அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்

‘அஞ்சல்’ விசையமைப்பின் பயன்பாட்டு முறை, ஆங்கிலத்தில் இங்கே உள்ளது. இது தமிழில் வேண்டும் என்று பலர் கேட்டுள்ளனர். இவர்களின் தேவைக்காக அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவத்தை இங்கே தருகின்றோம். அதோடு, இந்த விசையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகளை சற்று விரிவாகவும் விளக்கியுள்ளோம். கீழே உள்ள 9ஆம் பகுதியும், 10ஆம் பகுதியும் புதிய வசதிகளைப் பற்றி விளக்குகின்றன.

*****

அஞ்சல் - Logo

‘அஞ்சல்’ எனும் விசையமைப்பு (key layout) முதன்முதலில் 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ‘முரசு அஞ்சல்’ செயலியின் இலவசப் பதிப்பில் இந்த அஞ்சல் விசையமைப்பே முதன்மை அமைப்பாக கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அதிகம் எழுதுவோர் விரைவாகத் தமிழில் தட்டெழுதக் கற்றுக்கொள்ள இந்த அமைப்பு வழங்கும் வசதியும், பயன்பாட்டு எளிமையும், இதை மிகவும் புகழ்பெற்ற ஒரு விசையமைப்பாக நிலைநாட்டியது. ஆங்கில எழுத்துகளைத் தட்டெழுதும்போதே அவற்றைத் தமிழ் எழுத்துகளாக மாற்றி உள்ளிடும் முறையை இந்த விசைமுகமே முதல் முதலில் அறிமுகம் செய்தது. இதற்குமுன் தமிழ் ஆவணங்களைத் தட்டெழுதுவதாக இருந்தால், முதலில் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதி, அந்த ஆவணத்தை ஒரு கோப்பில் சேமித்து, அதன்பின் மற்றொரு செயலியின் வழி அந்தக் கோப்பில் உள்ள எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக மாற்றவேண்டி இருந்தது. முரசு அஞ்சல் அறிமுகப் படுத்திய ‘அஞ்சல்’ விசைமுகம் வந்தப் பிறகே இதுபோன்று நேரடியாக உள்ளிடும் செயலிகளை மற்றவரும் உருவாக்கினர்.

கூகுள் நிறுவனம் உருவாக்கும் உள்ளிடு முறைகளும் முரசு அஞ்சல் அறிமுகப் படுத்தி புழக்கத்திற்கு வந்த அமைப்பையே கொண்டுள்ளது! ஆப்பிள் நிருவனத்தின் மெக்கிண்டாஷ் கணினியிலும், ஐபோன் ஐபேட் கருவிகளிலும், எச் டி சி நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கு, ‘அஞ்சல்’ எனும் இயற்பெயரையே வைத்துள்ளனர். மற்றவர் உருவாக்கிய செயலிகளில் இந்த அமைப்பின் பெயர் வெவேறாகத் தரப்பட்டிருந்தாலும், ‘அஞ்சல்’ எனும் பெயரே பலரின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ் எழுத்துக்களின் ஒலியமைப்பிற்கேற்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழில் தட்டெழுதுவதே ‘அஞ்சல்’ விசையமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு. இவற்றில் தமிழுக்கென சில சிறப்பு அம்சங்கள் உண்டு. 1993ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்பட்டுத்தப்பட்ட விசையமைப்பின் பட்டியலையும், 2015ஆம் ஆண்டு வெளிவந்த செல்லினத்தின் நான்காம் பதிப்பிலும், முரசு அஞ்சலின் முதல் நிலைப் பதிப்பிலும் சேர்க்கப்பட்ட புதிய வசதிகளையும் கீழே காணலாம்.

ஏற்கனவே உள்ள அஞ்சல் விசையமைப்பில் நன்கு தேர்ச்சி பெற்ற பயனர்கள் எந்தவிதத் தங்குதடையுமின்றி தொடர்ந்து அதே அமைப்பைக் கொண்டு எழுதிவரலாம். இருந்தாலும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள் உங்கள் பயன்பாட்டினை மேலும் எளிமைப் படுத்தும். குறிப்பாக மெய்யெழுத்தின் மேல் சேர்க்கப்படும் உயிர்க் குறியீடுகளை உடனுக்குடன் மாற்றும் வசதி பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிலர், இந்தப் புதிய வசதிகள் அவர்களை அதிகமாகத் தமிழில் எழுதத் தூண்டுகின்றன என்று மகிழ்வுடன் கூறியிருக்கின்றனர்.

முதல் அஞ்சல் விசையமைப்பு (1993)

உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகள்
a க் k
aa or A ச் c or s
i ட் d
ii or I த் t
u ப் p
uu or U ற் R
e
ee or E ய் y
ai ர் r
o ல் l
oo or O வ் v
au ழ் z
q ள் L
கிரந்தம்
ஹ் h ங் ng
ஸ் S ஞ் nj
ஜ் j ண் N
ஷ் sh ந் w or n-
க்ஷ் x ம் m
ஶ்ரீ sri ன் n or W

குறிப்பு: மேல் வழக்கு ‘W’ எழுத்தை தமிழின் ‘ன்’ எழுத்துக்காகப் பயன்படுத்தும் முறை புதிய அஞ்சல் விசையமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது (மார்ச்சு 2015)

1.  உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகளைப் பெற, முதலில் மெய்யெழுத்தைத் தட்டி பிறகு உயிர் எழுத்தைத் தட்ட வேண்டும்.
எ.கா:

விசைகள் விளைவு
mozi மொழி
anbu அன்பு

2. நெடில் எழுத்துகள்

அதே உயிர் எழுத்தை இருமுறைத் தட்டினால் நேடில் கிடைக்கும்.
எ. கா:

விசைகள் விளைவு
yaakaavaaraayinum யாகாவாராயினும்
yAkAvArAyinum யாகாவாராயினும்

3. ‘ன்ற்’ எனும் தொடரைக் கொண்டச் சொற்கள்

‘ndr’ என எழுதினால் ‘ன்ற்’ கிடைக்கும். அதன்பின் உயிர் எழுத்தைத் தட்டினால், ‘ற்’ உயிமெய் எழுத்தாக மாறும்.
எ. கா:

விசைகள் விளைவு
mandram மன்றம்
kandru கன்று
toondri தோன்றி

4. ‘ற்ற்’ எனும் தொடரைக் கொண்டச் சொற்கள்

‘tr’ என எழுதினால் ‘ற்ற்’ கிடைக்கும். அதன்பின் உயிர் எழுத்தைத் தட்டினால், ‘ற்’ உயிமெய் எழுத்தாக மாறும்.
எ.கா:

விசைகள் விழைவு
patru பற்று
pootri போற்றி
petraal பெற்றால்

5. ‘ண்ட்’ எனும் தொடரைக் கொண்டச் சொற்கள்

‘nd’ என எழுதினால் ‘ண்ட்’ கிடைக்கும். அதன்பின் உயிர் எழுத்தைத் தட்டினால், ‘ட்’ உயிமெய் எழுத்தாக மாறும்.
எ.கா:

விசைகள் விழைவு
mandapam மண்டபம்
kandu கண்டு
veendaam வேண்டாம்

6. ‘ந்த்’ எனும் தொடரைக் கொண்டச் சொற்கள்

‘nt’ என எழுதினால் ‘ந்த்’ கிடைக்கும். அதன்பின் உயிர் எழுத்தைத் தட்டினால், ‘த்’ உயிமெய் எழுத்தாக மாறும்.
எ.கா:

விசைகள் விழைவு
sontam சொந்தம்
anti அந்தி
vantu வந்து

7. ‘ஞ்ச்’ எனும் தொடரைக் கொண்டச் சொற்கள்

‘njj’ என எழுதினால் ‘ஞ்ச்’ கிடைக்கும். அதன்பின் உயிர் எழுத்தைத் தட்டினால், ‘ச்’ உயிமெய் எழுத்தாக மாறும்.
எ.கா:

விசைகள் விழைவு
manjjaL மஞ்சள்
tanjjam தஞ்சம்
konjji கொஞ்சி

8. ‘ந’ எழுத்தைக் கொண்டுத் தொடரும் சொற்கள்

‘வெளி’ (space), இடுகை (enter) அல்லது தத்து (tab – கணினிகளில் உள்ள விசை) விசைகளுக்குப்பின் ‘n’ தட்டினால் அது தானாகவே ‘ந்’ எழுத்தைக் கொடுக்கும்.
எ.கா:

விசைகள் விழைவு
anta naaL அந்த நாள்

2015ஆம் ஆண்டு மார்ச்சில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய விசையமைப்புகள்

9. உயிர் சுழற்சி

ஓர் உயிர் எழுத்தைத் தட்டியபின் மற்றுமோர் உயிரெழுத்தைத் தட்டினால், முந்தைய உயிரெழுத்து நீக்கப்பட்டு இரண்டாவது தட்டப்பட்ட உயிரெழுத்தே நிலைநாட்டப்படும். மூன்றாவதாக மற்றுமோர் உயிர் எழுத்தைத் தட்டினால், இரண்டாவது நீக்கப்பட்டு மூன்றாவது நிலைநாட்டப் படும். இதுபோலவே அடுத்தடுத்து உயிர் எழுத்துக்களைத் தட்டிக்கொண்டே முன்பு தட்டிய உயிர் எழுத்தை மாற்றலாம். இந்த வசதியைத்தான் ‘உயிர் சுழற்சி’ என்கின்றோம். இது உயிரெழுத்துக்களுக்கு மட்டுமின்றி உயிர்க் குறியீடுகளுக்கும் பொருந்தும்.

இந்த வசதி இருப்பதற்கு முன், தவறாக ஓர் உயிரெழுத்தைத் தட்டிவிட்டால், உயிருக்கு முன் அடிக்கப்பட்ட மெய்யெழுத்து வரை நீக்கிவிட்டு மறுபடியும் தட்ட வேண்டும். இந்த புதிய வசதி எந்தவித நீக்கலும் இல்லாமல் உயிரெழுத்துக்களையும் உயிர்க் குறியீடுகளையும் மாற்ற உதவுகிறது.

எ.கா:  ‘கி; எனும் எழுத்தை எழுதவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ‘ki’ எனத் தட்டவேண்டும். மாறாக ‘ko’ என்று தவறாகத் தட்டிவிட்டால், ‘கி’ என்பதற்கு பதிலாக ‘கொ’ வந்துவிடும். இதை சரிபடுத்துவதற்கு முன்பெல்லாம் ‘நீக்கம்’ (delete) விசையை இருமுறைத் தட்டி, ‘கொ’-வை முற்றாக நீக்கிவிட்டு, மறுபடியும் ‘ki’ தட்ட வேண்டும். ஆனால் இந்தப் புதிய விசையமைப்பில் எந்த எழுத்தையும் நீக்க வேண்டியதில்லை. ‘ko’ எனத் தவறுதலாகத் தட்டியபின், ‘i’ தட்டினாலே ‘கோ’ எழுத்து ‘கி’ எழுத்தாக மாறிவிடும்.

விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் கீழே உள்ள பட்டியல் காட்டுகிறது:

படிநிலை விசைகள் விளைவு
1 k க்
2 o கொ
3 i கி

இவ்வாறு மேலும் பல எழுத்துக்களை தவறாகத் தட்டி அதன்பின் திருத்தம் செய்து பாருங்கள். அஞ்சல் விசையமைப்பக் கொண்டு எப்படி எளிதாகப் பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம் என்பது தெளிவாகும்.

10. ‘f’ விசைக் கொண்டு தானியக்கத்தைத் தவிர்த்தல்

அஞ்சல் விசையமைப்பில் பல தானியக்க மாறுதல்கள் ஏற்படுவதை இதுவரைக் கொண்டோம். ‘tr’ எனத் தட்டினால் ‘த்ர்’ என வராமல் ‘ற்ற்’ என வருவதும் ‘nd’ எனத் தட்டினால் ‘ந்ட்’ அல்லது ‘ன்ட்’ என வராமல் ‘ண்ட்’ என வருவதையும் பார்த்தோம். இப்படிப் பல ‘தானாகவே மாறும்’ தன்மையைத்தான் தானியக்க மாறுதல்கள் என்கிறோம்.

இந்த மாறுதல்கள் தேவையில்லை எனில்  ‘f’ விசையைக் கொண்டு அதனைத் தவிர்க்கலாம்.  பேச்சுத் தமிழ் வழக்கில் உள்ள சொற்களை எழுத இது மிகவும் பயன்படும். எடுத்துக் காட்டாக ‘nd’ எனத் தட்டும்போது ‘ண்ட்’ எனும் தானியக்க மாறுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால், ‘n’-க்கும் ‘d’-க்கும் இடையில் ‘f’ விசையைத் தட்டலாம். எனவே “ஏன்’டா” எனும் பேச்சு வழக்குச் சொல்லை, ஒற்றை மேற்கோள் குறியில்லாமல் எழுதவேண்டும் என்றால் கிழே உள்ள பட்டியல் காட்டுவதுபோல் எழுதலாம். இதே பட்டியலில், ஒரே உயிர் எழுத்தை உடனுக்குடன் எப்படி எழுதுவது என்பதையும் காணலாம்.

Keystrokes Output
aa
afa அஅ
eendaa ஏண்டா
eenfdaa ஏன்டா

பேச்சு வழக்கு சொற்கள் மட்டும் அல்லாமல், ‘பெட்ரோல்’, ‘கன்ட்ரோல்’ போன்ற அயல் மொழிச் சொற்களை அப்படியே தமிழில் எழுதும்போதும், ‘வன்தட்டு’ போன்ற புதிய சொற்களை எழுதும்போதும் ‘ன்த’, ‘ட்ர்’ போன்ற தொடர்காள் வரும். இதுபோன்றச் சொற்களுக்கெல்லாம் இந்தத் தானியக்கத்தைத் தவிர்க்கும் ‘f’ வசதி பயன்படும். பேச்சுவழக்குச் சொற்கள் செல்லினத்தின் பதிந்துரைப் பட்டியலில் தோன்றா. எனவே இந்த வசதி அப்படிப்பட்டச் சொற்களை எளிதாகத் தட்டச்சிட உதவும்.  பரிந்துரைகளாகத் தோன்றும் சொற்பட்டியலில் நீங்களும் உங்கள் சொற்களைச் சேர்த்துக் கொள்ளலாம். எப்படி? இந்தப் பதிவைப் பாருங்கள்.

Did you like this? Share it: