நூலில் அச்சிடப்பட்ட பக்கமாக இருந்தாலும் சரி, இணையத்தில் பதிப்பிக்கப்பட்ட மின்பதிப்பாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பத்தியிலும் சேர்க்கப்பட்ட வரிகளும், அந்த வரிகளில் கோக்கப்பட்ட எழுத்துகளும் அந்தப் பக்கமே சீரான தோற்றத்தைக் கொண்டிருப்பதற்கு உதவுகின்றன. பொருத்தமான வடிவங்களைக் கொண்ட எழுத்துருக்கள், எழுத்துகளின் தடிப்புத் தன்மை, சாய்வளவு, எழுத்துகளுக்கும் வரிகளுக்கும் இடையே அமைந்துள்ள இடைவெளி போன்ற கணக்குகள் பக்கத்திற்கு அழகு சேர்ப்பதோடு படிக்கும் ஆவலைத் தூண்டுவதற்கும் உதவுகின்றன.
தமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் அவசியத்தை வலியுறுத்தவும், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரும் அத்தோபர் திங்கள் 17, 18ஆம் நாள்களில், “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்” ஒன்றனை கணித்தமிழ்ச் சங்கம் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படவிருக்கும் முதன்மையானத் தலைப்புகள்:
- ஓலைச் சுவடி முதல் கையடக்கக் கருவிகள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிமுறை வளர்ச்சி.
- மேற்கத்திய எழுத்துருவியலிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் – காலப்போக்கில் மேற்கத்திய எழுத்துருவியல் எவ்வாறு வளர்ச்சி பெற்றது? – சவால்களும் தீர்வுகளும்
- இந்திய எழுத்துருவியல் பரிசோதனைகள் – இந்திய எழுத்துருவியலைத் தரப்படுத்தலில் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்
- தமிழ் எழுத்துருவியலின் பண்புக்கூறுகள்
- ஆப்பிள், ஆண்டிராய்டு கருவிகளில் தமிழ் எழுத்துருவியலின் பட்டறிவுகள்
- அச்சு ஊடகத்தில் எழுத்துருவியல் பயன்பாட்டுச் சிக்கல்கள்
- எண்மிய அச்சிலும், காட்சித்திரைக் கருவிகளிலும் எழுத்துருவியல் சிக்கல்கள்
- கலை, விளம்பர ஊடகங்களில் எழுத்துருவியல் பயன்பாடும் தோன்றும் சிக்கல்களும்
கருத்தரங்கில் பங்கேற்கவுள்ள சிறப்பு அழைப்பாளர்கள்:
இந்தியா முழுவதிலும் இருந்து எழுத்துருவியல் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வுகளையும் உருவாக்கங்களையும் மேற்கொண்டுவரும் வல்லுநர்கள் சிறப்புக் கட்டுரைகளைப் படைக்கவிருக்கின்றனர். மலேசியாவில் இருந்து, முரசு நிறுவனத்தின் தோற்றுநரும் செல்லினம் செயலியின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்துகொள்கிறார். கையடக்கக் கருவிகளில், குறிப்பாக ஆப்பிள், ஆண்டிராய்டு கருவிகளில், தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிய பட்டறிவை இவர் பகிர்வார்.
எழுத்துருவியலாளராக இருந்தாலும் சாரி, எழுத்துருகளை பார்த்து பயன்படுத்தி மகிழும் பயனராக இருந்தாலும் சரி, கருத்தரங்கில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நிறைந்த பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
கருத்தரங்க அமைப்பாளர்களைப் பற்றி:
பதினாறு ஆண்டுகளாக இயங்கிவரும், கணித்தமிழ்ச் சங்கம் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் சங்கமாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் பணியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடுகளை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சியிலும் முன்னெடுப்பிலும் தமிழ்நாடு அரசு, உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) ஆகியவற்றுடன் நெருங்கி இணைந்து பணியாற்றி வருகிறது.
பதிவு:
- இரண்டு நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்க ஒரு நபருக்கு ரூ. 1500/– மட்டுமே.
- கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
- முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே கருத்தரங்கில் பங்கேற்க முடியும்.
- 2015 அக்டோபர் 15ம் தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
மேல் விபரங்களுக்கு:
கணித்தமிழ்ச் சங்கம், 2ஆம் மாடி, 421, அண்ணா சாலை, சென்னை–18. தொலைபேசி: 24355564; செல்பேசி: 94440–75051. மின்னஞ்சல் முகவரி: tamiltypography@gmail.com இணையத்தளம்: http://kanithamizh.in