கையடக்கக் கருவிகளில் விரைவாகத் தட்டெழுத, புளூதூத் விசைப்பலகைகளைப் பயன்படுத்துவது இயல்பாகி வருகின்றது. சில தட்டைக் கருவிகளில் (டேபிளட்டுகளில்) இதுபோன்ற விசைப்பலகைகள் சேர்ந்தே வருகின்றன.
செல்லினத்தில் இந்தப் பலகைகளைக் கொண்டு தமிழில் எழுத இயலவில்லையே எனும் குறை இதுவரை இருந்து வந்தது. இன்று வெளிவந்துள்ள செல்லினத்தின் 4.0.6ஆம் பதிகையில் இந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆண்டிராய்டு கருவியில் புளூதூத் வழி விசைப்பலகையை சேர்க்கும் வசதி இருந்தால், இந்தப் புதிய செர்க்கையைப் பயன்படுத்தலாம்.
விசைப்பலகையை செல்லினத்தோடு இணைக்கும் அமைப்பு முறை, கருவிக்குக் கருவி மாறுபட்டிருக்கின்றது. சாம்சாங் கருவியில் அமைக்கும் முறைக்கும் எச் டி சி கருவியில் அமைக்கும் முறைக்கும் வேறுபாடுகள் உள்ளன. புளூதூத் விசைப்பலகை உங்கள் கருவியில் சரிவர அமைத்ததும், அமைப்புப் பக்கத்தைப் படமெடுத்து, sellinam dot help at gmail dot com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். செல்லினத்தின் முகநூல் பக்கத்தில் அவற்றைப் பகிர்கிறோம். மற்ற பயனர்களுக்கும் அந்தப்படங்கள் கண்டிப்பாக உதவும்.
பலகையின் வழித் தட்டெழுதுவதால், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் உள்ளீட்டு முறையை மாற்றுவதற்கும் சில புதிய வழிகளை அறிமுகம் செய்துள்ளோம்:
விசைகள் | உள்ளிடு முறை |
---|---|
Alt-1 | முரசு அஞ்சல் |
Alt-2 | தமிழ்-99 |
Alt-3 | ஆங்கிலம் (UK) |
Alt-4 | ஆங்கிலம் (US) |
Alt-5 | மலாய் (MY) |
எச் டி சி வகைக் கைபேசி ஒன்றில் புளூதூத் விசைப்பலகையைக்கொண்டு தமிழில் எழுதப்படுவதை கீழே உள்ள படம் காட்டுகின்றது.
இந்த வசதியை விரும்பிக்கேட்டு, சோதித்துப்பார்ப்பதுக் கருத்துகள் கூறிய பாலா ஜி-க்கும், இவரை அறிமுகப் படுத்திய மணி மணிவண்ணனுக்கும் செல்லினத்தின் நன்றி!