கணினியில் செல்லினம்

செல்லினத்தை பதிவிறக்கம் செய்த பலருக்கு, கையடக்கக் கருவியே அவர்களின் முதல் ‘கணினியாக’ அமைந்திருக்கின்றது. இவர்கள் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கும்போது கணினியில் செல்லினம் கிடைக்குமா என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. எனவே சில குறிப்புகள், அதன்பின் ஒரு நற்செய்தி.

செல்லினம் முதன்முதலில் பொதுப் பயனீட்டிற்கு வந்தது 2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று. இதுகுறித்த விவரத்தை இந்த இணைப்பில் காணலாம்: https://sellinam.com/about 

செல்லினத்திற்கு அடிப்படையாக அமைந்தது ‘முரசு அஞ்சல்’ எனும் கணினி மென்பொருள். 1985ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்ட முரசு அஞ்சலில், பல உள்ளீட்டு முறைகளும் அழகான தமிழ் எழுத்துருக்களும் அடங்கியிருக்கும் – இன்றும் அடங்கி இருக்கின்றன. மலேசியாவில் வெளிவரும் பெரும்பாலான நாள், வார இதழ்கள், தமிழ்ப் பள்ளிகள், எழுத்தளர்கள், இயக்கங்கள் என பல துறையினர் முரசு அஞ்சல் செயலியைக் கொண்டு தமிழ் படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள கல்வி அமைச்சின் தமிழ் மொழி மையங்களில் முரசு அஞ்சல் செயலியே ‘முரசு அஞ்சல் சிங்கப்பூர் கல்வி அமைச்சி’ எனும் பெயரில் பணித்துறைக்குரிய செயலியாக விளங்கி வருகிறது. மெக்கிண்டாஷ் கணினிகளில் 2004ஆம் ஆண்டுமுதல் இயல்பாகவே முரசு அஞ்சல் உள்ளீட்டு முறைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதுபோலவே ஐபோன் ஐபேட் கருவிகளிலும் எச்.டி.சி. நிருவனம் உருவாக்கி வெளியிடும் ஆண்டிராய்டு கருவிகளிலும் முரசு அஞ்சல் உள்ளீட்டு முறைகளும் எழுத்துருக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

1993ஆம் அண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை முரசு அஞ்சலின் இலவயப் பதிப்பு ஒன்று இணையம் வழியாக வழங்கப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் இதன் பயன்பாடு உலக அளவில் பெருகியது. 2002ஆம் ஆண்டுக்குப் பின் வணிகப் பதிப்பு மட்டுமே இருந்து வந்தது.

கடந்த மார்ச்சு மாதம் 14ஆம் நாள் முரசு அஞ்சலின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையும் பல பயனுள்ள கட்டுரைகளையும் செல்லியல் இணைய தளம் வெளியிட்டது. அவற்றை இங்கே காணலாம்:

முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு விழாக் கட்டுரைகள்

இந்தவிழாவில், ‘முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிப்பு‘ கணினி பயனர்களுக்காக இலவயப் பதிப்பாக வெளியிடப்பட்டது. இதில் ‘அஞ்சல்’, ‘தமிழ்99’ ஆகிய இரு விசைமுகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் செலுத்தி இந்தப் பதிப்பை எந்தவிதக் கட்டணமும் இன்றிப் பெற்றுக் கொள்ளலாம்!

கணினியில் செல்லினம் கிடைக்குமா என்று கேட்ட பயனர்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம்!

இதோ இணைப்பு: http://mutal.anjal.net

Murasu Anjal Logo

Did you like this? Share it: