ஓரிரு வழுநீக்கங்களையும் சிற்சில மேம்பாடுகளையும் கொண்ட செல்லினத்தின் 4.0.7ஆம் பதிப்பை தேர்வுநிலைப் பயன்பாட்டிற்காக கூகள் பிளேயில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதில் உள்ள இரு முகன்மையானக் கூறுகள்:
- லெனொவோ A6000 கருவியில் ஆண்டிராய்டு 5.0.2க்கும் மேம்படுத்தியவுடன் செல்லினம் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து முந்தைய கட்டுரையில் கூறியிருந்தோம். இந்தச் சிக்கலுக்கானத் தற்காலிகத் தீர்வு ஒன்றை இந்தப் பதிப்பில் சேர்த்துள்ளோம்.
- தமிழில் ‘ஓம்’ (ௐ) சின்னைத்தைத் தட்டச்சிட வாய்ப்பு வேண்டும் என சில பயனர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்காக அஞ்சல் அமைப்பில் OM (அல்லது ooM) விசைகளிலும், தமிழ்99 அமைப்பில் ‘ஓ’ விசையின் நீண்ட அழுத்தத்திலும் (long press), இந்தச் சின்னத்தைச் சேர்த்துள்ளோம்.
தேர்வுநிலைப் பதிப்பாக இருப்பதால், இந்த பதிப்பினைப் பெறுவதற்கு கூகுள் பிளேயில் முதலில் நீங்கள் ஒப்புதல் வழங்கவேண்டும். அதன்பின் வழக்கமாக கூகுள் பிளே செயலியின் வழி செல்லினத்தின் 4.0.7ஆம் பதிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுநிலைப் பதிப்பைவிட்டு இயல்நிலைப் பதிப்பிற்குச் செல்லவேண்டுமாயின் அதே முகவரிக்குச் சென்று தேர்வுநிலைப் பயனராக இருப்பதில் இருந்து நீங்கிக் கொள்ளலாம். தற்போதைய இயல்நிலைப் பதிப்பு 4.0.6.
ஒப்புதலை வழங்க நீங்கள் இங்கே செல்லலாம் : செல்லினம் தேர்வு நிலைப் பதிப்புப் பக்கம்
தேர்வுப் பயன்பாட்டின் போது புதிய சிக்கல்கள் எதுவும் தோன்றவில்லையெனில் பொதுப்பயனீட்டிற்கு இந்தப் புதிய பதிப்பு வெளியிடப் படும்.
இந்த 4.0.7ஆம் பதிப்பைப் பயன்படுத்திக் கருத்துகளைக் கூற ஓரளவு தொழில்நுட்ப ஈடுபாடுடைய பயனர்களை அழைக்கிறோம். குறிப்பாக லெனொவோ A6000 கருவியில் ஆண்டிராய்டு 5.0.2க்கு மேம்படுத்திய பயனர்களிடம் இருந்து அவர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கலுக்கு இந்தப் பதிப்பில் தீர்வு உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.