனும் சொல் பரிந்துரையில் தோன்றுவதையும் காணலாம்.
https://www.youtube.com/watch?v=t1Wl25BpsbI
ஆ. இடைமுகம் வழிச் சேர்த்தல்
உங்கள் சொந்தச் சொற்பட்டியலில் உள்ள சொற்களைக் காண்பதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும் செல்லினத்தில் ஓர் இடைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இடைமுகத்தின் வழி புதிய சொற்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாது சொற்களை விரைவாக எழுதுவதற்கு குறுக்குவழிகளையும் (short-cuts) சேர்த்துக் கொள்ளலாம்.
இந்தக் காணொளி சொற்பட்டியல் இடைமுகத்தைக் கொண்டு குறுக்கு வழி ஒன்றைச் சேர்ப்பதைக் காட்டுகின்றது.
https://www.youtube.com/watch?v=D4n8wV-zQa0
இந்த வசதிகள் செல்லினத்தைக் கொண்டு தமிழில் எழுதுவதை மேலும் எளிமைப்படுத்தும் என்று நம்புகிறோம்!