தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள்

‘செல்லினம்’, ‘முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு’ – இவ்விரண்டு செயலிகளிலும் இரண்டு தமிழ் விசைமுகங்கள் (keyboard layout) மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்று ‘அஞ்சல்’ மற்றொன்று ‘தமிழ்-99’. தமிழ்-99 பயன்பாட்டு வழிமுறைகள் குறித்து சிற்சில குறிப்புகள் ஆங்காங்கே ஆங்கிலத்தில் உள்ளன என்றாலும் இந்த விசைமுகத்தின் முழுமையானப் பயனைத் தமிழில் வழங்கும் நோக்கிலும், கையடக்கக் கருவிகளுக்காகச் செய்யப்பட்ட சிறு மாற்றங்கள் குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

அஞ்சல் விசைமுகப் பயன்பாட்டு வழிமுறைகளை இந்தப் பதிவில் காணலாம்: https://sellinam.com/archives/406

இவ்விரு விசைமுகங்களில் எது சிறந்தது எனும் வாதம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இது பயனற்ற வாதம். இரு விசைமுகங்களும் இரு வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆங்கிலத்திலோ மலாய் மொழியிலோ அதிகம் தட்டச்சு செய்து அவ்வப்போது தமிழில் எழுத நினைப்பவர்கள் மிக எளிமையாகத் தமிழில் தட்டெழுத உதவுவதே ‘அஞ்சல்’ விசைமுகத்தின் நோக்கம். தமிழிலேயே அதிகம் தட்டச்சு செய்பவர்களுக்கு குறைந்த விசை அழுத்தங்களைக் கொண்டு வேகமாகத் தமிழில் தட்டெழுத வடிவமைக்கப்பட்டதே தமிழ்-99 விசைமுகம். நோக்கங்கள் வேறு. அதற்கேற்ப அமைப்பு முறைகளும் வேறு. அஞ்சலின் அடிப்படை நோக்கம் எளிமை. தமிழ்99இன் அடிப்படை நோக்கம் விரைவு. இதனால் அஞ்சலில் வேகம் இல்லை என்றோ தமிழ்-99இல் எளிமை இல்லை என்றோ பொருள்படாது! தமிழ் விசைமுகங்கள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வேறொரு கட்டுரையில் காண்போம்.

தமிழ்-99 விசை அமைப்பு

tamil99_keyboard
நன்றி: http://www.tamilvu.org

சென்னையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்-99 விசைமுக அமைப்பை மேலே உள்ள படம் காட்டுகிறது. கணினியின் ஆங்கில விசைப்பலகையில் உள்ள விசைகளில் தமிழ் எழுத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பில் முதல் வரிசையில் 12 விசைகள் தமிழ் எழுத்துகளைக் கொண்டுள்ளன. கையடக்கக் கருவிகளில் 12 விசைகளை ஒரே வரியில் சேர்த்தால், விசைகளின் அளவு மிகவும் சிறிதாகிவிடும். விரலைக் கொண்டு தட்டுவதற்கு உகந்த அளவாக அமையாது. பொதுவாக, கையடக்கக் கருவிகளின் விசைமுகங்களில் ஒரு வரிசையில் 11க்கும் மேற்பட்ட விசைகளை அடுக்குவதைத் தவிர்ப்பதே சிறந்ததெனக் கருதப்படுகிறது.

எனவே, கையடக்கக் கருவிகளுக்கென செல்லினத்தின் தமிழ்-99 அமைப்பில் இரண்டே மாற்றங்களைச் செய்தோம்.

  • ‘F’ விசையில் சேர்க்கப்பட்ட புள்ளிக்கான விசையை வெளி விசையின் (space bar) வலது பக்கத்திற்கு மாற்றினோம்.
  • முதல் வரிசையில் இருந்த ‘ஐ’ எழுத்துக்கான விசையை இரண்டாவது வரிசைக்கு மாற்றினோம்.

இவ்விரண்டு மாற்றங்களுக்குப்பின் ஒரு வரியில் 11 விசைகளுக்குமேல் அடுக்க வேண்டியத் தேவை நீக்கப்பட்டு விட்டது. அதேவேளையில் விசைகளின் வரிசைகள் எந்த வசதிகளுக்காக அமைக்கப்பட்டனவோ அந்த வசதிகள் எந்தவிதத்திலும் குறையாமல் இருப்பதை இந்த மாற்றங்கள் உறுதி செய்கின்றன.  இந்த அமைப்பு 2011ஆம் ஆண்டு எச்.டி.சி. நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளில் சேர்க்கப்பட செல்லின விசைமுகங்களில் பயன்படுத்தப்பட்டது. கூகுள் பிளேயில் வெளியிடப்பட்ட செல்லினத்தில் 2012ஆம் ஆண்டிலும் அதன்பின் 2013ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஐபேட் கருவிகளிலும் இந்த அமைப்பு சேர்க்கப்பட்டது.

செல்லினம் தமில்-99 விசைமுகம்: இயல்நிலை (unshifted)
செல்லினம் தமிழ்-99 விசைமுகம்: இயல்நிலை (unshifted)

செல்லினம் தமிழ்-99 விசைமுகம்: மாற்றுநிலை (shifted)
செல்லினம் தமிழ்-99 விசைமுகம்: மாற்றுநிலை (shifted)

இயக்க முறை

1. அகரமேறிய உயிர்மெய் எழுத்துகளுக்கும் உயிர் எழுத்துகளுக்கும் தனித்தனியே விசைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2. மெய் எழுத்துகளை தட்டெழுதிட முதலில் அகரமேறிய உயிர்மெய் எழுத்தைத் தட்டி அதன்பின் புள்ளியைத் தட்ட வேண்டும்.

எ.கா:

விசைகள் விழைவு
அ த ன ் அதன்
க ல ் கல்

3. உயிர்மெய் எழுத்துகளை தட்டெழுதிட முதலில் அகரமேறிய உயிர்மெய் எழுத்தைத் தட்டி அதன்பின் உயிர் எழுத்தைத் தட்ட வேண்டும்.

எ.கா:

விசைகள் விழைவு
ம உ ழ உ ம ஐ ய ஆ க இ முழுமையாகி
த ஏ ட இ ய ப ஓ த உ ம ் தேடியபோதும்

4. அகரமேறிய உயிர்மெய் எழுத்துகளை இருமுறைத் தட்டினால் முதலாவது எழுத்தில் தானாகவே புள்ளி சேர்ந்துவிடும். இதைப்போலவே ஙக, ணட, நத, மப போன்ற இணைகளைத் தட்டும்போது முதல் எழுத்தில் தானாகவே புள்ளி சேரும். தானாகப் புள்ளி சேர்வதைத் தவிர்க்க இரு தட்டுகளுக்கும் இடையில் ‘அ’-வைத் தட்டலாம்.

இந்த வசதியைப் பற்றிய விரிவான பதிவை இங்கே காணலாம்: https://sellinam.com/archives/341

கிரந்த எழுத்துகள்

கணினியில் பயன்படுத்தப்படும் தமிழ்-99 விசைமுகத்தைப் போலவே, செல்லினத்திலும் கிரந்த எழுத்துகள் மாற்றுநிலை (shifted) விசைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கணினிகளில் இல்லாத ஒரு வசதி கையடக்கக் கருவிகளில் உண்டு. அதுதான் நீண்ட அழுத்தம் (long press). மாற்றுவிசைமுகத்திற்குச் செல்லாமலேயே கிரந்த எழுத்துகளைத் தட்டும் வாய்ப்பு செல்லினத்தில் உள்ளது. ‘ச’ விசையை சற்று நேரம் தொட்டுக்கொண்டே இருந்தால், கீழ்க்காணுமாறு கிரந்த எழுத்துகள் தோன்றும். திரையைத் தொட்டுக்கொண்டே வேண்டிய எழுத்துக்குக் கொண்டுசென்று விரலை எடுத்தால் அந்த எழுத்து தட்டெழுதப்படும்.

Screenshot_2015-06-27-19-47-13
‘ச’ விசையின் நீண்ட அழுத்தத்தில் தோன்றும் எழுத்துகள்.

இதைப்போலவே ‘க’ விசையின் நீண்ட அழுத்தத்தில் தோன்றும் கிரந்த எழுத்துகள்:

Screenshot_2015-06-27-19-51-41
‘க’ விசையின் நீண்ட அழுத்தத்தில் தோன்றும் கிரந்த எழுத்துகள்.

எண்களும் ஆய்த எழுத்தும்

விசைமுகத்தின் முதல் வரியில் உள்ள முதல் 10 விசைகளில் எண்களும் 11வது விசையான ‘ஞ’ விசையில் ஆய்த எழுத்தும், நீண்ட அழுத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் எண்களும் குறுக்கெழுத்துகளும்

தமிழ் எண்களையும், மாதம், வருடம் முதலிய குறுக்கெழுத்துகளையும் செல்லினத்தின் தமிழ்-99 விசைமுகத்தின் வழித் தட்டெழுதலாம். இவை பயன்பாட்டில் அதிகம் இல்லாததால் இந்த எழுத்துகளுக்கான விசைகள் மாற்று நிலையில் (shifted) அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்-99 விசைமுகமும் யூனிகோடும்

யூனிகோடு தரத்தில் தமிழுக்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் எழுத்துகளில் ஓரிரண்டைத் தவிர அனைத்தையும் செல்லினத்தின் தமிழ்-99 விசைமுகத்தின் வழித் தட்டெழுதலாம். பயனர்கள் இந்த வசதியை சற்றுப் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும். இல்லையேல் தவறான குறியீடுகள் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எடுத்துக்காட்டாக தமிழ் ரூபாய்க்கான வரிவடிவத்தை ‘ரூ’ எழுத்தாக எண்ணியும் தமிழ் எண்ணான ‘௫’ (5) வடிவத்தை உகரம் ஏறிய ரகரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். அதுபோலவே தமிழ் எண்களான ‘௧’ (ஒன்று)  ககரம் போலவும், ‘௭’ (7) எகரம் போலவும், ‘௮’ (8) அகரம் போலவும் தோன்றுகின்றன.

எண்களுக்கும் குறுக்கெழுத்துகளுக்கும் யூனிகோடில் தனித்தனியே குறியீடுகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றை எழுத்துகளாகப் பயன்படுத்தினால் பிழைகள் நேரும். பரிந்துரைகள் சரியாகத் தோன்றாது. ஆவணத்திலோ இணையத்திலோ தேடினால் எண்களும் குறியீடுகளும் அடங்கிய சொற்கள் சரியாகக் கிடைக்காது.

இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே செல்லினத்தில் பயன்பாட்டில் உள்ள எழுத்துகள் அனைத்தும் தமிழ்-99 இயல்நிலை (unshifted) விசைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுநிலைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை!

தொடர்புடையக் கட்டுரைகள்:

Did you like this? Share it: