செல்லினத்தின் தமிழ் இடைமுகம் இதுவரை ta_IN என்று குறிக்கப்படும் இந்திய நாட்டு வட்டாரத்திற்கு (locale) மட்டுமே தோன்றியது. இந்தியாவைத் தவிர்த்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு வட்டாரங்களுக்கும், தமிழ் ஒரு மொழியாகச் சேர்க்கப் பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே. இந்த நான்கு வட்டாரங்களையும் ஆண்டிராய்டின் புதிய பதிப்புகள் மதிக்கின்றன.
ஆண்டிராய்டின் 5.1ஆம் பதிப்பு வரை, கருவியின் இயக்க மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுக்க எல்லாக் கருவிகளிலும் வாய்ப்பில்லை. இந்திய மொழிகளின் இயக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட தனிச்சிறப்புக் கருவிகளில் மட்டுமே, இந்த வசதி இருந்து வருகிறது. இந்த நிலை அடுத்தடுத்து வரக்கூடிய ஆண்டிராய்டு பதிப்புகளில் மாறலாம். அப்படி வந்தால் அனைவருக்கும் தமிழ் இடைமுகம் ஒரு தேர்வாக அமையும். எனவே செல்லினத்தின் 4.0.5ஆம் பதிப்பில் முறையே ta_IN, ta_LK, ta_MY, ta_SG ஆகிய வட்டாரங்களிலும் தமிழ் இடைமுகம் செப்பம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழை இயக்க மொழியாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கருவியில் (HTC One Mini) தமிழ் இடைமுகம் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை பின்வரும் திரைப் பிடிப்புகள் (screen captures) காட்டுகின்றன. தமிழைத் தாய்மொழியாகவும் முதல் மொழியாகவும் கொண்ட பயனர்கள், கணினிச் செயலிகளையும் கையடக்கக் கருவிகளில் உள்ள குறுஞ்செயலிகளையும் தமிழிலேயே இயக்கிப் பயன்பெறலாம் எனும் நிலை இயல்பாகவே வரவேண்டும்.
தமிழ் இடைமுகம், கணினிச் செயலிகளிலும் (applications) குறுஞ்செயலிகளிலும் (apps) பரவலான பயன்பாட்டிற்கு இன்னும் அதிகமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்த வேண்டும், அவற்றை புழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் அவா.
எனவே, செல்லினத்தில் கையாளப்படும் இடைமுக மொழி குழப்பத்தினைத் தருவதாக இருந்தால் தயங்காமல் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். ‘பொது‘ → ‘செல்லினத்தைப் பற்றி‘ எனும் பக்கத்தில் ‘கருத்துகளைக் கூறுக‘ எனும் கட்டத்தைத் தட்டி உங்கள் எண்ணங்களை எங்களுக்கு எழுதலாம்.
தொடர்புடையக் கட்டுரை: பதிவிறக்க வழிமுறைகள்