செல்லினத்தில் உள்ள அஞ்சல் விசைமுக அமைப்பு, ‘n’ விசையைத் தட்டும்போது இடத்திற்கேற்ப ‘ந்’-ஆகவும், ‘ன்’-ஆகவும், செலுத்துகிறது.
எடுத்துக்காட்டாக:
விசைகள் | விழைவு |
---|---|
namatu | நமது |
manatu | மனது |
முதல் சொல்லில் ‘n’ விசை சொல்லின் தொடக்கத்தில் தட்டப்பட்டதால், அது ‘ந்’-ஆகச் செலுத்தப்பட்டது. இரண்டாவது சொல்லில் ‘n’ விசை இடையில் தட்டப்பட்டதால் அது ‘ன்’-ஆகச் செலுத்தப்பட்டது.
ஒரு வரியின் தொடக்கத்திலோ அல்லது வெளி (space), இடுகை (return) முதலிய விசைகளுக்குப் பின்னோ ‘n’ விசைத் தட்டப்பட்டால், அது ‘ந்’ எழுத்தைச் செலுத்தும். ஒரு சொல்லின் இடையில் ‘n’ தட்டப்பட்டால் அது ‘ன்’ எழுத்தைச் செலுத்தும்.
சரி, அப்படியானால் ‘மாநாடு’, ‘மாநிலம்’, ‘இயக்குநர்’ போன்ற சொற்களை எப்படி எழுதுவது? இந்தச் சொற்களில் ‘ந’ இடையில் அல்லவா வருகிறது? சொல்லுக்கு இடையில் ‘n’ தட்டினால் ‘ன்’ தானே வரும்? ‘maanaadu’ என்று தட்டினால், ‘மானாடு’ என்றுதானே வரும்?
பரிந்துரைகளைப் பயன் படுத்துவோர் சரியான சொற்களைப் பட்டியிலில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். எனவே, ‘maanaadu’ என்று தட்டினாலும், மாநாடு எனும் சொல்லை, செல்லினம் பரிந்துரையில் சேர்த்து, அதனை முதன்மைப் பரிந்துரையாகவும் காட்டும்.
எ.கா.:
பரிந்துரைகளைப் பயன்படுத்தாதோருக்கு இதில் சிக்கல் ஏற்படலாம். இந்தச் சொற்களில் ‘n’ விசையை இடையில் தட்டும்போது ‘ன்’-எழுத்தையே செலுத்தும். எனவே, இங்கே ‘ந்’ எழுதுவதற்கு ‘n’- விசைக்கு பதிலாக ‘w’ விசையைப் பயன்படுத்தலாம். எ. கா.:
விசைகள் | விழைவு |
---|---|
maawaadu | மாநாடு |
maawilam | மாநிலம் |
iyakkuwar | இயக்குநர் |
இந்த ‘w’ விசை, ஒரு சொல்லின் எந்த இடத்தில் தட்டினாலும் ‘ந்’- எழுத்தைத்தான் செலுத்தும். சில பயனர்கள், சொல்லின் தொடக்கத்தில் ‘ந’ வேண்டும் என்றாலும் இந்த ‘w’ விசையைத்தான் பயன் படுத்துகிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. ‘நமது’ எனும் சொல்லை ‘wamatu’ என்று தட்டினாகும் சரியாகத்தான் வரும்.
சரி, சொல்லின் தொடக்கத்திலோ, தனியாகவோ ‘ன’ வேண்டும் என்றால் என்ன செய்வது? செல்லினத்தின் அஞ்சல் விசைமுகத்தில் இதற்கெனவே ஒரு சிறப்பு விசை உள்ளது.
எப்படி ‘w’ விசை எந்த இடத்திலும் ‘ந்’ எழுத்தைச் செலுத்துகிறதோ, அதுபோல ‘W’ (upper case W) எந்த இடத்திலும் ‘ன்’ எழுத்தைச் செலுத்தும். எ. கா.:
விசைகள் | விழைவு |
---|---|
ma<space>na<space>m | ம ந ம் |
ma<space>Wa<space>m | ம ன ம் |
முயன்று பாருங்கள். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
முரசு அஞ்சல் விசைமுகத்தின் முழுமையான விசை அமைப்புப் பட்டியலை இங்கே காணலாம்: Anjal Key Layout
குறிப்பு:
ஒரு சொல்லை எழுதியபிறகு வெளிநீக்கம் (back space) செய்து, வேறொரு எழுத்தைத் தட்டினால் சரியான பரிந்துரைகள் தோன்றுவதில்லை. இந்த வழு அடுத்தடுத்து வரும் பதிகைகளில் நீக்கப்படும்.